Saturday, April 7, 2018

"தேற்றான் மரம்" நாம் மறந்துவிட்ட மரம்


தேற்றான் மரம் 'நம் மனம் மறந்துவிட்ட மரம்'  என் பள்ளி பருவத்தில் என்வீட்டின் அருகிலும் பள்ளி அருகிலும் இம் மரம் இருந்தது பள்ளி தோழர்களோடு சேர்ந்து இதன் காய்களை பறித்து விதை எடுத்து சாப்பிடுவோம், எங்கள் பள்ளி அருகில் இன்றும் இம் மரம் உயிர்ப்புடன் இருக்கிறது தலவிருட்சம் என்பதால் (மரத்தடியில் சில சிலைகளை வைத்து வழிபடுகின்றனர்) சரி இதன் சிறப்புகளை பார்ப்போம்.......                
தேற்றான்கொட்டை... இது தேற்றா அல்லது தேத்தா என்ற மரத்தின் விதையாகும். `Strychnos Potatorum’ என்ற தாவரவியல் பெயரைக்கொண்ட இந்த மரம், நம் முன்னோர்களால் போற்றி வளர்க்கப்பட்டது. தற்போது இதன் முக்கியத்துவத்தை இழந்து அதன் பயன்களை நம் வருங்கால சந்ததியினர் அறிய முடியாத நிலைக்கு ஆளாகியுள்ளனர்.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக தேற்றாமர வனம் (கதகாரண்யம்), தென்கயிலை, திருக்கோளிலி, புஷ்பவனம் என்றெல்லாம் அறியப்பட்ட திருக்குவளை கோயிலின் ஸ்தல விருட்சமான தேற்றான் கொட்டை மரம் மிகவும் அரிதான மரங்களில் ஒன்று. தேற்றா மரத்துக்குப் பல பெயர்கள் உள்ளன. அவற்றில் `இல்லம்’, `சில்லம்’, `கதலிகம்’ என்பது போன்ற பல பெயர்களோடு `பிங்கலம்’ என்றும் தொல்காப்பியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. `தேறு’, `தேத்தாங்கொட்டை’ என்ற பெயர்களும் உள்ளன.
தேற்றான் மரம் பளபளப்பாகவும், கரும்பச்சை நிற இலைகளையும், உருண்டையான விதைகளையும் கொண்ட குறு மரம். தமிழகத்தின் மலைக்காடுகளிலும் சமவெளிகளிலும் பரவலாகக் காணப்படுகிறது. தேற்றான் மரத்தின் பழம், விதைக்கு மருத்துவக் குணங்கள் உள்ளன. 
பொதுவாக, முற்காலங்களில் நம் முன்னோர் தேற்றாங்கொட்டையை சேறும் சகதியுமாக கலங்கிக் காணப்படும் நீரைத் தெளியவைக்கப் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். குளம், ஊருணி போன்றவற்றில் இருந்தே குடிநீர் உள்ளிட்ட மற்ற தேவைகளுக்கும் நீர் பெறப்பட்டது. அத்தகையச் சூழலில் கலங்கலாக இருக்கும் நீரை அப்படியே குடிக்க முடியாது என்பதால், தேற்றான்கொட்டையால் நீரைத் தெளியவைத்து பயன்படுத்தினர், எனவே தேற்றாங்கொட்டையை நீர் சுத்திகரிப்பான் என்றும் அழைக்கலாம்.  
இது மட்டுமல்ல ஏரி, குளம், குட்டைகளில் மீன்களைப் பிடிக்கவும் தேற்றான்கொட்டை மரத்தின் சக்கையை நம் முன்னோர் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். அதாவது, அந்த மரத்தின் காய்களை இடித்து, கொட்டையை எடுத்த பிறகு கிடைக்கும் சக்கையை அந்த நீர்நிலைகளில் போடுவார்களாம். அப்போது இந்தச் சக்கை, நீரோடு கலக்கும்போது மீன்களுக்கு ஒருவித மயக்கத்தை ஏற்படுத்துவதால், மீன்கள் கரை ஒதுங்கிவிடுமாம். அதன் பிறகு மிக எளிதாக அந்த மீன்களை எடுத்து வந்துவிடுவார்களாம்.
தேற்றான்மரத்தின் பழங்கள் நாவல் பழம் போன்று காணப்படும். பெரும்பாலும், இதன் விதைகளே மருத்துவத்துக்கு பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாக இது வெட்டை, உட்சூடு, வயிற்றுக்கடுப்பு, மூத்திர எரிச்சல், மூத்திரக்கடுப்பு, ரணம் போன்ற கோளாறுகளைச் சரி செய்யக்கூடியது. மந்தத்தை உண்டாக்கும் இது கண்ணுக்கு சிறந்த மருந்து. இவை எல்லாவற்றுக்குமேலாக தேறாதவனையும் தேற்றும் மகிமை கொண்டது தேற்றான்மரம்.
தேற்றான்கொட்டைத் தூள், திரிகடுகுத் தூள், திரிபலாத் தூள், சீரகத் தூள், சித்தரத்தைத் தூள் ஆகியவற்றுடன் பால் சேர்த்து பசைபோல் தயாரித்துக்கொள்ளவும். அதன் பிறகு இதனோடு நான்கு பங்கு வெல்லம், ஒரு பங்கு நீர்விட்டு பாகு தயாரித்து அதனுடன் ஏற்கெனவே பசைபோலத் தயாரித்து வைத்திருக்கும் மருந்துக் கலவையைச் சேர்த்துக் கிளற வேண்டும். இது அல்வா பதத்துக்கு வந்ததும், நெய்விட்டுக் கிளறி இறக்க வேண்டும். நெய் தனியாகப் பிரிந்து வரும்போது அடுப்பிலிருந்து இறக்கி, தேன் சேர்த்துக் கலக்க வேண்டும். இந்த லேகியத்தை காலை, மாலை வேளைகளில் நெல்லிக்காய் அளவு சாப்பிட்டு வந்தால் மெலிந்த தேகம் தேறி வரும்.
இப்படி நாம் மறந்துவிட்ட மருத்துவகுணம் உள்ள மரங்கள் ஏராளம் நம்மை பொறுத்தவரை விலை விற்றால்தான் அது நல்லமரம் பாதுகாக்க வேண்டியமரம், எங்கள் ஊரில் ஒருவர் என்னிடம் வாசு இது என்ன மரம் என்றார், நான் 'இது புண்ணை மரம் என்றேன்'  அவர் இது எதற்கு பயன்படும் விலை விற்குமா என்றார் 'நான் இது விறகு விலைக்குத்தான் போகும் இதன் காய்களை எண்ணெய் எடுத்து பயோ-டீசலாக பயன்படுத்தலாம் என்றேன்' மற்றொருநாள் இது என்ன மரம் என்றார் 'இது அத்தி மரம்' என்றேன் மரம் விலை போகுமா என்றார் 'மரம் அதிக விலைபோகாது ஆனால் இதன் பழங்கள் சத்து நிறைத்தது நல்ல விலை போகும் என்றேன்' சில மாதம் சென்றபின் அத்த வழியாக சென்றபொழுது அந்த மரங்களை பார்த்தேன் காணவில்லை வெட்டப்பட்டிருந்தது இப்படியே பல மருத்துவகுணம் உள்ள மரங்களை இழந்துவிட்டோம் பணம் காய்க்கும் மரங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன.........