Thursday, December 15, 2011

வாகை மரம் வளர்ப்பீர்

வாகை மரம்… மன்னர்கள் காலத்தில், வெற்றியின் அடையாளமாக இம்மரத்தின் மலர்களைத்தான் சூடுவார்கள். அதனால்தான் ‘வெற்றி வாகை’ என்ற சொல்லே உருவானது. வெற்றியின் அடையாளமான இம்மரம், விவசாயிகளையும் வருமானத்தில் வெற்றிபெற வைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

ஆடு, மாடுகளுக்குத் தீவனம், நிலத்துக்குத் தழையுரம், வீட்டுக்குத் தேவையான கதவு, ஜன்னல் போன்ற பலன்களோடு… மண்ணரிப்பைத் தடுக்கவும் பயன்படுகிறது இந்த வாகை. தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வளரும் தன்மையுடைய இந்த மரம், நமது தோட்டத்தில் இருந்தால்… அது, வங்கியில் போட்டு வைத்த வைப்புநிதிக்கு ஒப்பானது.

முருங்கை இலையைப் போன்ற இலைகளுடன், சீகைக்காயைப் போன்ற காய்களைக் கொண்டிருக்கும் இந்த மரம், மருத்துவத்திலும் முக்கியப் பங்காற்றுகிறது. வாகை மரத்தின் பட்டையை நிழலில் உலர்த்தி பொடித்து, பாலில் கலந்து குடித்து வந்தால்… பசி எடுக்காத பிரச்னை தீரும், வாய்ப்புண் குணமாகும். இதன் பூக்களை நீர் விட்டு பாதியாகச் சுண்டும் அளவுக்குக் காய்ச்சிக் குடித்தால், வாதநோய் குணமாகும். விஷத்தையும் முறிக்கும்.

மானாவாரிக்கு ஏற்றது !

வாகை மரங்கள் வணிகரீதியாகவும் அதிகப் பலன் தருபவை. மானாவாரி நிலங்களில் வளர்க்க மிகவும் ஏற்றவை. தனிப்பயிராக வளர்க்காவிட்டாலும், வேலியோரங்கள், காட்டோடைகள், காலியாக உள்ள இடங்களில் ஒன்றிரண்டு மரங்களை நட்டு வைத்தாலே… 10 ஆண்டுகளில் நல்ல வருவாய் கிடைக்கும். அத்துடன் ஒரு மரம், ஓர் எருமையின் வருடாந்திரத் தீவனத் தேவையில் 20% அளவையும், ஒரு பசுவின் தீவனத் தேவையில் 30% அளவையும் தீர்க்கவல்லது. இதன் இலையில் உள்ள புரதம், கால்சியம், பாஸ்பரஸ் ஆகிய சத்துக்கள் கால்நடைகளின் வளர்ச்சிக்கு உதவுகின்றன. உலர்ந்த வாகை இலையில் 2.8% நைட்ரஜன் உள்ளதால், இதைச் சிறந்த தழையுரமாகவும் பயன்படுத்தலாம்.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த வாகையை வளர்க்கும் முறைகளைப் பற்றி பார்ப்போமா..?

அனைத்து மண்ணிலும் வளரும் !

வாகை அனைத்து மண்ணிலும் சிறப்பாக வளரும். மண்கண்டம் குறைவாக உள்ள நிலங்கள், உவர், அழல் நிலங்கள், உப்புக்காற்று உள்ள கடற்கரை ஓரங்கள், சுண்ணாம்புச் சத்து நிறைந்த நிலம்… என அனைத்து வகை நிலங்களிலும் வளரும். தவிர, 0.11% உப்பும், கார, அமில நிலை 8.7 உள்ள நிலங்களிலும்கூட இது வளரும். நிலங்களில் இந்த அளவுக்கு மேல் களர் தன்மை இருந்தாலும், நடவு செய்யும் முன் குழியில் ஒரு கிலோ ஜிப்சம், ஒரு கிலோ தொழுவுரத்தை இட்டு, நடவு செய்தால் போதும்.
ஒன்பது அடி இடைவெளி !

நடவு செய்யும் நிலத்தை நன்றாக உழவு செய்து ஒரு கன அடி குழியெடுத்து, ஒவ்வொரு குழியிலும் மண்புழு உரம்-1 கிலோ, வேர் வளர்ச்சி உட்பூசணம் (வேம்)-30 கிராம், தொழுவுரம்-1 கிலோ, அசோஸ்பைரில்லம், பாஸ்போ-பாக்டீரியா தலா-15 கிராம் ஆகியவற்றை போட்டு, 9 அடிக்கு 9 அடி இடைவெளியில் கன்றுகளை நடவு செய்ய வேண்டும். இப்படி நடவு செய்யும்போது ஏக்கருக்கு 540 கன்றுகள் தேவைப்படும்.

நடவு செய்த 6-ம் மாதம் கன்றைச் சுற்றிக் கொத்தி விட்டு, தொழுவுரம், ஆட்டு எரு இரண்டையும் தூள் செய்து 1 கிலோ அளவுக்கு குழியைச் சுற்றி தூவி விட்டால்… விரைவாக வளரும். ஆடு, மாடுகளுக்கு எட்டாத உயரத்துக்கு மரம் வளரும் வரை கவனமாகப் பாதுகாக்க வேண்டும்.
ஒரு வரிசையைக் கழிக்க வேண்டும் !

சாதாரண நிலங்களில் ஆரம்ப காலங்களில் ஆண்டுக்கு ஒரு மீட்டர் உயரம் வரை வளரும். நல்ல வளமான நிலங்களில் ஒன்றரை மீட்டர் உயரம் வரை வளரும். நடவு செய்த ஐந்து ஆண்டுகள் வரை வாகையில் கிடைக்கும் தழைகளைக் கால்நடைகளுக்கும், உரத்துக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம், என்பதால்தான் 9 அடி இடைவெளியில் நடவு செய்கிறோம். 5 ஆண்டு வயதுக்கு மேல் வணிகரீதியாகப் பலன் பெற, மரத்தைப் பருக்க வைக்க வேண்டும்.
இதற்காக ஒரு வரிசை விட்டு ஒரு வரிசையில் உள்ள மரங்களை வெட்டி விட வேண்டும். வெட்டிய மரங்களை விறகுக்கு விற்பதன் மூலம் குறிப்பிட்ட அளவு தொகை வருவாயாகக் கிடைக்கும். மரங்களைக் கழித்த பிறகு, ஒரு ஏக்கரில் 270 மரங்கள் இருக்கும்.

நடவு செய்த 10-ம் வருடத்தில் மரங்களை அறுவடை செய்யலாம். நன்கு வளர்ச்சியடைந்த ஒரு மரம் 80 சென்டி மீட்டர் பருமனும் 18 மீட்டர் உயரமும் கொண்டிருக்கும். ’10 ஆண்டுகள் வளர்ந்த மரம் தற்போது சராசரியாக 10 ஆயிரம் ரூபாய்க்கு விலை போகிறது’ என வியாபாரிகள் சொல்கிறார்கள். சராசரியாக ஒரு மரம் 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானாலும்… ஒரு ஏக்கரில் இருக்கும் 270 மரங்கள் மூலமாக 27 லட்ச ரூபாய் வருமானமாகக் கிடைக்க வாய்ப்புள்ளது.

வேம்பை விட வேகமா வளருது !

வாகையை தனிப்பயிராக சாகுபடி செய்திருக்கிறார் மதுரை மாவட்டம், டி. குன்னத்தூர் சுபாஷ். அவருடைய அனுபவம்… உங்களுக்கு உதவியாக இருக்கும். அவருக்குக் கொஞ்சம் காதுகொடுங்களேன்… ”மூணு ஏக்கர்ல வாகையை சாகுபடி செஞ்சுருக்கேன். 20 அடிக்கு 20 அடி இடைவெளியில நடவு செஞ்சு, நாலரை வருஷமாச்சு. ஏக்கருக்கு 110 மரம் இருக்கு. நடவு செஞ்ச ஆறு மாசம் வரைக்கும்தான் தண்ணி கொடுத்தோம். அதுக்குப் பிறகு பாசனம் செய்யல. மானாவாரியாகவே வளர்ந்துடுச்சு.

வாகை நடவு செஞ்சப்பவே… பக்கத்துல இருக்குற இடத்துல வேம்பு, புளி ரெண்டையும் நடவு செஞ்சேன். என்னோட அனுபவத்துல வேம்பை விட ரெண்டு மடங்கு வேகமா வளருது வாகை. 10 வருஷத்துல இதை வெட்டலாம்னு சொல்றாங்க. இன்னிக்கு நிலவரத்துக்கு பத்து வருஷ மரம் 10 ஆயிரம் ரூபாய்ல இருந்து 15 ஆயிரம் ரூபாய் வரைக்கும் விலை போகுது. குறைஞ்ச பட்சம் 10 ஆயிரம்னு வெச்சுக்கிட்டாலும் ஏக்கருக்கு 11 லட்ச ரூபா கிடைக்கும்னு எதிர்பார்க்கிறேன்.”

இனி உங்கள் வசதி வாய்ப்பை யோசித்து, வாகையை நடவு செய்யுங்கள்… வாகை சூடுங்கள்!
                                     தொடர்புக்கு சுபாஷ்,
                                     செல்போன்: 98427-52825.

வாகையில் இரண்டு வகை !

அல்பிஸியா லெபெக் (Albizia lebbeck) என்கிற தாவரவியல் பெயரில் அழைக்கப்படும் வாகையின் தாயகம்… தெற்காசியா. வாகை, தூங்குமூஞ்சி வாகை என இரண்டு வகைகள் உண்டு. இதில் தூங்குமூஞ்சி வாகை, அவ்வளவாக வணிகப் பயன்பாட்டுக்கு உதவாது. நிழலுக்கு மட்டும்தான் பயன்படும். எனவே, வணிகரீதியாகப் பயன்பெற வாகையையும்… சாலையோரங்கள், அலுவலகங்கள் மற்றும் பள்ளி வளாகங்களில் நிழல் கொடுக்க, தூங்குமூஞ்சி வாகையையும் நடவு செய்யலாம்.

பிரசுரம் காப்புரிமை
இரா.ராஜசேகரன் வனத்துறை உதவி வனப்பாதுகாவலர்.

Tuesday, December 13, 2011

வருங்கால வளர்ப்பு நிதி ...வாரிக் கொடுக்கும் தேக்கு...!


தேக்கு மரம் எல்லா பூமியிலும் வளரும். வறட்சியைத் தாங்கி வளரக்கூடியது. அதே சமயம் தண்ணீர் அதிகம் பாய்ச்சினால் மிக நன்றாக வளரும். ஆனால் தணீர் தேங்கி நிற்கும் இடத்தில் வளராது.தேக்கு மரம் பலமுள்ள பலகையை மட்டுமல்ல, பலமான வருமானத்தையும் கொடுக்கும் மரமாகும்.

பராமரிப்புக்காக அதிகம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. ஆடு, மாடு சாப்பிடாது... பூச்சி, நோய் தாக்குதலால் பாதிப்பு இருக்காது... முறையாக பாசனம் மட்டும் கொடுத்தால் போதும்! 6 அடி உயரத்துக்கு மேல் வளர்ந்துவிட்டால், தேக்கு மரம் தன்னைத் தானே பராமரித்துக் கொள்ளும்.

கப்பல், படகு, மரச் சாமான்கள், கதவு, ஜன்னல் மற்றும் அலங்காரப் பொருட்கள் தயாரிப்பில் பயன்படுவதால், சர்வதேச அளவில் பெரும் தேவை இருக்கிறது. தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இது நன்றாக வளரும்.

ஆடி மாதத்திலிருந்து கார்த்திகை மாதம் வரை நடுவது சிறந்த காலமாகும். மழைக்காலமாக இருப்பதால் நன்கு வளரும். பின்பு வெய்யில் காலத்தில் 10-15 நாட்களுக்கு ஒரு தண்ணீர் பாய்ச்சினால்கூடப் போதுமானது.

தேக்குச் சாகுபடியில் தேக்கு விதையை மேட்டுப் பாத்தி அமைத்து அதில் விதையைத் தெளித்து தினமும் 2 முறை தண்ணீர் தெளித்து வளர்க்க வேண்டும். 8 மாதம் வளர்ந்த பின்புதான் அதை வேருடன் பிடுங்கி மேல் வெட்டிவிட்டு அடிப்பகுதியை (வேர்ப்பகுதி) தேக்கு மரம் பயிர் செய்யும் பூமியில் நடவேண்டும். இதைத்தான் தேக்கு பதியங்கள் என்று சொல்லுகிறோம்.இந்தத் தேக்கு நாற்றுப் பதியங்களை நேரடியாக பூமியில் நடலாம். அல்லது அதையே பாலிதீன் பையில் போட்டு வளர்த்த பின்பும் நடலாம்.

தேக்கு, நல்லவடிகால் வசதியுள்ள ஆற்று வண்டல் மண் மற்றும் மணற்பாங்கான செம்மண் நிலங்களில் நன்றாக வளரும். நிலத்தை நன்றாக உழவு செய்து கொள்ள வேண்டும். மழைக் காலத்துக்கு முன்பாக 15 அடிக்கு 15 அடி இடைவெளியில் இரண்டு அடி நீள, அகல, ஆழத்தில் குழியெடுத்து, நடவு செய்ய வேண்டும். ஒவ்வொரு குழியிலும் முக்கால் பாகத்துக்கு மட்கிய தொழுவுரத்துடன் வண்டல் மண்ணைக் கலந்து இட்டு, மீதமுள்ள குழியை மேல் மண்ணைக் கொண்டு நிரப்ப வேண்டும்.மூன்று மாதம் வரை, வாரம் ஒரு முறையும், அதன் பிறகு பதினைந்து நாட்களுக்கு ஒரு முறையும் நீர்ப்பாய்ச்சுவது நல்லது. சொட்டுநீர்ப் பாசனம் அமைத்தால், நல்ல மகசூல் கிடைக்கும்.

தேக்கு மரங்கள் தரமானதாகவும், பக்கக் கிளைகள் இல்லாததாகவும் வளர்ந்தால்தான் அதிக வருமானம் கிடைக்கும்.குறைபாடு இல்லாத, வளைவுகள் இல்லாத ஒரே நேர்க்கோட்டுல வளர்ந்திருக்கற மரங்களுக்குத்தான் மவுசு அதிகம். அப்படி வளர்க்கறதுக்கு அடிப் படையான சில விஷயங்களைத் தெரிஞ்சு வெச்சிக் கணும். தென்னந்தோப்புல தேக்கு போட்டா தென்னைக்கும் தேக்குக்கும் நடுவுல 10 அடி இடைவெளி இருக்கணும். ரெண்டு தேக்குக்கு நடுவுல 15 அடி இடைவெளி அவசியம். பக்கக்கிளைகளை தரைமட்டத்திலிருந்து மரத்தின் உயரத்தில் மூன்றில் இரு பங்கு உயரத்தில் மட்டுமே கழிக்க வேண்டும்.தேக்கு மரம் 100 - 120 ஆண்டுகள் உயிர்வாளும்.

ஒரு ஏக்கரில் 250 தேக்கு மரங்களை வளர்த்தெடுத்தால், 20 அல்லது 25 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு மரம் 30,000ல் லிருந்து 40,000 ரூபாய் விற்கும், இது தற்போதைய விலைதான் 20 ஆண்டுக்குப்பின் அதிகமாக இருக்கும். இது செம்மண் பூமிக்குத்தான் மற்ற இடங்களில் குறைவாகத்தான் கிடைக்கும்.

குறிப்பு : தேக்குமரம் ஒரு வரிசையாகவும் வேறுவகை மரம் ஒரு வரிசையாகவும் (செஞ்சந்தனம், மகோகனி, வேங்கை, கயா,சிசு, மாஞ்சியம்) அமைத்தால் இரண்டும் நன்றகவளரும்.    

Wednesday, December 7, 2011

கவலையைப் போக்கும் கடம்பு!



இந்தியாவில் உள்ள தொன்மையான மரங்களில் முக்கியமானது... கடம்பு. இந்தியாவின் ஒற்றுமைக்கே இது ஓர் உதாரணமாகத் திகழ்கிறது என்றுகூட சொல்லலாம். ஆம்... தமிழ், இந்தி, சமஸ்கிருதம் என இந்தியாவில் பேசப்படும் பல்வேறு மொழிகளிலும் 'கடம்பு’ என்றே இது அழைக்கப்படுகிறது.

1977-ம் ஆண்டு இந்திய அரசால், அஞ்சல் தலையில் பொறிக்கப்பட்ட பெருமையுடையது இம்மரம். இதன் பலகையைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட கட்டிலில் படுத்தால்... அலுப்பு நீங்கி, சுகமான தூக்கம் வரும். அதனால்தான் நம் முன்னோர்கள், 'உடம்பை முறித்து கடம்பில் போடு’ என்று ஒரு சொலவடையைச் சொல்லி வைத்திருக்கிறார்கள்.

பறவைகளுக்கு பழங்களுக்காகவும், மனிதர்களுக்கு மருந்துக்காகவும் பயன்படுவதோடு, காகிதம், பென்சில், தீப்பெட்டி, தீக்குச்சி எனப் பல வகையான பொருட்களுக்கு மூலப்பொருளாகவும் பயன்படுகிறது, கடம்பு. பெரும்பாலும், ஆற்றோரங்களில் இந்த மரங்களை அதிகளவில் நட்டு வைத்தனர் நம் முன்னோர்கள்.

இந்தியாவில் இயற்கையாக வளரும் இந்த மரம், கோஸ்டாரிகா, தென்னாப்பிரிக்கா, சுரினாம், தைவான், வெனிசுலா ஆகிய நாடுகளில் தோட்டப் பயிராகவும் வளர்க்கப்படுகிறது.

இனி, கடம்ப மரத்தை வளர்க்கும் முறைகளைப் பற்றி பார்ப்போமா..?

நீர்நிலைகளை ஒட்டி வளர்க்கலாம்!

கடல் மட்டத்தில் இருந்து 300 முதல் 800 மீட்டர் உயரத்தில் 1,600 மில்லி மீட்டர் மழையளவு உள்ள பகுதிகளில் இம்மரம் நன்றாக வளரும். நல்ல வடிகால் வசதியுள்ள வண்டல் மண் நிலங்களிலும் வளரும். மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரங்களில் உள்ள நிலங்கள், கடற்கரைப் பகுதிகள் கடம்ப மரம் வளர்க்க ஏற்ற பகுதிகள். கிராமங்களில், ஏரிகளின் கரையை ஒட்டிய நிலங்களிலும், ஆற்றோரங்களிலும் இதை வளர்க்கலாம். ஆனால், வளமில்லாத, மண்ணில் காற்றோட்டம் இல்லாத நிலங்களில் இது வளராது.

ஏக்கருக்கு 400 கன்றுகள்!

கடம்ப மரக் கன்றுகளை 15 அடிக்கு 15 அடி இடைவெளியில் குழியெடுத்து நடவு செய்ய வேண்டும். ஏக்கருக்கு 200 செடிகள் வரை தேவைப்படும். பென்சில் தயாரிப்புக்காக நடுவதாக இருந்தால்... 10 அடி இடைவெளியே போதுமானது. இப்படி நடவு செய்யும் போது, ஏக்கருக்கு 445 கன்றுகள் வரை தேவைப்படும். முதல் ஆண்டில் வளர்ச்சி மெதுவாகத்தான் இருக்கும். இரண்டாம் ஆண்டில் இருந்து வளர்ச்சி துரிதமாகும். 8-ம் ஆண்டுக்கு மேல் வளர்ச்சி வேகம் மட்டுப்படும்.

எட்டு முதல் பதினைந்து ஆண்டுகளில் தேவைக்கேற்ற வளர்ச்சி பெற்று விடும். அதன் பிறகு மரங்களை வெட்டலாம். வெட்டிய பிறகு வேகமாக துளிர்க்கும் என்பதால், தோட்டப் பகுதியில் சீரற்ற வளர்ச்சி கொண்ட மரங்களை தரையை ஒட்டி ஒரே வீச்சில் வெட்டுவதன் மூலம் சீரான, நேரான துரித வளர்ச்சி கொண்ட மறு துளிர்ப்பை உருவாக்கலாம். கடம்பின் இந்த குணத்தால், தொடர்ந்து மறுதாம்பு மூலம் மகசூல் எடுக்கலாம்.

10 ஆண்டு வயதுள்ள மரத்தில் இருந்து, குறைந்தபட்சம் 10 கன அடி மரம் கிடைக்க வாய்ப்புள்ளது. பென்சில் தொழிற்சாலைக்கு விற்பனை செய்யும் போது, கன அடிக்கு

250 ரூபாய் என வைத்துக் கொண்டால்கூட ஒரு மரத்துக்கு சுமார் 2,500 ரூபாய் விலை கிடைக்கும். இதன்படி ஒரு ஏக்கரில் உள்ள 400 மரங்கள் மூலமாக 10 லட்ச ரூபாய் வரை வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது.

கடம்ப மரத்தில் வைரப் பகுதியெல்லாம் கிடையாது. மொத்த மரமும் மஞ்சள் சாயல் கொண்ட, வெண்மை நிறத்தில் இருக்கும். இதில் அறுவை வேலைகள் செய்வது எளிதாக இருக்கும். அறுக்கப்பட்ட மரங்கள் சீரான மேற்பரப்பைக் கொண்டதாகவும், துளையிட எளிதாகவும் உள்ளதால், பென்சில் தயாரிப்புக்கு ஏற்ற மரமாக உள்ளது.

இதன் காரணமாகவே... நடராஜ் பென்சில் நிறுவனத்தினர் கோயம்புத்தூர் அருகே 200 ஏக்கரில் கடம்ப மரத்தை சாகுபடி செய்கிறார்கள். அங்கு விளையும் மரங்களைக் கொண்டு பல்லடத்தில் உள்ள அவர்களது தொழிற்சாலையில் பென்சில் தயாரிக்கிறார்கள்.

தேவை அதிகமாக இருப்பதால், கடம்ப மரத்துக்கான மவுசு கூடிக் கொண்டேதான் இருக்கிறது. இதை வைத்து, லாபத்தை அறுவடை செய்வது உங்கள் கைகளில் இருக்கிறது!

நோய்க்கு மருந்தாகும் கடம்பு!

கடம்பின் இலைகள், கால்நடைகளுக்குத் தீவனமாக பயன்படுகின்றன. இதன் இலை மற்றும் பட்டைகளில் இருந்து காடமைன், ஐசோகாடமைன், கடம்பைன் போன்ற அல்கலாய்டுகள் தயாரிக்கப்படுகின்றன. இவை மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கான மருந்து மற்றும் விஷ முறிவு மருந்துகளில் பயன்படுத்தப்படுகின்றன. இலைகளில் இருந்து தயாரிக்கப்படும் குளோரோஜெனிக் அமிலத்தில் ஈரல் பாதுகாப்புக்கான மருந்து இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இதன் இலை... வாய் மற்றும் தொண்டைப் புண்ணுக்கு மருந்தாகவும்; பழங்கள்... வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள் மற்றும் காய்ச்சலுக்கு மருந்தாகவும்; விதைகள்... விஷக்கடி, நீர்க்கட்டு போன்றவற்றுக்கு மருந்தாகவும்; பட்டை... உடல் பலவீனம், சூடு நோய், தசைப் பிடிப்பு, கண் சம்பந்தப்பட்ட நோய்கள் போன்றவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுகின்றன.

வேர், பட்டையில் இருந்து இயற்கைச் சாயம்; பூக்களைக் காய்ச்சி எடுக்கும் தைலத்தில் இருந்து வாசனைத் திரவியம் என பல பயன்பாடுகள் உள்ளன. இம்மரத்தின் பூக்கள் ஆரஞ்சு வண்ணத்தில் பூத்து அதிக நறுமணம் வீசுவதால்... தேனீக்களால் அதிகளவில் கவரப்படுகின்றன. அதனால், தேனி வளர்ப்புக்கு உதவுவதோடு மற்றப் பயிர்களின் மகசூலும் கூடுகிறது. இம்மரம் அதிக அளவில் இலைகளை மண்ணில் கொட்டுவதால், அங்கக கரிம வளத்தைக் கூட்ட உதவுகிறது.

பிரசுரம் காப்புரிமை
இரா.ராஜசேகரன் வனத்துறை உதவி வனப்பாதுகாவலர்.



Sunday, December 4, 2011

செழிப்பான வருமானம் தரும் செஞ்சந்தனம் ! (செம்மரம் )

சுனாமி போன்ற கடல்சீற்றங்களைத் தடுக்கும் அலையாத்தி மரங்களைப் போல, அணுக்கதிர் வீச்சைத் தடுக்கும் தன்மை கொண்ட மரம் செஞ்சந்தன மரம். இந்த அணுயுகத்துக்கு ஏற்ற மரம் என்றுகூட செஞ்சந்தன மரத்தைச் சொல்லலாம். பல அணு உலைக்கூடங்களில் அணுக்கதிர்களைத் தடுக்கும் அரணாக இதைத்தான் பயன்படுத்துகிறார்கள்.

ஜப்பான் நாட்டில் எக்ஸ்ரே, லேசர்... போன்ற வீரிய கதிர்வீச்சு சிகிச்சைகளைச் செய்யும் மருத்துவர்கள், சிகிச்சையின்போது கதிர்வீச்சைத் தடுப்பதற்காக, சிறிதாக வெட்டப்பட்ட செஞ்சந்தன மரத்துண்டை தங்கள் சட்டைப் பையில் வைத்துக் கொள்கிறார்களாம். ஒலி அலைகளைத் தடுக்கும் திறன் கொண்ட இம்மரங்கள், வெப்பத்தையும் அதிக அளவில் கடத்தாது. இவ்வளவு சிறப்புகள் இம்மரங்களுக்கு இருப்பதால், இவற்றின் சந்தை வாய்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

இந்த மரத்தை வணிகரீதியாக வளர்ப்பதைப் பற்றி பார்ப்போமா...

சரளை மற்றும் செம்மண் கலந்த மண் வகைகளில் இம்மரம் சிறப்பாக வளரும். படுகை நிலத்தில்கூட நன்றாக வளரும். ஆனால், நல்ல வடிகால் வசதி இருக்க வேண்டியது அவசியம். ஆழமான மண்கண்டம் உள்ள மானாவாரி செம்மண் நிலங்களிலும் வளர்க்கலாம்.

கட்டாயம் செய்யணும் கவாத்து!

12 அடி இடைவெளியில் குழி எடுத்து, வழக்கமாக மரக்கன்றுகளை நடவு செய்வதுப் போல இயற்கை உயிர் உரங்களைப் போட்டு நடவு செய்ய வேண்டும். மெதுவாகத்தான் இந்த செடிகள் வளரும். நன்கு வளர்ந்து வராத செடிகளை சில நாட்களிலேயே கண்டறிந்து அகற்றிவிட வேண்டும். மானாவாரி, இறவை என இரண்டு முறைகளிலும் இதைப் பயிரிடலாம். இறவையில் தண்ணீர் இருப்பதைப் பொறுத்து பாசனம் செய்து கொள்ளலாம். அவ்வப்போது செடிகளுக்கு சூரியஒளி நன்கு கிடைக்குமாறு கவாத்து செய்து வர வேண்டும். மழைக்காலத்துக்கு முன்பாக செடிகளைச் சுற்றிலும் மண்ணைக் கொத்திவிட வேண்டும். இம்மரங்களை பழத்தோட்டங்களில் காற்றுத் தடுப்புக்காகவும் நடவு செய்யலாம். பல இடங்களில் எலுமிச்சைத் தோட்டங்களில் செஞ்சந்தன மரங்களை காற்றுத் தடுப்பு அரணாகப் பயன்படுத்துகிறார்கள்.

ஒரு மரம் ஒரு லட்ச ரூபாய்!

இந்த மரத்தின் வைரம் பாய்ந்த பகுதி கருஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். 20 ஆண்டுகள் ஆன ஒரு மரம், வளர்ச்சியை மற்றும் அதன் தரத்தைப் பொறுத்து அதிகபட்சம் 10 லட்சம் ரூபாய் வரை விலை போகும். ஒரு ஏக்கரில் 400 மரங்கள் நடவு செய்து... அதில் 100 மரங்கள் மட்டுமே நன்றாக விளைகின்றன என வைத்துக் கொள்வோம். ஒரு மரம் குறைந்தபட்சம் 1 லட்ச ரூபாய்க்கு விற்றாலே... ஒரு கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும். கடந்த 2010-ம் வருடம் நவம்பர் 25-ம் தேதி திருப்பத்தூர் அரசு சந்தனக்கிடங்கில் நடந்த ஏலத்தில் ஒரு டன் 'சி’ கிரேடு செஞ்சந்தன மரம், 6 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கு விலை போயிருக்கிறது.

அனுமதி தேவையில்லை!

சந்தன மரத்தைப் போல இம்மரங்களை வெட்டுவதற்கு தனி அனுமதி எல்லாம் வாங்கத் தேவையில்லை. மற்ற மரங்களைப் போலவே வெட்டி விற்று விடலாம். இந்தியாவில் ஆந்திரா மற்றும் தமிழகத்தில்தான் இந்த மரம் அதிகமாக வளர்க்கப்படுகிறது. ஜப்பான், தைவான், சீனா... போன்ற நாடுகளில் இதன் தேவை அதிகம் உள்ளதால், சந்தை எப்போதும் சரியாது என்பதை கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். சந்தனத்துக்கு இணையான மதிப்புள்ளதால், இந்த மரங்களும் அதிக அளவில் வெட்டிக் கடத்தப்படுகின்றன என்பதும் கவனத்தில் இருக்கட்டும்.

டன் ஐந்து லட்சம்!

அறுவடைக்குத் தயாரான செஞ்சந்தன மரங்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 'மரம்' தங்கசாமி அவர்களின்  தோட்டத்தில் இருக்கின்றன. அதைப் பற்றி தங்கசாமியின் மகன் கண்ணன் சொல்வதையும் கேட்போமா..! ''எங்க அப்பா 20 வருஷத்துக்கு முன்ன வீட்டைச் சுத்தி இருந்த இடத்துல எல்லாம் சந்தனம், செஞ்சந்தனம், தேக்குனு பல வகையான மரங்களைக் கலந்து நடவு செஞ்சாரு. அதுல 100 செஞ்சந்தன மரங்க இருக்கு. மரங்க நல்லா வளந்து இருக்கு.

டன் அஞ்சு லட்சம், ஆறு லட்சம்னு கேட்டுக்கிட்டு இருக்காங்க. ஆனா, நாங்க இன்னும் விக்காம வெச்சிருக்கோம். அன்னிக்கு எங்க அப்பா விளையாட்டா வெச்ச மரம் இன்னிக்கு கோடிக்கணக்கான மதிப்புள்ள மரங்களா மாறியிருக்கு!''

என்ன... செஞ்சந்தனத்தை நடவு செய்யக் கிளம்பிவிட்டீர்களா?

                                                    தொடர்புக்கு
                                 கண்ணன், அலைபேசி: 98419-79451

Thursday, December 1, 2011

ஈஷா சா‌ர்‌பி‌ல் பசுமைப் பள்ளி இயக்கம்


கோவை மாவட்ட பள்ளிக் 5கல்வித்துறை ஈஷா அறக்கட்டளையின் பசுமைக்கரங்கள் திட்டத்துடன் இணைந்து பசுமைப்பள்ளி இயக்கம் என்ற பசுமை இயக்கத்தை துவக்கி உ‌ள்ளது. இ‌ந்த இய‌க்கத்தின் துவக்க விழா கட‌ந்த 26ஆ‌ம் தே‌தி வடவள்ளியில் அமைந்துள்ள மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

விழாவில் ஈஷா யோகா மையத்தைச் சார்ந்த அருணகிரி வரவேற்க ஈஷா அறக்கட்டளையின் பசுமைக்கரங்கள் திட்டத்தைச் சேர்ந்த செல்வராஜ் பசுமைப்பள்ளி இயக்கத்தின் திட்ட விளக்கவுரை வழங்கினார். தமிழக வேளாண்துறை அமைச்சர் செ.தாமோதரன் கோவை மாவட்ட பசுமைப் பள்ளி இயக்கத்தை துவக்கி வைத்தார்.

விழாவில் கோவை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் நா.ஆனந்தி, வி.ஷிநீ., ஙி.ணிபீ., கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் தா.மலரவன், மாநகராட்சி 16வது வார்டு கவுன்சிலர் குமுதம் குப்புசாமி, மேற்கு மண்டல தலைவர் சாவித்திரி பார்த்திபன், பெருமால்சாமி தெற்கு மண்டல தலைவர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கின‌ர். ஈஷா யோகா மையம் சார்பில் வள்ளுவன் நன்றியுரை வழங்கினார்.

இந்தத் திட்டத்தின்கீழ் கோவை கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த 300 பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவற்றில் ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்களின் ஈடுபாட்டுடன் பள்ளி வளாகத்திலேயே நாற்றுப்பண்ணை உருவாக்குவது. பின்பு மாணவர்கள் தங்களால் உருவாக்கப்பட்ட மரக்கன்றுகளை தாங்களே பள்ளியிலும் சுற்றுப்புறங்களிலும் நட்டு பராமரித்து வருவது என்று திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் ஈஷா பசுமைக்கரங்கள் திட்டத்தின் சார்பில் இந்தத் திட்டத்திற்கு தேவையான விதைகள், பைகள் தொழில்நுட்ப ஆலோசனைகள், பயிற்சிகள், சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வுகளை மாணவர்களுக்கு தொடர்ந்து வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளியிலும் தேசிய பசுமைப்படை அங்கத்தினர்களாக உள்ள மாணவர்கள் இத்திட்டத்தை முன்னின்று நடத்த உள்ளார்கள். பள்ளி குழந்தைகள் நாற்றுப்பண்ணைகளுக்கான பைகளில் மண் நிரப்புதல், விதையிடுதல், நீர் பாய்ச்சுதல், பாதுகாத்தல் மற்றும் வளர்ந்த மரக்கன்றுகளை இடம் பெயர்த்து நட்டு பராமரித்தல் ஆகிய செயல்களில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

வடவள்ளியில் அமைந்துள்ள மருதமலை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 40 பள்ளிகளை சேர்ந்த 40 பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர்கள், 80 மாணவர்களைக் கொண்ட பசுமைப்பள்ளி இயக்கத்திணருக்கு செயல் விளக்கப் பயிற்சி ம‌ற்று‌ம் பசுமை விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.

மேலும் கோவை மாவட்டத்தின் 300 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் 11 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு தொடர் பயிற்சி வகுப்புகள் நாற்றுப்பண்ணை நிறுவத் தேவையான செயல்முறை வகுப்புகள் மற்றும் காட்சி விளக்கங்கள் அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு பள்ளிக்கும் 2000 விதைகள் மற்றும் பைகளை 'ஈஷா பசுமைக்கரங்கள் திட்டம்' வழங்க உள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் கோவை மாவட்டத்தில், 6 லட்சத்திற்கும் மேலான மரங்கள் நட்டு வளர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விழாவில் பங்கேற்கும் அனைவருக்கும் ஈஷாக் கிரியா எனும் எளிய சக்திமிக்க யோகப்பயிற்சி கற்றுத்தரப்பட உள்ளது.

முன்னதாக கோபிச்செட்டிப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பரீட்சார்த்த முறையில் நாற்றுப்பண்ணை உருவாக்கப்பட்டு மாணவர்கள் ஆசிரியர் மற்றும் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து தமிழக அரசின் ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குமார் முயற்சியின் காரணமாக கடந்த 27.8.2011 முதன்முதலாக ஈரோட்டில் பசுமைப்பள்ளி இயக்கம் உருவாக்கப்பட்டு ஈரோடு மாவட்டத்திலுள்ள 300 பள்ளிகளில் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் உருவாக்கப்பட்டு நட தயாராக உள்ளது.

உலக வெப்பமயமாதலை தவிர்க்கும் பொருட்டு பசுமைப்பரப்பின் அளவை அதிகரிக்கும் விதத்தில் ஈஷா அறக்கட்டளையின் 'பசுமைக்கரங்கள் திட்டம்' பல செயல்களில் ஈடுபட்டுவருகிறது. குறிப்பாக பள்ளிக் கல்லூரி மாணவர்களிடையே சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல செயல்களில் ஈடுபட்டு வருகிறது.

மேலும் விபரங்களுக்கு லட்சுமி நாராயணனை அனுகவு‌ம். செ‌ல் ந‌ம்ப‌ர் - 94433 62863

Wednesday, November 30, 2011

தரிசு நிலத்திலும் வருமானம் கொடுக்கும் வேம்பு...

தமிழ்நாட்டில் அனைத்துப் பகுதிகளிலும் வளரக்கூடிய மரம் வேம்பு. தெய்வமாக மதித்து மக்கள் வழிபடும் பெருமை வேம்புக்கு மட்டுமே உண்டு. காற்றிலுள்ள நச்சுகளை உறிஞ்சிக் கொள்வதோடு, மனிதர்கள், விலங்குகளுக்கு ஏற்படும் நோய்களையும் தீர்க்கும் வல்லமை படைத்தவை வேப்ப மரங்கள். வீடுகளுக்குத் தேவையான நிலை, கதவு, ஜன்னல் போன்றவற்றுக்கும் இம்மரம் பயன்படுவதால் இதை 'ஏழைகளின் தேக்கு’ என்றும் அழைக்கிறார்கள்.

தரிசு, மானாவாரிக்கு ஏற்றது!

வேம்பு வெறும் நிழலுக்காக, மருத்துவத்துக்காக மட்டுமே வளர்க்கப்படும் மரமல்ல.... வணிகரீதியாகவும் வளர்த்து லாபம் பார்க்கலாம். அனைத்து வகை மண்ணிலும் வளர்ந்தாலும், கரிசல் மண்ணில் நன்றாக வளரும். நீர் தேங்கும் இடங்களில் வளர்ச்சிக் குறைவாக இருக்கும். இறவை, மானாவாரி இரண்டு முறைகளிலும் இதைப் பயிர் செய்யலாம். இறவையில் ஆண்டு முழுவதும் நடவு செய்யலாம். தரிசு மற்றும் மானாவாரி நிலங்களில் மழைக் காலங்களில் நடவு செய்ய வேண்டும். செடிக்குச் செடி 15 அடி, வரிசைக்கு வரிசை 30 அடி இடைவெளியில் மூன்று கன அடி அளவில் குழியெடுக்க வேண்டும். ஏக்கருக்கு 96 குழிகள் வரை எடுக்கலாம். ஒவ்வொரு குழியிலும் 1 கிலோ மண்புழு உரம், 30 கிராம் வேர் வளர்ச்சி உட்பூசணம் (வேம்), 1 கிலோ தொழுவுரம், 15 கிராம் அசோஸ்பைரில்லம், 15 கிராம் பாஸ்போ-பாக்டீரியா ஆகியவற்றைக் கலந்து இட்டு, அதன்பிறகு கன்றுகளை நடவு செய்ய வேண்டும்.

தண்ணீர் வசதியுள்ள இடங்களில், நடவு செய்த முதல் ஆண்டு வரை 15 நாட்களுக்கு ஒரு முறை பாசனம் செய்தால் போதும். அதன்பிறகு அவ்வப்போது மரத்தைக் காய விடாமல் தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது. தரிசு மற்றும் மானாவாரி நிலங்களில் ஒவ்வொருக் கன்றைச் சுற்றியும் 10 அடி சுற்றளவுக்கு ஒரு அடி உயரத்தில் வட்ட வடிவில் கரை அமைக்க வேண்டும். இதன் மூலம் மழைநீரைச் சேமித்து வைத்துக் கொள்ள முடியும். நன்றாக நிழல் கட்டும் வரை ஊடுபயிராக கம்பு, சோளம், கடலை, தட்டை போன்ற பயிர்களை சாகுபடி செய்து கொள்ளலாம்.

மரம் 4 ஆயிரம்!

வேப்ப மரம் நடவு செய்த 5 அல்லது 6 ஆண்டுகளில் காய்க்க ஆரம்பிக்கும். ஏப்ரல், மே மாதங்களில் பூக்கும். ஜூன் முதல் ஆகஸ்ட் வரை பழங்கள் இருக்கும். நிலத்தின் தன்மைக்கேற்ப 8 வயதுள்ள மரத்தில் சுமார் 5 முதல் 10 கிலோ விதையும், 10 வயதுள்ள மரத்தில் சுமார் 10 முதல் 15 கிலோ விதையும் கிடைக்கும். பழங்கள் கீழே விழுந்த பிறகு சேகரிப்பதை விட, மரத்தில் பழமாக இருக்கும் போதே சேகரித்தால்... அதிக மகசூல் கிடைக்கும். ஒரு கிலோ விதை குறைந்தபட்சம் பத்து  ரூபாய்க்கு விற்பனையாகிறது. இந்தக் கணக்கின்படி ஒரு ஏக்கரிலுள்ள 96 மரங்கள் மூலமாக ஏக்கருக்கு சுமாராக 10 ஆயிரம் ரூபாய் வருமானமாகக் கிடைக்கும். 10 ஆண்டுகளில் முதிர்ச்சி அடையும் ஒரு வேப்ப மரம், 4 ஆயிரம் ரூபாய் வரை விலைபோக வாய்ப்பிருக்கிறது. ஒரு ஏக்கரிலுள்ள 96 மரங்கள் மூலமாக 3,84,000 ரூபாய் வருமானமாகக் கிடைக்கும். இது தற்போதைய விலைதான். பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இதன் மதிப்பு இன்னும் அதிகமாகும். அதேபோல் வீடு மற்றும் வரப்புகளில் வளர்க்கும் மரங்களை பல ஆண்டுகள் வளர்க்கும்போது அதற்கு நள்ளவிலை கிடைக்கின்றது.   

Tuesday, November 22, 2011

புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளுக்கு ஒரு நற்செய்தி !

புதுக்கோட்டை மாவட்டம் விவசாயிகளுக்கு ஒரு திட்டம் தொடங்கிருக்காங்க பதினஞ்சு நாளுக்கு ஒரு தடவை அதிகாரிக கிராமங்களுக்கே வந்து வேளாண் தொழில் நுட்பசெய்திகள், அரசோட திட்டங்கள் எல்லாத்தையும் விவசாயிகளுக்கு நேரடியா சொல்லிக் கொடுக்கப்போரங்கலாம். அந்த மாதிரி வர்ற வேளாண்மை அதிகாரிங்க கிட்டவே மானியத்துல இடுபொருள் வாங்குறதுக்கான பரிந்துரை சீட்டையும் வாங்கிக்கலாமாம். அந்தப் பகுதியில இருக்குற வேளாண்மை விரிவாக்க மையங்கள்ல அதிகாரிகளோட பயணத்திட்டம் பத்தி தெரிஞ்சுக்க முடியுமாம். அதைத் தெரின்சுகிட்டு விவசாயிக தயராகிக்கலாமாம்.

Sunday, November 20, 2011

வேங்கை தரும் வெகுமதி...!



இரா.ராஜசேகரன்
வனத்துறை உதவி வனப்பாதுகாவலர்

வறட்சியைத் தாங்கி வளரும். ஏக்கருக்கு 200 மரங்கள். ஒரு மரம் 50 ஆயிரம்.

வணிக ரீதியான மரங்களில், சிலவற்றுக்கு எப்பொழுதுமே கிராக்கி இருந்து கொண்டே இருக்கும். அந்த வரிசையில் வரும் தேக்கு, தோதகத்தி ஆகியவற்றுக்கு அடுத்து தரமான மரமாக கருதப்படுவது... வேங்கை!

இது மருத்துவகுணம் வாய்ந்த மரமும்கூட. இம்மரத்தில் செய்த குவளையில் நீர் அருந்தினால் நீரிழிவு நோய் குணமாகும், இம்மரத்தின் பிசின் வயிறு சம்பந்தப்பட்ட நோய்களுக்குச் சிறந்த மருந்து. இதை வெட்டும்போது, சிவப்பு நிறத்தில் ரத்தம் போல சாறு வடிந்துக் கொண்டே இருக்கும்.

இனி, வணிக ரீதியாக வேங்கையைப் பயிரிடும் முறை பற்றி பார்ப்போமா?

கடற்கரைப் பகுதிக்கு ஏற்றதல்ல!

பொதுவாக தாழ்ந்தக் குன்றுப் பகுதிகள், மலையை ஒட்டியச் சமவெளிப் பகுதிகளில் நன்றாக வளரும். குறிப்பாக, மேற்கு மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலையோரப் பகுதிகளுக்கு ஏற்ற மரம். சமவெளிப் பகுதிகளில் நல்ல வளமான, ஆழமான செம்மண் நிலங்களில் நன்றாக வளரும். கடற்கரை மணல் பகுதிக்கு இது ஏற்றதல்ல. ஏக்கருக்கு 250 கன்றுகளை நடவு செய்ய வேண்டும்.

10 லட்சம்!

12 அடிக்கு 12 அடி இடைவெளியில் குழியெடுத்து நடவேண்டும். ஒவ்வொரு குழியிலும் மண்புழு உரம்-ஒரு கிலோ, வேர்வளர்ச்சி உட்பூசணம்-30 கிராம் (வேம்), மட்கியத் தொழுவுரம்-ஒரு கிலோ, அசோஸ்பைரில்லம், பாஸ்போ- பாக்டீரியா- தலா 15 கிராம் ஆகியவற்றைக் கலந்து வைத்துவிட்டு, நடவு செய்ய வேண்டும். ஏக்கருக்கு 250 கன்றுகள் தேவைப்படும்.

வேங்கையைப் பொறுத்தவரை முதல் இரண்டு ஆண்டுகள் வளர்ச்சி சற்று மந்தமாகத்தான் இருக்கும். அதற்கு மேல் அபார வளர்ச்சி இருக்கும். வளர்ச்சி குறைந்த மரங்கள் மற்றும் குறைபாடுள்ள மரங்கள் ஆகியவற்றை 5 அல்லது 6-ம் ஆண்டுகளில் கண்டறிந்து, சுமார் 50 மரங்களை கழித்து விடவேண்டும். ஒரு வேளை, இந்த மரங்கள் நன்றாக இருந்தாலும், கழித்துவிட்டால்தான், மற்ற மரங்களின் வளர்ச்சி நன்றாக இருக்கும். கழிக்கப்பட்ட மரங்கள் சிறு மரச்சாமான்கள் செய்வதற்கு பயன்படும்.

இதன் பிறகு சுமார் 200 மரங்கள் தோட்டத்தில் இருக்கும். அவ்வப்போது நோய் மற்றும் இயற்கை இடர்பாடுகளால் சேதப்படும் கிளைகளை அகற்றி விடவேண்டும். இது வறட்சியை நன்றாகத் தாங்கி வளரும். கடுமையான வறட்சிக் காலங்களில் இதன் இலைகள் உதிர்ந்து, மரமே பட்டுப் போனது போல் தோன்றும். ஆனால், மழை பெய்ததும் துளிர்த்து வளர்ந்துவிடும். இது ஓங்கி உயர்ந்து வளரும்போது அதிக சூரிய ஓளித் தேவைப்படும். அதனால் பிற மரங்களின் நிழல் விழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

வேங்கையைப் பொறுத்தவரை 10 ஆண்டுகளில் அறுவடை செய்யலாம். ஒரு மரத்துக்குச் சுமார் 5,000 ரூபாய்க்குக் குறையாமல் விலை கிடைக்கும். இந்தக் கணக்குப்படி பத்து ஆண்டுகளில் ஒரு ஏக்கரில் உள்ள 200 மரங்களில் இருந்து 10 லட்ச ரூபாய் வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது.

வேங்கைக்கு ஊடுபயிர் சவுக்கு!

இரண்டு ஏக்கரில் வேங்கையை நடவு செய்திருக்கும் மதுரை மாவட்டம் பேரையூர் அருகேயுள்ள சாலிச்சந்தை கிராமத்தைச் சேர்ந்த தயாநிதி சொல்வதைக் கேளுங்கள்.

''எனக்கு 14 ஏக்கர் நிலமிருக்குது. இதுல 5 ஏக்கர்ல தென்னை, 5 ஏக்கர்ல தேக்கு, 2 ஏக்கர்ல சவுக்கு, 2 ஏக்கர்ல வேங்கை நடவு செஞ்சிருக்கேன். வேங்கையை நட்டு மூணு வருஷமாச்சு. 12 அடிக்கு 12 அடி இடைவெளியில ரெண்டு ஏக்கருக்கும் சேர்த்து 500 கன்னுகள நட்டுருக்கேன். வாய்க்கால் பாசனம் செய்றேன். ஆரம்பத்துல வாரம் ஒரு தண்ணி கொடுத்தேன், இப்ப மாசம் ரெண்டு தண்ணி கொடுக்குறேன். மத்தப்படி பராமரிப்புனு எதையும் செய்யல.

வேங்கைக்கு இடையே ஆரம்பத்துல பாசிப்பயறு, உளுந்து மாதிரியான பயிர்களை ஊடுபயிரா சாகுபடி செஞ்சேன். ஒரு வருஷத்துக்கு முன்ன, வேங்கைக்கு இடையில 6 அடி இடைவெளியில, ஏக்கருக்கு 1,000 சவுக்கு மரத்தை நட்டு விட்டுட்டேன். இப்ப அதுவும் நல்லா வளர்ந்திருக்கு. வேங்கையில வருமானம் எடுக்க 10 வருஷம் காத்திருக்கணும். அதனால, சவுக்கை ஊடுபயிரா நட்டுட்டா... நாலு வருஷத்துக்கொரு தடவை ஏக்கருக்கு

50 ஆயிரம் ரூபாய் எடுத்துடலாம். 10-ம் வருஷம் வேங்கை மூலமாக ஏக்கருக்கு குறைஞ்சது 10 லட்சம் வருமானம் பாத்துடலாம்''

தயாநிதி, இன்னும் வேங்கையில் வருமானம் எடுக்கவில்லை. இவர் சொல்லும் கணக்கும் இன்றையச் சந்தை நிலவரத்தின் அடிப்படையிலான உத்தேச கணக்குதான். நிச்சயம் இந்த விலை கிடைக்குமா என்ற சந்தேகம் உள்ளவர்கள்... புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகேயுள்ள நகரம் என்ற ஊரைச் சேர்ந்த சிங்காரவேல் சொல்வதையும் கேட்டுவிடுங்களேன்.

''இப்ப எனக்கு வயசு 91. என்னோட 31-ம் வயசுல ஒருத்தர் கொடுத்த கன்னுகளை விளையாட்டா நட்டு வெச்சேன். அப்பப்ப தண்ணி ஊத்துனதை தவிர பெருசா எந்த பராமரிப்பும் செய்யலை. மொத்தம்

34 மரம் இருக்கு. அறுபது வயசான அந்த மரம் ஒவ்வொண்ணும் பிரமாண்டமா நிக்குது. பல வியாபாரிக வந்து 20 லட்சம் தர்றேன், 25 லட்சம் தர்றேன்னு கேக்குறாங்க. ஒரு மரத்துக்கே 60 ஆயிரம் ரூபாய்ககு மேல வருது அவங்க சொல்ற கணக்கு. ஆனா, இதுவரைக்கும் யாருக்கும் கொடுக்கல. ஒரு காலத்துல விளையாட்டா வெச்ச மரம்... இன்னிக்கு என் குடும்பத்துக்கு பெரும் சொத்தா இருக்குறதை நினைச்சா பெருமையா இருக்கு.''

'தாவரங்கள், தலைமுறைகளை வாழ வைக்கும் வரங்கள்' என்ற கூற்று எத்தனை உண்மை!

Sunday, November 13, 2011

மாசில்லாத காற்றை சுவாசிக்க செண்பக மரங்கள்!

சுற்றுப்புறத்துக்கு சுகம் தரும் செண்பக மரங்களை நட்டு வளர்க்க வனத்துறை யோசனை தெரிவித்துள்ளது; அழியும் நிலையில் உள்ள காட்டு செண்பக மரங்களை இனப்பெருக்கம் செய்யும் முயற்சி முடுக்கி விடப்பட்டுள்ளது.

மக்கள் தொகை, வீடு, வாகனங்களின் எண்ணிக்கையால், சுற்றுப்புறச் சூழல் வெகுவாக பாதிக்கப்படுகிறது. சுத்தமான காற்றை சுவாசிக்க உதவும் மரங்கள் நிறைந்த மலை மாவட்டமான நீலகிரியில் கூட, சமீபகாலமாக வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்க துவங்கியுள்ளது. சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்க பொதுநல அமைப்புகள் குரல் கொடுத்து வரும் நிலையில், வனத்துறையும் தனது பங்களிப்பாக, செண்பக மரங்களை நட்டு வளர்க்க யோசனை தெரிவித்துள்ளது.

"மக்னோலயேசி' என்ற தாவர இயல் குடும்பத்தில் "மைக்கேலியா சம்பகா' என்ற அறிவியல் பெயரைக் கொண்ட சண்பகமரம், செண்பக மரம் என அழைக்கப்படுகிறது. இதன் சிறப்புகளை தென்னிந்திய தாவரவியல் வல்லுனர்கள் மேத்யூ, ஜான் பிரிட்டோ விரிவாக விளக்கியுள்ளனர்.
செண்பக மரத்தின் இலைகள் நீண்டு வளர்ந்து, மேற்புறம் பசுமையாகவும், பின்புறம் உரோமங்கள் மண்டிக் கிடப்பதாலும், காற்றில் உள்ள தூசுகளை அகற்றும் தன்மையை கொண்டுள்ளது. மஞ்சள் நிறமாக உள்ள மலர்களின் வாசனை காற்றோடு கலந்து, சுற்றுப்புறத்தை மிக ரம்மியமாக வைத்திருக்க உதவுகிறது.

பூக்களில் இருந்து கிடைக்கும் கெட்டியான பசை, வேதியியல் பொருட்களால் கரைத்து எடுக்கப்பட்டு, பலவித வாசனை திரவியங்கள் தயாரிக்க பயன்படுத்தப்படுகின்றன. விதை, வேர், பட்டையில் பல வேதியியல் எண்ணெய், அல்கலாய்டுகள், ஒலியிக் சினாயிக் மற்றும் பால்மிடிக் உட்பட பொருட்கள் உள்ளன. மரங்கள் மிளிரும் தன்மையை கொண்டுள்ளன.
மரங்கள் எடை குறைவாகவும், உறுதித் தன்மை அதிகமாகவும் உள்ளதால், கடந்த காலங்களில் விமானக் கட்டுமானப் பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது; வீட்டு உபயோகப் பொருட்கள் செய்யவும் பயன்படுகிறது. கட்டைகளைக் காய்ச்சி வடிப்பதன் மூலமாக ஒரு வகையான கற்பூரமும் தயாரிக்கப்படுகிறது. மேலும் இது கைவினைப்பொருட்கள் தயாரிப்பிலும் முக்கியப் பங்காற்றுகிறது. கடல் மட்டத்துக்கு மேல் 1,000 அடி வரையுள்ள சோலைக் காடுகளில் இயற்கையாகவே இம்மரங்கள் வளரும்; எளிதாக இனப்பெருக்கம் செய்யவும் முடியும்.

சாலையின் இருபுறம், வீட்டு முகப்பு, கோவில், குளக்கரை மற்றும் பொது இடங்களில் மரங்கள் வளர்க்கப்படுகின்றன; மலை மாவட்டமான நீலகிரியில், கூடுதலாக நடவு செய்தால், சுற்றுப்புறச் சூழல் ரம்மியமாக இருக்கும்.
இதன் மற்றொரு வகையான "மைக்கோலியா நீலகிரிக்கா' என்ற பெயரைக் கொண்ட வெள்ளை வண்ண மலர்களை கொண்ட காட்டு  செண்பகம் மரங்கள், அழிவின் விளிம்பில் உள்ளதால் நடவு செய்ய வேண்டும்.

Thursday, November 10, 2011

மறைக்கப்படும் மானியத் திட்டங்கள்!


தோட்டக்கலைத்துறை மூலம் வழங்கப்படும் மானியத் திட்டங்கள் குறித்த விவரங்கள், பயன்கள், குறு மற்றும் சிறு விவசாயிகளுக்கு தெரியாமல் மறைக்கப்படுகிறது.
வேளாண்மை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் தனித்துறையாக தோட்டக்கலைத்துறை செயல்பட்டு வருகிறது. விவசாயத்தில் பணப்பயிர் சாகுபடியை ஊக்குவிப்பதற்காக வேளாண்மைத் துறையில் இருந்து பிரித்து தோட்டக்கலைத்துறை ஏற்படுத்தப்பட்டது.
மா, பலா, கொய்யா, சப்போட்டா உள்ளிட்ட பழ சாகுபடி, ரோஜா, மல்லிகை, சம்பங்கி உள்ளிட்ட மலர் சாகுபடி, முருங்கை, தக்காளி, புளி உள்ளிட்ட காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் தோட்டக்கலைத்துறை மூலம் அதிகபட்சமாக 50 சதம் வரை மானியம் வழங்கப்படுகிறது.
பழ வகை மரங்கள் சாகுபடியில் பெரு விவசாயிகள் மட்டுமே ஈடுபடுகின்றனர்.
இதனால் தோட்டக்கலைத் துறையின் மூலம் உள்ள மானியத் திட்டங்கள் குறித்து நன்கு அறிந்துகொண்டுள்ளனர். குறு மற்றும் சிறு விவசாயிகளில் பலர் மல்லிகை, சம்பங்கி உள்ளிட்ட மலர் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் இவ் விவசாயிகளுக்கு இந்த மானியத் திட்டங்கள் குறித்த விவரங்கள் தெரிவதில்லை.
இதனால் ஒவ்வொரு ஆண்டும் தோட்டக்கலைத்துறைக்கு ஒதுக்கப்படும் நிதியில் 80 சத தொகை பெரு விவசாயிகளையே சென்றடைகிறது.
அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மருத்துவர்கள், தொழிலதிபர்கள் ஆகியோரின் பண்ணை வீட்டுத் தோட்டங்களில் ஒவ்வொரு ஆண்டும் பழ மர சாகுபடி நிலப்பரப்பை அதிகரித்துக்கொள்ளவே இத் திட்டம் உதவுகிறது.
மாவட்டத்தில் எப்போதாவது ஒரு முறை, எங்காவது சில ஒரு இடங்களில் மட்டுமே நடைபெறும் சிறப்பு மனுநீதி நாள் முகாம்களில் 4 மணி நேரம் அரங்கு அமைத்து திட்டங்கள் குறித்து அங்குவரும் சில விவசாயிகளிடம் மட்டும் தெரிவிப்பதனால் மானியத் திட்டங்கள் குறித்த விவரங்களை அனைத்து விவசாயிகளும் அறிந்துகொள்ள முடியாது.
மல்லிகை, சம்பங்கி போன்ற மலர் சாகுபடியில் குறு மற்றும் சிறு விவசாயிகள் பெருமளவில் ஈடுபட்டுள்ளனர். பொருளாதார நெருக்கடியில் சிக்கிப் பரிதவித்துவரும் சிறு, குறு விவசாயிகள் உணவுக்கு ரேசன் அரிசி வாங்கிகொண்டு, தங்களது நிலங்களில் பணப் பயிர்களை சாகுபடி செய்துவருகின்றனர்.
இப்பயிர் சாகுபடிக்கு அரசு மானியம் வழங்குகிறது என்ற விவரம் பெரும்பாலான விவசாயிகளுக்குத் தெரிவதில்லை.
அரசின் மானியத் திட்டங்கள் சென்றடைவதன் மூலம் இவ்விவசாயிகளின் பொருளாதார நிலை சிறிதளவேனும் மேம்படும்.
இதற்கு வேளாண் விரிவாக்க மையங்கள் போன்று ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் தோட்டக்கலைத் துறைக்கும் தனி அலுவலகத்தை ஏற்படுத்த வேண்டும்.
இது இப்போதைக்கு சாத்தியமில்லை எனில் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் தோட்டக்கலைத் துறையின் சேவை மையங்களை ஏற்படுத்த வேண்டும்.
தமிழக அரசு பொறுப்பேற்றவுடன் அறிவித்த விவசாய கடன் தள்ளுபடி திட்டத்தால் குறு மற்றும் சிறு விவசாயிகளுக்கு பயனில்லை என்ற விவாதம் கடந்த 4 ஆண்டுகளாக தொடர்ந்துகொண்டிருக்கிறது.
இதேபோல் பெருமளவில் மானியத் திட்டங்களை கொண்டுள்ள தோட்டக்கலைத் துறையின் திட்டங்களும் குறு மற்றும் சிறு விவசாயிகளுக்கு எந்த பயனையும் அளிக்கவில்லை என்ற விவாதமும் விவசாயிகளால் முன்வைக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.
                                                                                                                            தினமணி தகவல்

Thursday, October 6, 2011

அகர்உட் அறிமுகம்

 அகர் ஒரு மதிப்பு வாய்ந்த சொத்து: அகர் ஒரு வியாபார ரீதியிலான பணப்பயிர். இதன் பிறப்பிடம் இந்தியா என்றாலும் இப்பயிர் மலேசியா, தாய்லாந்து, தென்கொரியா, இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, லாவோஸ், வியட்நாம், கம்போடியா, மியான்மர் மற்றும் பல நாடுகளில் பயிரிடப்படுகிறது.

பயிரிட தகுதி வாய்ந்த அமைப்பு: அகர்மரம் மேற்பகுதி விவசாயிகளின் தங்கப் பயிர். அகர் ஒரு பாதுகாப்பான சிறிய மரம். இப்பயிரை மேற்பகுதி மண்டலத்தில் எந்தவிதமான முக்கியத்துவமும் கொடுக்காமல் முக்கிய பயிராக காப்பி, டீ, ஆர்கானட், கார்டமம், தென்னை மற்றும் பனை போன்றவற்றை பயிரிடுவதைப் போன்று மலையடிவாரங்களிலும் மேட்டுபாங்கான இடங்களிலும் பயிரிடலாம்.


காப்பித் தோட்டங்கள் ஒரு சிறந்த இடம்: அகர்வுட் பயிர்களை காப்பித் தோட்டங்களில் ஆரஞ்ச், சில்வர் ஓக் மற்றும் இதர நிழல் தரும் மரங்களின் ஊடே பயிரிடலாம். இப்பயிரின் இலை அமைப்பானது இயற்கையில் எளிதில் மக்கக்கூடியது. இயற்கை எருவாக பயன்படக்கூடியது. வேர் ஆழமாக பூமியில் ஊடுருவாத தன்மை கொண்டதுடன் இது ஊர்ஜிதப்படுத்துகிறது. பத்தின் இரு மடங்கு விளைச்சலை குறுகிய காலத்தில் கொடுக்கிறது.


குறைந்த முதலீடு அதிக லாபம்: அகர்வுட் பயிர் நிரந்தரமான அதிக வருவாயினை பயிரிடப்பட்ட 7வது வருடத்திலிருந்து தருகிறது. எதிர்பார்த்த வருவாய் ஒரு கிலோவிற்கு ரூ.10,000 என்றாலும் ஒரு மரத்திற்கு 50 கிலோ எடை வந்தால் ரூபாய் ஐந்து லட்சம் கிடைக்கும். வருவாய் தற்போதைய சந்தை மதிப்பினை விட குறைவு.


சந்தன மரத்தைவிட சிறந்த அகர்வுட்: முதல் தரமான அகர்வுட்டின் விலை ஒரு கிலோவிற்கு ரூ.30,000 மற்றும் அதன் எண்ணெயின் விலை சில்லரை சந்தையில் ஒரு கிலோவிற்கு ரூ.10 லட்சம், தேசிய அளவிலும் அகில?உலக அளவிலும் அகர்வுட் ஒரு நிலையான தேவையையும் பெரிய வியாபார மதிப்பையும் கொண்டுள்ளது.


பராமரிப்பு வேண்டாம், தொழிலாளர் கண்காணிப்பு வேண்டாம்: அகர் பயிரிடுவதற்கு பயிரிடும் விவசாயியை தவிர வேறு தொழிலாளர்கள் கண்காணிப்பு வேண்டாம். ஒருமுறை பயிரிட்டஉடன் அதனை அறுவடை செய்யும் வரை இதற்கு குறிப்பிடத்தக்க சிறப்பு கவனம் ஏதும் செலுத்த வேண்டாம். தொடர்புக்கு: கனகராஜ், செய்யூர்.
போன்: 04183-320 193, மொபைல்: 77083 98535, 95855 60318.

                                                                                                                                                நன்றி தினமலர் 

Monday, October 3, 2011

குறுகிய காலத்தில் நிறைந்த லாபம் தரும் குமிழ் மரம்


நம் நாட்டில் தீர்க்க முடியாத திரும்ப திரும்ப நிகழும் பிரச்னை என்ன? கண்டிப்பாக ஒரு சம்சாரி தான் செய்யும் பயிர்தொழிலை நம்பி தன் வாழ்க்கையை ஓட்ட வேண்டும் என்பதுதான். அவன் என்ன தான் நல்ல மகசூலை விளைவித்து தன் விவசாய வண்டியை ஓட்ட நினைத்தாலும் அதன் மூக்கணாங்கயிறு வேறு ஒருவரிடத்தில் அல்லவா உள்ளது. இதற்கு மாற்று வழி என்ன என்று யோசிப்பவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக விளங்குகிறது மரம் வளர்ப்பு.

பல மரங்கள் பல வழிகளில் பயன் தருவதை நாம் அறிவோம். குறுகிய காலத்தில் நிறைந்த லாபம் தரும் மரம் எது என்ற கேள்விக்கு சரியான விடையளிக்கிறது குமிழ் மரம். புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் குமிழ் மரம் கொடி கட்டி பறக்கிறது.

குமிழ் மரத்தை இப்பகுதி மக்களுக்கு அறிமுகம் செய்து வைத்த விவசாயி எஸ்.டி.சண்முகசுந்தரம்(
ஜெகதீஸ்வரர் உயர்ரக நாற்றுப்பண்ணை - கொத்தமங்கலம் ) குமிழ் சாகுபடி குறித்து:

நான் 1987ம் ஆண்டில் புதுக்கோட்டையில் என்.எம்.ஆர் ஆக வேலைக்க சேர்ந்தேன். எனக்கு அங்க கருவேல மரங்களை நடவு செய்யும் வேலையை கொடுத்தார்கள். கொடுத்த வேலையை சிறப்பாக செய்ததால் என்னை மேற்பார்வையாளராக நியமனம் செய்தார்கள். வேலை செய்து கொண்டிருக்கும் போதே சமூக காடுகள் திட்ட அலுவலர் சுப்ரமணியன் என்பவரின் உதவியோடுவணிகவியர் பட்டப்படிப்பையும் தொடர்ந்தேன். கருவேல மரங்களை தொடர்ந்து மா, பலா, புளி போன்ற பழ கன்றுகளையும் நடவு செய்தோம்.

இந்த மரங்களில்லாமல் வேறு மரங்களை அதாவது விவசாயிக்கு நல்ல பலன் கொடுக்கும் மரங்களை நட சொல்ல வேண்டுமென்று முதலில் ரோஸ்வுட் மரங்களை நடவு செய்தோம். ரோஸ்வுட் மரங்கள் பலன் தர 40 முதல் 60 ஆண்டுகள் ஆகும் என்பதால் விவசாயிக்கு குறுகிய காலத்தில் பலன் கொடுக்கும் மரங்களைத் தேடிய போது குமிழ் மரத்தை தேர்ந்தெடுத்தேன்.

அதன்படி 1991ம் ஆண்டில் திண்டுகல்லில் உள்ள ஒரு நர்சரியிலிருந்து குமிழ் கன்றுகளை வாங்கி வந்து விவசாயிகளுக்கு நடவு செய்ய கொடுத்தேன். இந்த குமிழ் கன்றானது சிறியதாக இருக்கும் போது மிகவும் மென்மையாக இருக்கும். இதனால் பல விவசாயிகள் என்னிடம் சண்டைக்கு வந்தார்கள்.

வயலில் உள்ள குமிழ் கன்றுகளை எல்லாம் பிடுங்கி வீசினார்கள். ஒரு சிலர் மட்டும் அவற்றை ஏதோ நம்பிக்கையில் பராமரித்து வந்தனர். அவர்கள் நம்பிக்கை வீண் போகவில்லை. இன்று அவர்களை இந்த குமிழ் மரங்கள் லட்சாதிபதிகளாக்கி கொண்டிருக்கின்றன.



குமிழ் மரத்தின் எதிர்காலம்?


விவசாயிகள் தொடர்ச்சியாக பலன்தரும் வெள்ளாமையை விட்டுவிட்டு, மரப்பயிர்களுக்கு மாறியபின், பலவிதமான மரங்கள் வந்து போயிருக்கின்றன. அவைகளுள் இன்றும் பேசப்படு பவை குறைவுதான். அவற்றை விரல்விட்டு எண்ணி விடலாம். விவசாயிகள் மத்தியில் குறுகிய காலத்தில் பிரபலமடைந்த பலவிதமான மரங்களில் முதல் இடம் பெறுவது குமிழ்தான் என்பதை யாரும் மறுக்க முடியாது.

குமிழைப் பற்றி பேசாத மர விவசாயிகள் தமிழகத்தில் இல்லை என்ற நிலை கிட்டத்தட்ட வந்து விட்டது. ஆனால், இந்த மரத்திற்கான எதிர் காலம்... இந்த மரத்தை பயிர் செய்திருக்கும் விவசாயிகளின் எதிர்காலம் குறித்த கேள்விகளோடு, குமிழ் மர வியாபாரி ஒருவரை தமிழகத்தின் மிகப் பெரிய பூச்சந்தை இருக்கும் நிலக்கோட்டையில் சந்தித்தோம். அவர் தமிழகத்தில் பல இடங்களில் இருந்து பலவித மரங்களை வாங்கும் வியாபாரி எம்.ஏ.ஜான்போஸ்கோ (அன்னை ஷா மில், அணைப்பட்டி ரோடு, நிலக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டம் 624208. தொலைபேசி: 04543 233723, 98946 21486).



“குமிழ் மரத்தை தமிழகத்தில் பரவலாக விவசாயிகள் பயிர் செய்து வந்தாலும், வெட்டி விற்கக்கூடிய அளவிலான மரங்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி, ஆலங்குடி, அணவயல் கைகாட்டி, தஞ்சை மாவட்டத்தில் ஒரத்தநாடு ஆகிய பகுதிகளில்தான் உள்ளன. மற்ற மரங்களை விட குமிழ் குறுகிய காலத்தில் பிரபல மடைந்ததற்கு காரணம் குறுகிய காலத்தில் நல்ல வளர்ச்சி, முதிர்ச்சிதான்.

அதோடு இது இழைப்பிற்கு தேக்கைவிட நன்றாக இருப்பதால் அதிகமான தச்சு வேலையாட்களும், நீண்ட ஆயுள், உறுதியோடு வெண்மையான நிறத்திலும் இருப்பதால் வேண்டிய வண்ணங்களைக் கொடுத்து நினைத்த வண்ணத் தைப் பெற முடியும் என்பதால் வீடு கட்டுவோரும் இதை தேர்வு செய்கின்றனர்.

குமிழ் மரத்தைக் கொண்டு நிலை, கதவு, ஜன்னல் போன்றவை செய்யப்படுகின்றது. பலகை எடுக்க வேண்டுமெனில் நம்நாட்டு குமிழ் 15 ஆண்டு முதிர்ச்சியடைந்திருக்க வேண்டும். எனவே பலகைக்கு தேவையான குமிழ் மரங்களை வெளிநாடுகளி லிருந்து இறக்குமதி செய்கி றோம். இந்தக் குமிழ் மரங்கள் லேசானதா கவும், பலகை செய்ய ஏதுவானதாகவும் இருக்கிறது.



குமிழ் மரம் சாகுபடி செய்ய விரும்புவர்கள் அடர்நடவு முறையில் வைக்கலாம். ஏனெனில் குமிழ் ஆணிவேர் தாவரம். பக்க வேர்கள் மிகக்குறைவு. இம்முறையில் ஏக்கருக்கு 1000 மரங்கள் வரை வைக்கலாம். நடவு செய்து சிறப்பான முறையில் மண்ணிற்கேற்ப நீர்ப் பாசனத்தை செய்து வந்தால் 7 ஆண்டுகளில் விறகு நீங்கலாக ஒரு மரம் ஒரு டன் எடைவரும். 1 டன் மரத்தை ரூ.5 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரை விலை கொடுத்து எடுத்துக் கொள்கிறேன். பலகை எடுக்கும் வகையில் இருந் தால் டன்னுக்கு ரூ.10 ஆயிரம் கொடுக்கக்கூட தயாராக உள்ளேன்.

மரம் வளர வளர பக்கக்கிளைகளை கவாத்து செய்து விடுவது மிகவும் முக்கியம். குமிழ் மரம் நேராகவும், அதிக எடையுடனும் வளரும். ஆண்டுக்கொருமுறை உரம் வைத்தால் இன்னும் நன்றாக வளரும். தமிழ்நாட்டில் எங்கு இருந்தாலும், மரத்தைப் பார்த்து விலைக்கு எடுத்துக் கொள்கிறேன். மர உரிமையாளர் கிராம அலுவலரிடமிருந்து சிட்டா அடங்கள் பெற்றுக் கொடுத்துவிட்டால் மர அறுவடை முடிந்தவுடனேயே முழுப்பணத்தை யும் கொடுத்துவிடுகிறேன்.

கடந்த சில ஆண்டுகளில் குமிழ் மரத்தின் தேவை மிகவும் உயர்ந்துள்ளது. வரும் ஆண்டு களில் இன்னும் தேவை உயரும். எனவே, விவசாயிகள் குமிழ் மரத்தை தன்னம்பிக்கையோடு பயிர் செய்யலாம். விற்பனைக்கு குறைவிருக்காது. வேம்பின் தேவையும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. ஏனெனில் தற்போது இருந்த வேப்பமரங்கள் பெரும்பாலும் வெட்டப்பட்டு விட்டன.

எனவே எதிர்காலத்தில் வேம்பு மிகக்குறைவாகவே கிடைக்கும். ஆக தேவை அதிகரிக்கும் போது, அதன் விலையும் உயர வாய்ப்புள்ளது. எனவே விவசாயிகள் வேம்பு சாகுபடியிலும் கவனம் செலுத்தினால் எதிர்காலத்தில் நிச்சயம் நல்ல வருமானம்தான்” என்கிறார் ஜான் போஸ்கோ.

                                                                                                            நன்றி "தழில்சிகரம்.கம்"

குமிழ் சாகுபடியில் 15 ஆண்டுகள் அனுபவம் உள்ள புதுக்கோட்டை மாவட்டம், அணவயல் கிராமத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் சொல்வதைக் கேட்போமா...!

மூணு வருஷம்தான் பராமரிப்பு!

''என்னைப் பொறுத்தவரைக்கும் குமிழ் மாதிரி குறைஞ்ச காலத்துல அதிக வருமானம் கொடுக்குற மரம் எதுவும் இல்லீங்க. 7 முதல் 10 வருஷத்துக்குள்ள ஒரு மரம் ஒரு டன் எடை வந்துடுது. இதை என் அனுபவத்துலயே உணர்ந்திருக்கேன். 10 வருஷத்துக்கு முன்ன 30 சென்ட் நிலத்துல 9 அடிக்கு 9 அடி இடைவெளியில குமிழை நடவு செஞ்சிருந்தேன். கவாத்து அடிச்சு, முறையா தண்ணி கொடுத்து பாத்துகிட்டதால மரங்க நல்லா வளந்திருக்கு. அதுல வேலியோரமா இருந்த நாலஞ்சு மரங்களை போன வருஷம் வெட்டி வித்தேன். ஒவ்வொரு மரமும் ஒன்றரை டன் எடை இருந்துச்சு. ஒரு டன் 10 ஆயிரம் ரூபாய்க்கு விலை போனதால, மரத்துக்கு 15 ஆயிரம் ரூபாய் கிடைச்சுது. மிச்ச மரங்களை இன்னும் வெட்டாம வெச்சிருக்கேன்.

இந்த மரத்துக்கு இருக்குற டிமாண்டை பாத்துட்டு ஒண்ணரை வருஷத்துக்கு முன்ன, செடிக்கு செடி 14 அடி, வரிசைக்கு வரிசை 13 அடி இடைவெளியில ரெண்டரை ஏக்கர்ல நடவு செஞ்சிருக்கேன். இப்படி நட்டா ஏக்கருக்கு 220 கன்றுகள் வரைக்கும் தேவைப்படும். முதல் வருஷம் வரைக்கும் ஊடுபயிரா கடலை, உளுந்துனு மாறி, மாறி ஊடுபயிர் செஞ்சிக்கலாம். குமிழைப் பொறுத்தவரைக்கும் 20 அடி உசரத்துக்கு மரம் போற வரைக்கும் கவாத்து எடுக்கணும். அதுக்கு மேல தேவையில்லை. அதேபோல முதல் ரெண்டு, மூணு வருஷம் வரைக்கும் முறையா தண்ணி கொடுத்து பராமரிக்கணும். இதையெல்லாம் செஞ்சிட்டா... குமிழ்ல நல்ல மகசூலை எடுத்துடலாம். நடவு செஞ்ச 7-ம் வருஷத்துல இருந்து 10-ம் வருஷத்துக்குள்ள அறுவடை செஞ்சிடலாம். ஒரு மரத்துக்கு சராசரி விலையா 10 ஆயிரம் கிடைச்சாலும், ஒரு ஏக்கர்ல 200 மரத்துக்கு, 20 லட்ச ரூபா வருமானமா கிடைக்கும். விற்பனையிலயும் பிரச்னையில்ல. உங்ககிட்ட குமிழ் மரம் இருக்கறது தெரிஞ்சா... உள்ளூர் வியாபாரிகளே வந்து பணம் கொடுத்து வெட்டிக்கிட்டு போயிடுவாங்க. அந்தளவுக்கு இதுக்கு டிமாண்ட் இருக்கு.''

என்ன... அனுபவ விவசாயி ரவிச்சந்திரன் சொன்னதை மனதில் ஏற்றிக் கொண்டீர்கள்தானே! இனி, முடிவு எடுக்க வேண்டியது நீங்களேதான்!

தொடர்புக்கு ரவிச்சந்திரன், அலைபேசி: 96551-82891.


புதுக்கோட்டை பலா: தென்னைக்கு ஏற்ற ஊடுபயிர். நட்ட தென்னை முதல் 40 வருட தென்னைமரம் வரை. ஒரு ஏக்கர் தென்னையில் 150 மரங்கள். 5 முதல் 6வது வருடங்களில் தொடர்ந்து மகசூல். வறட்சியில் தென்னை வாடினாலும் பலா தொடர்ந்து பலன் தரும். புவி வெப்பமயமாவதைத் தடுப்பதில் பலா பெரும்பங்கு வகிக்கிறது. மேலும் விபரங்களுக்கு: ஜெகதீஸ்வரர் உயர்ரக நாற்றுப்பண்ணை, கீரமங்கலம் வழி, கொத்தமங்கலம் அஞ்சல், ஆலங்குடி, புதுக்கோட்டை மாவட்டம். குமிழ் எஸ்.டி.சண்முகசுந்தரம், 94860 60136, 98942 91818. 

Saturday, October 1, 2011

மண்ணின் வில்லன் - ‘சீமைக் கருவேலமரம்’


அமெரிக்க தாவரவியல் பூங்கா , ‘வளர்க்க கூடாத நச்சு மரங்கள்’ என்று ஒரு தனி பட்டியலே வெளியிட்டு இருக்கிறது. அதில் முன்னணியில் இருப்பது தான் நான் குறிப்பிட போகிற விஷ மரம். தமிழ் நாட்டின் ரோட்டின் ஓரங்களிலும், பல கிராமங்களின் வயல்வெளிகளிலும் சகஜமாக இருக்க கூடிய முள் மரம் எனப்படும் சீமைக் கருவேலமரம் ’ தான் அது. ( பேராண்மை படத்தில் கூட ஜெயம்ரவி மாணவிகளுடன் சேர்ந்து காட்டுக்குள் இருக்கும் மரத்தை வெட்டிகொண்டே விளக்கம் சொல்வாரே ! )

நம் மண்ணின் தன்மையை கெடுப்பதற்காக வெளி நாட்டினர் இந்த மரத்தின் விதையை இங்கு தூவியதாக ஒரு கருத்தும் , கிராம மக்களுக்கு அடுப்பு எரிக்க விறகு வேண்டும் என்பதற்காக ஒரு அரசியல்வாதி (நல்ல எண்ணம்தான், இதன் நச்சு தன்மை பற்றி தெரியாமல் இருந்திருக்கலாம் ) வெளிநாட்டில் இருந்து தருவித்ததாகவும் இரு விதமான கருத்துகள் உலவுகின்றன. உண்மை எதுவென்று ‘ யாம் அறியேன் பராபரமே’

ஆனால் எப்படி வந்தது என்பது அல்ல…., இப்போதைய பிரச்சனை….!? , இம்மரத்தால் என்னவெல்லாம் பாதிப்பு ஏற்படுகிறது என்று பார்பதுதான் அவசியம். முதலில் இந்த மரத்தின் தன்மைகளை பார்க்கலாம்.

இதன் கொடூரமான குணங்கள்

இவை எந்த வித வறட்சியிலும் நன்கு வளரக்கூடியது . மழை பெய்யாமல் போனாலும், நிலத்தில் நீரே இல்லாமல் இருந்தாலும் இவை கவலை படாது. பூமியின் அடி ஆழம் வரை கூட தன் வேர்களை அனுப்பி நீரை உறிஞ்சி , தன் இலைகளை வாடவிடாமல் பார்த்து கொள்கிறது, ( அடுத்தவர்களின் உழைப்பை உறிஞ்சி வாழும் சில சுயநல மனிதர்களை போல…! ) இதனால் நிலத்தடி நீர் முற்றிலுமாக வற்றி அந்த பூமியே வறண்டு விடுகிறது…!

இதன் கொடூரம் அத்துடன் நிறைவு பெறுவது இல்லை, ஒருவேளை நிலத்தில் நீரே கிடைக்கவில்லை என்றாலுமே தன்னை சுற்றி தழுவி செல்லும் காற்றில் இருக்கும் ஈரபதத்தையும் இம்மரம் உறிஞ்சிவிடுகிறது….. ??!! இப்படி காற்றின் ஈரபதத்தையும், நிலத்தடி நீரையும் இழந்து அந்த பகுதியே வறட்சியின் பிடியில் தாண்டவமாடும்.

தென் தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களின் வறட்சிக்கு இந்த மரங்களே முக்கிய காரணம் என்பது அதிர்ச்சியான ஒன்றுதான். ஆனால் இதை அறியாமல் அந்த மக்கள், இன்னும் புதிதாக மரங்களை வளர்த்து பராமரிக்கிறார்கள் என்று என்னும் போது அறியாமையை குறித்து வருந்த வேண்டி இருக்கிறது




உடம்பு முழுதும் விஷம்

இந்த மரத்தின் இலை, காய், விதை என எதுவுமே எந்த உயிரினத்துக்கும் பயன்படாது. முக்கியமான விஷயம் ஒன்றும் உள்ளது, ஆச்சரியமாக இருந்தாலும் உண்மை அதுதான். இந்த மரத்தில் கால்நடைகளை கட்டி வைத்து வளர்த்தால் அவை மலடாகிவிடும், அதாவது சினைபிடிக்காமலேயே போய்விடும், ஒருவேளை மீறி கன்று ஈன்றாலுமே அது ஊனத்துடன்தான் பிறக்கும்….?!!

ஒருபுறம் இதன் வேர் நிலத்தடி நீரை விஷமாக மாற்றிவிடுகிறது மற்றொரு புறம் இதன் நிழலில் மற்ற உயிரினங்கள் வாழ முடியாத நிலை இருக்கிறது. இதன் பக்கத்தில் வேறு என்ற செடியும் வளராது, தவிர மரத்தில் எந்த பறவை இனங்களும் கூடுகட்டுவதும் இல்லை.

காரணம் என்னவென்றால் இந்த வேலிகாத்தான் மரங்கள், ஆக்சிசனை மிக குறைந்த அளவே உற்பத்தி செய்கிறது , ஆனால் கரிமிலவாயுவை மிக அதிக அளவில் உற்பத்தி செய்து வெளியிடுவதால் சுற்றுப்புற காற்று மண்டலமே நச்சுதன்மையாக மாறிவிடுகிறது.

அறியாமை

நமக்கு தெரியாமலேயே இப்படிப்பட்ட மரங்களை கண்டுகொள்ளாமல் இருக்கிறோம் என்பது வருத்தத்துக்கு உரியதுதான்.

கேரளாவின் விழிப்புணர்வு

நமது அண்டை மாநிலமான கேரளாவில் இந்த மரத்தை பற்றிய விழிப்புணர்வை வனத்துறையினர் மக்களிடம் ஏற்படுத்தி உள்ளனர்…..!! அதனால் கேரளாவில் இந்த மரத்தை ஒரு இடத்தில் கூட காண முடியாது. ஆனால் நம் தமிழ்நாட்டில் விறகிற்க்காக இந்த மரத்தை வளர்த்து வருகின்றனர்….??! என்ன முரண்பாடு…?? என்ன அறியாமை..??

ஆராய்ச்சியாளர்களும், இந்த மரங்கள் இருக்கும் இடங்களில் வாழும் மனிதர்களின் மனதையும் இந்த மரம் மாற்றி வன்முறை எண்ணத்தை கொடுக்கும் என்று கண்டு பிடித்து உள்ளனர்.
நல்ல மரம் ஆரோக்கியம்

வேப்பமரம் வளர்ப்பது எவ்வளவு நல்லது என்பதை யாவரும் அறிவோம், மற்றும் ஆலமரமும் , அரசமரமும் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது என்பதை உணர்ந்தவர்கள் நாம். இருந்தும் இந்த முள் மரத்தை பற்றி சரியாக விழிப்புணர்ச்சி நம்மிடம் இல்லையே என்பதே என் ஆதங்கம் .

சுற்றுபுறத்தில் புல், பூண்டை கூட வளரவிடாமல் தடுக்கும் இந்த முள் மரத்தை பூண்டோடு அழிக்கவேண்டும் என்ற விழிப்புணர்வை அரசாங்கம் தீவிர முயற்சி எடுத்து மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் . சமூக ஆர்வலர்கள் இந்த மரத்தை பற்றிய பிரசாரங்களை செயல் படுத்தலாம், செய்வார்களா?

இந்த பதிவை படிப்பவர்களும் முடிந்தவரை இந்த செய்தியை மற்றவர்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் ஒரு சிறிய விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.

மரங்களை வளர்ப்பது எவ்வளவு அவசியமோ அதை விட இந்த மரத்தில் ஒன்றையாவது வெட்டி அழிப்பது அதை விட அவசியம்….
இந்த மரத்தை வெட்டி வீழ்த்துவோம்…..! நம் மண்ணின் மாண்பை காப்போம்..!!


Monday, September 26, 2011

இலவச மரக்கன்று வழங்கும் வனவியல் மையம்

சொந்த நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு இலவசமாக மரக்கன்றுகள், அதை வைத்து பராமரிக்க முறையான பயிற்சி மற்றும் கன்றுக்கு ஊக்கத்தொகை என பல வகைகளில் விவசாயிகளின் வாழ்க்கையை வனவியல் விரிவாக்க மையம் வளமாக்கி வருகிறது.
  • தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அரசு சார்பில் வனவியல் விரிவாக்க மையம் இயங்கி வருகிறது. திருவள்ளூர்- ஊத்துக்கோட்டை சாலையில் பூண்டியில் திருவள்ளூர் மாவட்ட வனவியல் விரிவாக்க மையம் 3.10 ஹெக்டேர் பரப்பளவில் இயங்கி வருகிறது. இங்கு தேக்கு, சவுக்கு, குமிழ், மகானி, வேங்கை, செம்மரம், மூங்கில், சவுக்கு உள்ளிட்ட மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு விவசாயிகளுக்கு இலவசமாக வழங்குகிறது.
  • குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் நிலம் சொந்தமாக வைத்துள்ள விவசாயிகள் நிலத்துக்கு உரிய ஆவணங்களும், ரேஷன்கார்டு ஆகியவற்றுடன் வனவிரிவாக்க மையத்தை அணுகினால் வனவிரிவாக்க மைய அலுவலர்கள் விவசாயிகளின் இடத்துக்கே நேரில் சென்று ஆய்வு செய்து அந்த மண்ணின் வளத்துக்கேற்றவாறு மரக்கன்றுகளை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்குவர். ஒரு ஏக்கருக்கு 2000 கன்றுகள் வரை வழங்கி அதை முறையாக பராமரிக்கும் பயிற்சி, மண் புழு உரம் மற்றும் தேவையான வழிமுறைகளையும் விவசாயிகளுக்கு எடுத்து கூறி வளம் பெறச் செய்கின்றனர்.
ஊக்கத்தொகை:

தங்களது வயலில் பயிரிட்டிருந்தாலும் அதன் வரப்பு ஓரங்களில் மரக்கன்றுகளை வரிசையாக நட்டு அதன் மூலம் விவசாயிகள் கூடுதல் வளம் பெற வழிகாட்டுகின்றனர். நாளடைவில் வனவியல் விரிவாக்க மைய அலுவலர்களின் வழிகாட்டுதலை முறையாக பின்பற்றி மரக்கன்றுகளை முறையாக பராமரிக்கும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையாக ஒரு கன்றுக்கு ரூ.5 வழங்குகின்றனர்.
தேக்கு 20 ஆண்டுகள், மகானி 20 ஆண்டுகள், வேங்கை 20 ஆண்டுகள், குமிழ் 7 ஆண்டுகள், மூங்கில் 3 ஆண்டுகள், சவுக்கு 4 ஆண்டுகள் என பருவத்துக்கு ஏற்றவாறு மரங்கள் விவசாயிகளுக்கு பெருத்த லாபத்தை ஏற்படுத்தி தருகின்றன.


மரக்கன்று விநியோகம்:

இது குறித்து பூண்டியில் உள்ள வனவியல் விரிவாக்க மைய அலுவலர் சிவலிங்கம் கூறும்போது, “3.10 ஏக்கரில் இங்கு தேக்கு, வேங்கை, குமிழ், மகானி உள்ளிட்ட பல்வேறு மரக்கன்றுகளை வளர்த்து அதை உரிய பருவத்தில், நாடி வரும் விவசாயிகளுக்கு வழங்கி வருகிறோம். கடந்த 2009-ம் ஆண்டு இம்மாவட்டத்தில் 60 ஆயிரம் மரக்கன்றுகளை விவசாயிகளுக்கு வழங்கியுள்ளோம்.

வனவியல் விரிவாக்க மையம் குறித்த விழிப்புணர்வு விவசாயிகளுக்கு முழு அளவில் ஏற்படாததால் தற்போது கிராமப்புறங்களில் சென்று பயிற்சி கூட்டங்கள் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். 2011-ம் ஆண்டில் 2 லட்சம் மரக்கன்றுகளை இம்மாவட்ட விவசாயிகளுக்கு வழங்க இலக்கு நிர்ணயித்து அதற்காக முயற்சி மேற்கொண்டு வருகிறோம்’ என்றார். விவசாயிகள் மேலும் விவரங்களுக்கு 9994347739 என்ற எண்ணில் வன விரிவாக்க மைய அலுவலர் சிவலிங்கத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

                                                                                     தினமணி தகவல்

கை கொடுக்கும் காடுகள்!


காடுகள் மனிதகுலத்துக்குப் பெரும் நன்மை பயக்கின்றன. அவை நமக்கு மரம், பிசின்கள் போன்ற பல பொருட் களைத் தருகின்றன. காட்டு மரங்களில் இருந்தே நாம் காகிதங் களையும், செயற்கைப் பட்டுகளையும் உருவாக்குகிறோம்.
ஒரு காலகட்டத்தில் மனிதன் காடுகளை பெருமளவில் நாசப்படுத்தியதோடு, அழித்தும் வந்தான். காடுகள் அவ்வாறு அழிக்கப்பட்டதால் மரங்களும், பிற பயனுக்குரிய பொருட்களும் கிடைக்காமல் போயின. அதுமட்டுமல்ல, தட்பவெப்பநிலை மாறியதோடு, காடுகள் மறைந்த இடங்களில் எல்லாம் பாலைவனங்கள் தோன்றலாயின. அதன் பின்பே காடுகளைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு பரவலாயிற்று.
காடுகள், நீர் வளத்தைப் பாதுகாக்கின்றன. மலைகளில் உள்ள அடர்ந்த காடுகளில் மழை பெய்யும்போது, மரங்களின் இலை களால் அதன் வேகம் மட்டுப்படுத்தப்பட்டு நீர் விழுகிறது. எனவே அங்குள்ள வளமான மண் கரைந்து போவதில்லை. அப்படியும் அரித்துச் செல்லும் மண்ணை மலைச் சரிவில் உள்ள மர வேர்கள் தடுத்து விடுகின்றன.
மலைகளில் மரங்களே இல்லாதிருந்தால் மழை வேகமாகப் பெய்து, அங்குள்ள வளமான மண்ணை அடித்துக்கொண்டு போய்விடுகிறது. குளிர்காலங்களில் மலையில் பெய்து உறையும் பனி, வெறுந்தரையில் விரைவில் உருகிவிடும். ஆனால் காடுகளில் பெய்யும் பனி மெதுவாகவே உருகும். மேலும் அந்த நீர், நிலங்களுக்கும், பண்ணைகளுக்கும், ஊற்றுகளுக்கும், பூமியின் அடியில் உள்ள ஓடைகளுக்கும் மெதுவாகச் சென்று பரவுகிறது.
வேகமான வெள்ளப் பெருக்கு, மரங்களை வீழ்த்தி விடுகிறது. வெற்றிடத்தில் விழும் மழை நீரும், உருகும் பனி நீரும் மெதுவாகச் செல்வதற்குப் பதிலாக துரித கதியில் ஓடி மறைந்து விடுகிறது.
வண்டல் மண்ணை வாய்க்கால், ஆறுகள், கடல் ஆகியவற்றுக்கு மழை நீர் இழுத்துச் செல்வதை காடுகள் தடுக்கின்றன. மரங்களின் வேர்களும், கிளைகளும், வண்டல் மண் அரித்துச் செல்லப்படாமல் தடுத்து விடுகின்றன.
காடுகள் அழிக்கப்பட்டு மொட்டையாகும் மலைகளில் இருந்து அடித்துச் செல்லப்படும் வண்டல், துறைமுகங்கள், நதிக் கால்வாய்கள் ஆகியவற்றில் படிகிறது. அந்த வண்டல் மண்ணை அகற்றி, ஆழப்படுத்த உலகெங்கும் பல்லாயிரம் கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. அதே நேரம் வண்டல் அரிக்கப்படும் நிலம் தனது வளத்தை இழப்பதால், விவசாயம் கேள்விக்குறியாகிறது.
மனிதன் தனது சுயநலத்தால் எப்படித் தனக்குத் தானே தீங்கு செய்துகொள்கிறான் என்பது இதிலிருந்து புரியும்.

Friday, September 16, 2011

அரசமரம் மர‌த்‌தி‌ன் சிறப்பு!

புவியில் வாழும் உயிர்களுக்கு உயிர் கொடுப்பது மரங்கள்தான்.
மரங்கள்தான் சூரிய ஒளியிலிருந்து வெப்பத்தை உள்வாங்கி, குளோரோபில் மூலம் காற்றில் உள்ள கார்பன்டை ஆக்ஸைடை உறிஞ்சி ஆக்ஸிஜனை வெளியிடுகிறது.
இதனாலேயே தாம் நம் முன்னோர்கள் மரங்களை தெய்வமாக வழிபட்டனர். அப்படி நம் முன்னோர்கள் வழிபட்ட மரங்களுள் அரச மரமும் ஒன்று.இன்று குளக்கரை, கோவில்களில் அரச மரம் இல்லாத கிராமங்களை நாம் காண முடியாது. நீண்ட காலம் வாழும் அரச மரங்கள் தெய்வமாக போற்றப்படுகின்றன. வேம்பை பெண் தெய்வமாக வணங்குவார்கள். அரச மரத்தை ஆண்தெய்வமாக வணங்குவர். பெரும்பாலும் அரச மரம் இருக்கும் இடமெல்லாம் பிள்ளையார் சிலை இருக்கும்.

புத்தபிரான் போதி மரத்தின் கீழ் ஞானம் பெற்றதாக நாம் அறிவோம். அந்த போதிமரம் என்பது அரச மரம்தான்.அரச மரத்தை சுற்றிவிட்டு அடிவயிற்றைத் தொட்டுப்பார்த்தாள் என்ற பழமொழி உண்டு.இதன் பொருள் அரச மரம் குலம் தழைக்கச் செய்யும் பிள்ளைப்பேறை உண்டாக்கும். சூலகத்தை சீராக்கும். சூலகத்தில் உண்டான நோய்களை போக்கும் என்பதே.அரச மரத்தின் காற்று கருப்பை கோளாறுகளை போக்கும் தன்மையுடையது. அதுபோல் மூளையின் செயல்பாடுகளை தூண்டி, மன அமைதியைக் கொடுக்கும் குணமும் இதற்கு உண்டு.
புராதான காலம் தொட்டே அரச மரம் இந்தியாவில் இருந்து வந்துள்ளது. இதன் பூர்வீகத்தை இந்தியா, இலங்கை, மியான்மர், நேபாளம், பாகிஸ்தான் போன்ற நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு தங்களுடையது என்கின்றனர். ஆனால் இதன் பூர்வீகம் பாரத பூமிதான்.

நீண்டு நெடிய மரம், அழகான இலைகள் என்று பரந்து விரிந்து காணப்படும் அரச மரத்திற்கு அஸ்வத்தம், அச்சுவத்தம், திருமரம், போதி, கவலை, பேதி, கணவம், சராசனம், மிப்பலம் என பல பெயர்கள் உண்டு.
நன்கு வளர்ந்த அரச மரம் நாளொன்றுக்கு 1808 கிலோ கரியமில வாயுவை உள்வாங்கி 2400 கிலோ பிராண வாயுவை வெளியிடுவதாக நவீன ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.மேலும் இந்த பிராண வாயு காற்று மண்டலத்தில் கலந்து காலை நேரங்களில் இம்மரத்தை சுற்றி வரும்போது நாளமில்லா சுரப்பிகளில் செயல் பாடுகளைத் தூண்டுகின்றன என்றும் கூறுகின்றனர்.

இதன் இலை, வித்து, வேர், பட்டை அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டது.

அரச இலை கொழுந்துகளை எடுத்து நீரில் கொதிக்க வைத்து கஷாயம் செய்து அருந்தி வந்தால் உடல் வன்மை கொடுப்பதுடன் சுரக்காய்ச்சல் குறையும். முக்குற்றத்தையும் அதாவது வாதம், பித்தம், கபம் போன்றவற்றை சீராக்கி உடலை சீராகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும்.

அரசமரத்தின் பட்டை, வேர், விதை இவற்றை பாலில் கொதிக்கவைத்து ஆறிய பின் அதில் தேன் கலந்து தொடர்ந்து 1 மண்டலம் அருந்தி வந்தால் தாது விருத்தியடையும். பெண்களுக்கு கருப்பைக் கோளாறுகள் நீங்கும்.
அரச விதைகளைக் காயவைத்து இடித்து பொடியாக்கி வைத்துக்கொண்டு தினமும் பாலில் கலந்து உண்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும். மலத்துடன் இரத்தம் வெளியேறுதல் குணமாகும்.

அரசமரப் பட்டையை சிதைத்து நீரில் போட்டு கொதிக்க வைத்து குடிநீராக அருந்தி வந்தால் சொறி, சிரங்கு குணமாகும். உடல் வெட்கை குறையும். வியர்வை நாற்றம் நீங்கும். சருமம் பளபளப்பதுடன், சரும நோய்கள் அண்டாது. சருமத்தில் சுருக்கம் ஏற்படாது.

அரசமரப் பட்டையை சிதைத்து பொடியாக்கி நாள்பட்ட புண்களின் மீது தடவினால் புண்கள் விரைவில் குணமாகும்.
அரச மரப் பட்டையை நீரில் போட்டு கொதிக்க வைத்து ஆறிய பின் அந்த நீரால் வாய் கொப்பளித்து வந்தால் வாயில் உள்ள புண்கள் விரைவில் குணமாகும்.

வெள்ளைப்படுதல் நோய் கொண்ட பெண்கள் இந்த நீரால் பிறப்புறுப்பை கழுவி வந்தால் வெள்ளைப்படுதல் நோய் குணமாகும். அதனால் ஏற்படும் மற்ற பாதிப்புகள் குறையும்.
அரச மரத்தின் இலையை, பட்டை, வேர், விதை இவற்றை இடித்துபொடியாக்கி வைத்துக்கொண்டு மாதவிலக்குக் காலங்களில் கஷாயம் செய்து அருந்தி வந்தால் மாதவிலக்கில் ஏற்படும் பிரச்சனைகள் தீரும். கருப்பைக் கோளாறுகள் நீங்கும்.
அரச மரத்தின் பாலை எடுத்து பாத வெடிப்புகள் உள்ள பகுதிகளில் பூசிவந்தால் பித்த வெடிப்புகள் விரைவில் மறையும்.
அரச இலை, பட்டை, வேர் இவைகளை எடுத்து நன்கு இடித்து நீரில் கொதிக்க வைத்து கஷாயமாக்கி தேவையான அளவு பனைவெல்லம் கலந்து அருந்தி வந்தால், மன அழுத்தம், மன எரிச்சல், அதீத கோபம், தீரா சிந்தனை போன்றவை தீரும்.
அதிகளவு ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் மரங்களுள் அரச மரமும் ஒன்று. எனவே அரச மரத்தை நட்டு அதன் பயனை நாமும், நம் சந்ததியினரும் பெற வழி செய்வோம்.

Friday, September 9, 2011

நாவல் மர‌த்‌தி‌ன் சிறப்பு!

நாவல் மரம் எல்லா வகையிலும் ஒரு சிறப்பான மரம். நாவல் மரம் என்று எடுத்துக்கொண்டால், திருநாவலூர் என்று ஒரு ஊர் இருக்கிறது, திருச்சி பக்கத்தில் திருவானைக்காவல் என்று ஒரு ஊர் இருக்கிறது. இங்கெல்லாம் நாவல்தான் தலவிருட்சமாக இருக்கிறது.

பொதுவாக நாவல் மரங்களை வளர்த்தால் நல்லது. ஆனா‌ல் வீட்டில் வளர்ப்பது அவ்வளவு விசேஷம் கிடையாது. நிலங்களில் வைத்து வளர்க்கலாம். நாவல் மரங்களைத் தேடி கரு வண்டுகள் அதிகமாக வரும். கரு நாகங்களும் நாவல் மரத்தில் வந்து குடி கொள்ளும். அந்த மரத்திலிருந்து வெளிப்படக்கூடிய வைப்ரேஷன், அதனுடைய காற்‌றி‌ன் கு‌ளி‌ர்‌ச்‌சி போன்றவை இவைகளை ஈர்க்கும். அதனால் இதனை வீடுகளில் வளர்க்காமல், விளை நிலங்கள், தோட்டம் போன்ற இடங்களில் வளர்த்தால் நல்லது. அந்தக் காற்று உடலிற்கும் நல்லது, மகிழ்ச்சியும் தரக்கூடியது.
நாவல் பழத்தை தினம் ஒன்று சாப்பிட்டால் உடம்பிற்கு குளிர்ச்சி தரும். மேலும் சிறுநீரகப் பாதையில் உள்ள தொற்றுகளை விரட்டும், நீர்க்கடுப்பு பிரச்சனையையும் தீர்க்கும். சிறுநீரகத் தொற்றையும் போக்கும், சிறுநீர்க் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் போன்றவற்றையும் போக்கும் தன்மை நாவல் பழத்திற்கு இருக்கிறது. இதுதவிர, நாவல் பழத்தில் புரோட்டின், நார்சத்து, விட்டமின் சி, டி போன்றவையும் இருக்கிறது. தற்போது பல ஊர்களில் நாவல் மரம் இல்லை. மக்களுக்குத் தெரியாத இடங்களில் மட்டும் இருக்கிறது.
நாவல் பழம் நீரிழவு நோய் எனப்படும் சர்க்கரை வியாதியை எல்லா வகையிலும் தீர்க்கக் கூடியது. விநாயகருக்கும் நாவல் பழம் மிகவும் விசேஷமானதாக இருக்கிறது. குறிப்பாக விநாயகர் சதுர்த்தி அன்று நாவல் பழம் வைத்து, வழிபட்டால் நல்லது என்று சொல்வார்கள்.
நாவல் மரத்திற்கென்று பெரிய மருத்துவ குணங்கள் உண்டு. நாவல் பட்டை சாறு எல்லா வகையிலும் நல்லதைக் கொடுக்கும். நாவல் இலையை பொடி செய்து சாப்பிட்டால் பேதி நிற்கும். இந்தப் பொடியால் பல் தேய்த்தால் பல் ஈறுகள் வலுவடையும். நாவல் இலையின் சாம்பல் நாள்பட்ட தீக்காயங்கள், வெட்டுக் காயங்களை குணப்படுத்தும்.

Sunday, August 28, 2011

வறட்சியிலும் வளம் தரும் சந்தனம், மலைவேம்பு

சந்தன மரங்களை இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் சுதந்திரமாக வளர்க்க அரசின் அனுமதி உண்டு. தனியார் நிலங்களில் வளர்க்கப்படும் சந்தன மரங்களை அறுவடை செய்திட மாவட்ட வனத்துறையிடம் அனுமதி பெற வேண்டும். அறுவடை செய்த சந்தன மரக்கட்டைகளை வனத்துறையினர் நடத்தும் ஏலத்தின் மூலம் நல்ல விலைக்கு விற்பனை செய்யலாம். தனியாருக்கும் விற்பனை செய்யலாம். 20% தொகையை அரசுக்கு வரியாக செலுத்த வேண்டும். எனவே விவசாயிகளும் பொதுமக்களும் விவசாய நிறுவனங்களும் ஆர்வமுடன் சந்தன மரங்களை வளர்க்க முன்வந்துள்ளனர்.

சந்தன மரங்கள் வேலிகளிலும் தரிசு நிலங்களிலும் இயற்கையாகவே வளர்ந்து வறட்சியிலும் பசுமையாக காட்சிதரும் அழகிய தெய்வீக மரமாகும். இந்தியாவின் அனைத்து நிலப்பகுதிகளிலும் அனைத்து தட்பவெப்ப நிலைகளிலும் வளம் குன்றிய பாறை நிலங்களிலும் செழிப்புடன் வளரும் தன்மை கொண்டது. சந்தன மரங்களை வீடுகளிலும் பூங்காக்களிலும் விவசாய நிலங்களிலும் பள்ளி, கல்லூரி, தொழிற்சாலை, கோயில் வளாகங்களிலும் வளர்ப்பதன் மூலம் சுற்றுச்சூழல் மேம்பாடு அடைவதுடன் 12 ஆண்டுகளுக்குப் பின் பலகோடி ரூபாய் அன்னியச் செலாவணியை ஈட்ட முடியும்.

ஒரு கிலோ சந்தன மரக்கட்டை 6000 ரூபாய் வரை வனத்துறையினர் நடத்தும் ஏலத்தின் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. 15 ஆண்டுகள் வளர்ந்த ஒரு சந்தன மரத்தின் மூலம் 30 ஆயிரத்திற்கு மேல் வருமானம் கிடைக்கும். ஊடுபயிராக வளர்க்கப்படும் மரங்களின் மூலம் தனி வருமானம் பெறலாம்.


மலைவேம்பு

மலைப்பகுதிகளில் நீரோட்டம் இருக்கும் இடங்களில் மட்டுமே மலைவேம்பு வளர்ந்து நிற்கிறது. எனவே இதற்கு நீர்ப்பாசனம் அவசியம். கன்று நடவு செய்தபிறகு முதல்3 ஆண்டுகளுக்கு வாரம் ஒரு முறை கட்டாயம் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். எனவே தண்ணீர் பாசன வசதி இல்லாத இடங்களில் சாகுபடி செய்வதைத் தவிர்க்க வேண்டும். மீறிச்செய்தால் பொருளாதார ரீதியாகப் பலன் கிடைக்காது. அதே சமயம் நீர் தேங்கி நிற்கும் களிமண் நிலத்தில் சாகுபடி செய்தாலும் கன்றுகள் அழுகிவிடும். எனவே வடிகால் வசதியுள்ள நிலமாக இருக்க வேண்டும்.

கன்று நடவு செய்த இரண்டாம் ஆண்டே தீக்குச்சி கம்பெனிகளுக்கு விற்கலாம். மின்சாரம் தயாரிக்க எரிபொருளாகவும் மலைவேம்பு மரங்களைப் பயன்படுத்தலாம். நான்கு ஆண்டுகளுக்கு மேல் வளர்ந்த மரங்கள் பிளைவுட் தொழிற்சாலைகளில் இருந்து வந்து வாங்கிக் கொள்கிறார்கள். பூச்சிகள் அரிப்பதில்லை. எனவே வீடுகளில்கூட மரச்சாமான்களுக்காக இம்மரத்தை பயன்படுத்துகிறார்கள்.

Monday, August 15, 2011

விவசாயத் தகவல் ஊடகம்

விவசாயத் தகவல் ஊடகம் வேளாண் சார்ந்த சேவைகளை வழங்கி வரும் ஊடக நிறுவனம் ஆகும். இங்கே வேளாண் சார்ந்த தகவல்களை பரிமாறிக்கொள்ள தமிழில் ஒரு களம் கண்டுள்ளோம். அனைத்து விதமான வேளாண் சார்ந்த தகவல்களும் இங்கே அளிக்க நாங்கள் முனைந்து வருகிறோம்.விவசாயத் தகவல் ஊடகம்



உழவர்கள் தகவல் மையம் - உழவர்களுக்கான தொலைபேசி வழி தகவல் மையம்..
அழைக்கவும்... 7 708 709 710
மேலும் விபரங்களுக்கு
www.fic.ztn.in

Sunday, August 7, 2011

"மரம் நடுதல்"

மரம் செடிகளை அதிக அளவில் வளர்க்க வேண்டும், ஒரு இயற்கையான சூழ்நிலையை நமது இடத்தில் வைத்து இருக்க வேண்டும் என்பதில் அதிக ஆர்வம், அதனால் நம்மால் முடிந்த அளவு நம் வீட்டை சுற்றி உள்ள இடங்களில் மரங்கள் வைக்கவும் , அதே போல மற்றவர்களையும் மரம் வளர்க்க கூறி வலியுறுத்தியும் வருவோம்.

தற்போது மரம் நடுவது என்பது அரசியல்வாதிகள் பொதுநலவாதிகள் ஆன்மீகவாதிகள் என்ற எந்த பாகுபாடும் இல்லாமல் அனைவரும் செய்யும் காரியம் என்றாகி விட்டது.
முதலில் மரம் நடுகிறார்கள் ஐம்பதாயிரம், ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடுகிறார்கள் பின்னர் அவர்களது வேலை மரம் வைப்பதோடு முடிந்தது பராமரிப்பது கிடையாது. இதில் தனியார், அரசு, ஆன்மிகம் என்று எவரும் பாகுபாடு இல்லை. இவ்வாறு ஆயிரக்கணக்கில் செடிகளை வைத்து அவற்றை கருக செய்வதற்கு இவர்கள் எதற்கு நடனும்.

இதில் ஒரு சிறு ஆறுதல் அப்படியும் தப்பி தவறி ஒரு சில செடிகள் தப்பி பிழைத்து விடுகின்றன.பொதுவாக அரசாங்கம் செடிகளை வைத்தாலும், அதை ஒரு சில இடங்களிலேயே சரியாக பராமரிக்கிறார்கள், பெரும்பான்மையான இடங்களில் அங்கே செடி வைத்ததற்கான அடையாளமே இருக்காது (அந்த கூண்டு மட்டும் காணலாம்).

சரி நமது அரசாங்கங்கள் தான் அப்படி செய்ய பழகி விட்டது, இதில் கவலை பட என்ன இருக்கிறது! என்று நம்மை சமாதான படுத்திக்கொண்டாலும், மற்றவர்களும் இதை போல தான் நடந்து கொள்கிறார்கள் என்பதை தவிர்க்கவேண்டும்.

வருடாவருடம் பலர் மரம் நடுவதாக அறிவிப்பு செய்து விளம்பரப்படுத்தி பெரிய அளவில் செய்வார்கள். அதே போல் செடி நட்டாலும் பாதுகாப்பு இன்றி செடி பட்டுபோய் விடுகிறது. அதற்க்கு பாதுகாப்பாக வைத்த குச்சிகள் தளைத்து!! பின் தண்ணீர் விடாததால் பின் அதுவும் வறண்டு போய் விடுகிறது,. இதை போல மரம் நடுகிறேன் செடி வளர்க்கிறேன் என்று விளம்பரத்திற்காக வெட்டி வேலை செய்வதை தவிர்த்து,வைத்த செடியை பேணி பாதுகாத்து வளர்க்க வேண்டுகிறோம் .

மரம் நடுவது என்பது மிகச்சிறந்த செயல் அதில் எந்த சந்தேகமுமில்லை, தற்போது பூமியில் வெப்பத்தின் அளவு அதிகரித்து வரும் வேளையில் இயற்கையின் அருமையை இன்னும் உணராமல் இருப்பது தான் தவறு.

ஆனால் இதை போல விளம்பரத்திற்காக லட்சம் செடிகளை நடுகிறேன் என்று உருப்படியாக 100 செடி கூட நல்ல முறையில் வளர்க்காமல் இருப்பதற்கு எதற்கு அத்தனை செடிகள் நடவேண்டும்? செடியை நட்டால் மட்டும் போதுமா! அதை பராமரிக்க வேண்டாமா! எத்தனை செடிகளை நடுகிறோம் என்பது முக்கியமல்ல அதில் எத்தனை செடியை நன்றாக வளர்த்தோம் என்பதே கேள்வி! . ஆசை இருந்தால் மட்டும் போதுமா! அதை அடைவதற்க்குண்டான சரியான முயற்சியில் இறங்க வேண்டாமா! இவர்களை போன்ற அமைப்புகள் 100 செடிகளை நட்டாலும் அதை சரியான முறையில் பாதுகாத்து வளர்த்தாலே மிகப்பெரிய சமுதாய தொண்டு.
இது வரை இதை போல லட்ச கணக்கில் நட்டதற்கு இந்நேரம் தமிழகம் அமேசான் காடு மாதிரி ஆகி இருக்க வேண்டும்!! இதில் அதிக அளவில் மரம் நட்டு கின்னஸ் சாதனைக்கு கூட முயற்சித்தார்கள் என்று நினைக்கிறேன், இதை போல விளம்பரங்களே இவர்களுக்கு முக்கிய நோக்கமாக உள்ளது மரம் வளர்ப்பதில் இல்லை. இவர்கள் செய்யும் இந்த செயலில் ஒரு சில செடிகள் எப்படியாவது தம் கட்டி உயிர் பிழைத்து விடுவது மனதிற்கு ஆறுதலும் சந்தோஷமும் அளிக்கும் செய்தி.

இயற்கையின் மகத்துவத்தை உணராதவரை நமது பகுதி முன்னேற வாய்ப்பில்லை. இதன் அருமை உணராமல் எப்படி தான் வறட்டு மனம் கொண்டவர்களாக சி(ப)லர் இருக்கிறார்களோ! மரம் வளர்ப்போம்! மழை பெறுவோம்!!


மரம் வளர்ப்பு சம்பந்தமாக எங்கே உதவிகள் கிடைக்கும்?

இப்பகுதி, முன் அனுபம் இல்லாதவரால் எழுதப்பட்டது. தகவல் பிழைகள், மேம்பட்ட தகவல்களை பின்னூட்டத்தில்(Comments) தெரிவிக்கவும்.

மரம் வளர்ப்பு சம்பந்தமாக எங்கே உதவிகள் கிடைக்கும்?


விவசாய இதழ்கள்
இங்கே உங்களுக்கு வணிக முறை மரம் வளர்ப்பு பற்றி தகவல்கள் கிடைக்கலாம்

  1. பசுமை விகடன்
  2. பூவுலகின் நண்பர்கள்
தன்னார்வ இயக்கங்கள்
  1. பசுமைக்கரங்கள் - கோவையை தலைமை இடமாக கொண்டு இயங்கும் ஈசா யோக மையத்தின் உதவியோடு இயங்கும் அமைப்பு
  2. நிழல்கள் - சென்னையில் இயங்கும் மரம் வளர்ப்பு இயக்கம்
  3. Chennai Social Service - சென்னையில் இயங்கும் மரம் வளர்ப்பு இயக்கம்
விவசாய, வனக் கல்லூரிகள் இங்கே உங்களுக்கு வணிக முறை மற்றும் தன்னார்வ மரம் வளர்ப்பு பற்றிய தகவல்கள் கிடைக்கலாம்
  1. தமிழ்நாடு விவசாயப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர். இணையதளம்: http://www.tnau.ac.in
  2. வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், மேட்டுப்பாளையம். Forest College and Research Institute, Mettupalayam. இணையதளம்: http://www.fcrinaip.org
  3. தமிழகத்தில் உள்ள விவசாய, வனக் கல்லூரிகளின் தொகுப்பு: http://www.tnau.ac.in/acad/colleges.html
அரசு நிறுவனங்கள் இங்கே உங்களுக்கு வணிக முறை மரம் வளர்ப்பு பற்றிய தகவல்கள் கிடைக்கலாம்
  1. கோயம்புத்தூரில் உள்ளது Institute of Forest Genetics and Tree Breeding என்ற அரசு நிறுவனம். இவர்கள் மர விதைகள், மரம் வளர்ப்பு முறைகளை சொல்லி தருகிறார்கள். இணையதளம்: http://ifgtb.icfre.gov.in

Thursday, June 30, 2011

கருங்காலி மரம்



மரங்கள் மனிதனுக்கு ஆதார மானவையாகத் திகழ்கின்றன. மரங்கள்தான் மனித இனத்தை வாழ வைக்கும் சக்திகளாக விளங்குகின்றன. இதனால் தான் நம் முன்னோர்கள் கோவில்களில் தல விருட்சமாக மரங்களை வளர்த்து வணங்கினர்.

ஆனால் இன்று காடுகளில் உள்ள மரங்களை அழித்து கான்கிரீட் காடுகளாக மாற்றிக்கொண்டு வருகிறோம். இதனால் எதிர்கால சந்ததியினருக்கு நாம் கொடுப்பது பலமற்ற உடலையும், நோயும்தான்.

மரங்களின் மருத்துவப் பயன்கள் அளவற்றவை. எதிர்விளைவு களை ஏற்படுத் தாதவை. இத்தகைய சிறப்பு வாய்ந்த மரங்களில் கருங்காலி மரமும் ஒன்று.
அத்தகைய கருங்காலி மரத்தின் விளையும் அதிகம், விவசாய்கள் வளர்பதற்கு ஏற்றமரம், கருங்காலி மரத்தின் நாற்றுகள் மலிவான விளையில் கிடைக்கிறது, வெப்பத்தை தங்கிவளரும். இம்மரத்திலிருந்து பெறப்படும் கட்டைகள் மிக உறுதி மிக்கவை. கருப்பு நிறமுடைய இக்கட்டைகள் பல்வேறு பொருட்கள் செய்ய பயன்படுகின்றன. நூற்றாண்டுகளாக இரும்பை ஒத்த உறுதியுடன் கூடிய பலகைகள் இம்மரத்தில் இருந்து பெறப்படுகின்றன. குறிப்பாக இந்த மரத்தின் நடுப்பாகமான கருமை நிறம் கொண்டப் பகுதியை வைரம் என்பர். அநேகமாக கருங்காலி மரத்தில் இருந்தே "உலக்கை" செய்யப்படுகிறது. சில இடங்களில் கருங்காலி அல்லாத பலகைகளில் இருந்து உலக்கை செய்யப்பட்டாலும், கருங்காலி உலக்கைகளுக்கான பெறுமதியை மற்றையப் பலகைகள் பெறுவதில்லை. இது மட்டுமின்றி கருங்காலி மரத்தின் வேர், பட்டை, பிசின் போன்றவைகளிருத்து மருந்துப் பொருட்களும் தயார் செய்யப் படுகின்றன.

கருங்காலி மரத்தை  பச்சைத் தங்கம் என மர ஆர்வலர்கள் அழைப்பாங்க. இந்த மரத்தில்தான் குழந்தைகளுக்கு மரப்பாச்சி பொம்மைகள் செய்வாங்க. சாதாரணமாக, விளையாட்டுப் பொருட்களை புள்ளைங்க வாயில்வைக்கும். ஆனா,இந்த மரம், நோய் நீக்கி. அதனால், எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது.

கருங்காலி பற்றிய கூடுதல் தகவலுக்கு விடியோவை பாருங்க
 

Saturday, March 19, 2011

பசுமை போர்வை திட்டம்

  புவி வெப்பமயமாதலை தடுக்க, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், மாவட்டம் தோறும் தேர்வு செய்யப் பட்ட நான்கு பள்ளிகளில், 'பசுமை போர்வை' திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.புவி வெப்பமயம்: தொழிற்சாலை கள், வாகன பெருக்கம் உட்பட பல்வேறு விஞ்ஞான வளர்ச்சியால் ஏற்படும் புகை காரணமாக புவி வெப்பமயமாவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதை தடுக்க சுற்றுச்சூழல் துறை சார்பில் இயற்கை சார்ந்த பொருள்கள் அழியாமலும், புதுப்பிக்கவல்ல எரிசக்திகளை பயன்படுத்த வலியுறுத்தப்பட்டு வருகிறது.புதிய திட்டம்: புவி வெப்ப மயமாதலை தடுக்கவும், கரியமிலவாயு தாக்கத்தை குறைக்கும் விதமாகவும் பள்ளிகளில், 'பசுமை போர்வை' என்ற புதிய திட்டத்தை செயல்படுத்த மாசு கட்டுப்பாட்டு வாரியம் திட்டமிட்டுள்ளது.

இதற்காக இரண்டு உயர்நிலை, இரண்டு மேல்நிலைப்பள்ளிகள் தேர்வுசெய்யப்பட உள்ளன. தமிழகத்தில், சென்னை நீங்கலாக பிற மாவட்டங்களில் இத்திட்டத்தை செயல்படுத்த, மாவட்டத்திற்கு தலா ஒரு லட்சம் வீதம், 31 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒரு பள்ளிக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த நிதியில் பள்ளி வளாகத்தில் தேவையான மரக்கன்று களை நட்டு பாதுகாத்து வளர்க்கப்பட உள்ளன.இந்த கல்வியாண்டிலிருந்து ஆண்டுதோறும், ஒவ்வொரு மாவட்டத்திலும், நான்கு பள்ளிகளை தேர்வு செய்து, இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இதற்கான நிதி பயன்படுத்தும் விதம், திட்ட அறிக்கையை பள்ளிகளிடம் இருந்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் கேட்டுக் கொண்டுள் ளது.ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர் தலைமையில், முதன்மைக்கல்வி அலுவலர், மாவட்ட பொறியாளர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்த உள்ளனர்.