Thursday, December 13, 2018

தெய்வீக விருட்ஷம் எட்டி மரம்!



வாஸ்துபடி வீட்டில் வளர்க்க வேண்டிய மரங்கள்


Sunday, October 14, 2018

எது உண்மையான பிரியாணி இலை

பிரிஞ்சி சர்வ சுகந்தி லவங்கம் இது மூன்றையும்மே பிரியாணி இலை பிரிஞ்சி இலை அப்படினு சொல்றங்க எது உண்மையான பிரியாணி இலைனு வீடியோ பார்த்து தெறித்தது கொள்ளுங்கள்




அசோகமரம் நெட்டுலிங்கமரம் இரண்டும் ஒன்றா? அசோகமரத்திற்கும் நெட்டுலிங்கமரத்திக்கும் உள்ள வித்யாசம்


Sunday, September 9, 2018

அரசனை நம்பி, கைவிடப்பட்ட புரசம்

புரசு (எ)  பலாசம்  மரம் 


நன்றி : Tamil The Hindu
பலாச மரத்தின் காயம்பட்ட இடங்களிலிருந்து ரூபி சிவப்பு நிறச் சாறு கண்ணீர்த் துளி வடிவத்தில் வெளிப்பட்டுக் காணப்படும். பெங்கால் கினோ எனப்படும் இந்தக் கோந்து/பிசின் தொடக்கத்தில் ஒளிபுகும் தன்மை கொண்டிருக்கும். நாட்பட நாட்பட இதன் நிறம் மங்கி, ஒளிபுகாத தன்மையைப் பெறும்.
பலாசத்தின் மற்றொரு முக்கியப் பண்பு, இதைத் தாக்கும் அரக்குப் பூச்சியான கெர்ரியா லக்காவால் உருவாகிறது. இந்த மரத்தின் தண்டுப் பகுதியில் வளரும் இந்தப் பூச்சி அரக்கை உண்டாக்குகிறது. ஷெல்லாக் எனப்படும் இந்த அரக்கில் மணமுள்ள பிசின், நிறப் பொருள், மெழுகு, புரதங்கள், கனிம உப்புகள், மணப் பொருட்கள் போன்றவை காணப்படுகின்றன.
ஆப்பிள், ஆரஞ்சு பழங்களின்மேல் இந்த மெழுகு பூசப்பட்டு, அவற்றின் சேமிப்புக் காலம் அதிகரிக்கப்படுகிறது. அரக்கு உற்பத்திக்காகவே இந்தியாவின் மத்திய மாநிலங்களில் இந்தத் தாவரம் அதிகமாக வளர்க்கப்படுகிறது.
அரசனை நம்பி…
இந்தியப் புராணங்களிலும் சடங்குகளிலும் சம்பிரதாயங்களிலும் முக்கியத்துவம் பெற்ற பலாசம் பிரம்மாவின் மரம் (பிரம்ம தரு) என்று கருதப்படுகிறது. இதன் புனிதத்தன்மை காரணமாக இந்திரப்பிரஸ்தாவிலும், த்வைத வனத்திலும் இது வளர்க்கப்பட்டதாக மகாபாரதம் குறிப்பிடுகிறது.
பலாசம் இல்லாமல் பல இந்தியச் சடங்குகளும் சம்பிரதாயங்களும் இல்லை எனலாம். சதபாத பிரம்மனா என்ற நூலின்படி வேள்வித் தீயைச் சுற்றிப் போடப்படும் புனிதக் குச்சிகளைத் தரும் மிக முக்கியமான மரங்களில் பலாசம் முதலிடம் பெற்றது.
குழந்தை இல்லாத தமிழகப் பெண்கள் பலாச மரத்தை ஒரு மண்டலம் சுற்றிவந்தால் பிள்ளைப் பேறு கிடைக்கும் என்ற நம்பிக்கை, பின்னர் மாறிப் பெண்கள் அரச மரத்தை வலம்வரத் தொடங்கினர். அதன் காரணமாகத் தோன்றியதுதான் பின்வரும் முதுமொழி என்பார்கள்: அரசனை நம்பிப் புருசனைக் கைவிடுதல் (அரச மரத்தை நம்பிப் புரசு மரத்தைக் கைவிடுதல்).
பிரிக்க முடியாத பிணைப்பு
திருமணத்தின்போது திருமண அறை அல்லது மேடையில் போடப்படும் தற்காலிக நுழைவாயிலுக்கான மர நிலைகளுக்கும் இந்த மரம்தான் பயன்படுத்தப்படுகிறது. மணப்பெண்ணை ஏற்றிச் செல்லும் வண்டிகள் இதன் மலர்களால் அலங்கரிக்கப்படுகின்றன.
இறப்புச் சடங்குகளிலும் பலாசம் பயன்படுத்தப்படுகிறது. இறந்தவரின் உடல் எரிக்கப்பட்ட அடுத்த நாள் அவருடைய எலும்புகள் சேகரிக்கப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தில் புதைக்கப்பட வேண்டும். அந்த இடம் பலாச இலைக் கொத்தால் தூய்மைப்படுத்தப்பட்டு, எலும்புகள் புதைக்கப்பட்ட பின் அந்த இடம் ஒரு மண் மேடாக ஆக்கப்படுகிறது. இப்படியாக, இந்தியச் சடங்குகளிலும் சம்பிரதாயங்களிலும் பலாசம் முக்கியத்துவம் பெற்றுவந்துள்ளது.
இந்துக்கள் மட்டுமின்றி, புத்த மதத்தினரும், சமண மதத்தினரும் பலாச மரத்தைப் புனித மரமாகக் கருதினர். மாகாளிக்கு உயிர்ப் பலி கொடுப்பதற்குப் பதிலாக மத்தியப் பிரதேசப் பகுதிகளில் ரத்தச் சிவப்பான பலாச மலர்கள் பலிப் பொருளாகப் படைக்கப்படுகின்றன.
சோழர் கோயில்களில்…
பக்தி இலக்கியக் காலத்திலிருந்தே (ஏறத்தாழ 7-ம் நூற்றாண்டு) பல தமிழகக் கோவில்கள் பலாச மரத்தோடு தொடர்புபடுத்தப்பட்டுவந்துள்ளன. சில கோவில்களின் தல மரமாகவும் பலாசம் திகழ்ந்துவந்துள்ளது. இவற்றில் பெரும்பாலான கோயில்கள் பண்டைய சோழ நாட்டைச் சேர்ந்தவை; கிழக்கு கடற்கரைக்கு மிக அருகிலோ, ஓரளவு அருகிலோ அமைந்தவை. திருப்பேர் நகர், திருத்தலைசெங்காடு கோவில்களில் பழைய தலமரமான பலாசம் தொடர்ந்து காணப்படுகிறது.
ஏறத்தாழ அனைத்துத் தல மரங்களும் நல்ல மருத்துவப் பயன்பாடு கொண்டவை. இவற்றின் மருத்துவப் பயன்கள் கருதியே தல மரங்களாகச் சேர்க்கப்பட்டிருக்கலாம் என்று ஒருசிலர் கருதுகின்றனர்.

Thursday, July 19, 2018

தீவன மரங்கள் வளர்ப்பு


கால்நடை வளர்த்தால் தான் விவசாயிகள் நீடித்த வேளாண்மையை எளிதில் செய்யலாம், கால்நடை வளர்ப்பதன் மூலம் வருமானம் கிடைப்பதுமட்டுமல்லாமல் உரச்செலவும் குறையும், ஆம் கால்நடை கழிவுகளை உரமாகபயன்படுத்தலாம் செயற்கை உரங்களை தவிர்க்கலாம், இயற்க்கை உரங்களை பயன்படுத்துவதால் பல்லுயிர் பெருக்கம் நடைபெற்று வேளாண்மை சிறக்கவும். கால்நடை வளர்ப்பில் சிறந்து விளங்கவேண்டுமென்றால் தீவனமேலாண்மையை அவசியம் அடர்தீவனம் உலர்தீவனம் பசுந்திவனம் என சரிவிகிதத்தில் கொடுக்கவேண்டும்,  சரி தீவன மரம்வளர்ப்பு பற்றி பார்ப்போம்:

சவுண்டல்(சூபா  புல்), அகத்தி, கிளரிசீடியா, செடிமுருங்கை, பூவரசு, வாதநாராயணன் போன்ற மரங்கள் தீவனத்திற்க்காக வளர்க்க உகந்தவை இவை குறுக்கியகாலத்தில் வளரக்கூடியவை மட்டுமல்ல ஒடிக்க ஒடிக்க நன்கு வளரக்கூடியவை இவற்றை வேலிப்பயிராகவும் வறப்புப்பயிராகவும் தனிப்பயிராகவும் வளர்க்கலாம், அகத்தி செடிமுருங்கை மரங்கள் கால்நடைகளுக்கு சத்துக்களை மட்டுமல்ல ஆரோக்கியத்தையும் தருபவை முருங்கை இலைகளை உணவாக கொடுக்கும் பொழுது இனவிருத்தியும் நன்றாக இருக்கும்.                 


Friday, July 13, 2018

வாழ்வை வளமாக்கும் விருட்ச வழிபாடு

நம் நட்சத்திர பாதத்திற்கு உரிய மரம்வளர்த்து பயன்பெறுவோம்   


Saturday, June 16, 2018

தமிழகத்தில் தோற்றுப்போன திட்டத்தை அஸ்ஸாமில் சாதித்துக்காட்டிய தமிழர்..!

நன்றி விகடன், எம்.கணேஷ் 

எண்பதுகளில், தமிழகத்தின் கூடலூர் – நிலம்பூர் பகுதியில் இருந்த ஆயிரக்கணக்கான ஏக்கரில் வளர்க்கப்பட்டிருந்த யூக்கலிப்டஸ் மரங்களை மொத்தமாக அழித்த தமிழக வனத்துறை, அங்கே, தமிழக பாரம்பர்ய மரங்களை மீட்டெடுக்கும் முயற்சி ஒன்றில் இறங்கியது. அதற்கு ’ஜீன் புல் புராஜெக்ட்’ என பெயரிட்டது. அதாவது நம் பாரம்பரிய மரங்களின் ஜீன்களை பெருக்குவதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம். திட்டப்படி நிலம் சீர் செய்யப்பட்டு நம் பாரம்பர்ய மரங்கள் அங்கே நடவு செய்யப்பட்டது. அதிகாரிகள் மாற்றம், உள்ளூர் காரர்களின் ஆக்கிரமிப்பு என காலப்போக்கில் அந்த புராஜெக்ட் காணாமல் போனது மட்டுமல்லாமல், இது ஒரு தோல்விக்குறிய திட்டம் என தமிழக வனத்துறையால் முத்திரை குத்தப்பட்டது. அன்று ’தோல்வித்திட்டம்’ என சொல்லப்பட்ட இதே திட்டத்தை அஸ்ஸாமில் செயல்படுத்தி சாதித்துக்காட்டிருக்கிறார் தமிழகத்தைச் சேர்ந்த அஸ்ஸாம் வன உயர் அதிகாரி சிவக்குமார். அவரிடம் போனில் பேசினோம்…
“தமிழகத்தில் கூடலூர் பகுதியில் ஜீன் புல் புராஜெக்ட் செயல்படுத்தப்படும் போது நான் மேட்டுப்பாளையம் வனக்கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தேன். அந்த புராஜெக்ட்டை நேரில் கண்டவன் நான். அதன் மீது எனக்கு எப்போது ஈர்ப்பு இருந்துகொண்டே இருந்தது. கல்லூரிப் படிப்பு முடிந்த பின் அஸ்ஸாம் வனத்துறையில் வேலை. அஸ்ஸாம் மாநிலத்தைப் பொருத்தவரை காடுகளின் பரப்பளவு அதிகம். ஒரு காலத்தில் காட்டில் இருக்கும் மரங்களை வெட்டுவதற்காகவே அஸ்ஸாம் வனத்துறையின் கீழ் தனியாக ஒரு துறை செயல்பட்டது. அதன் விளைவாக அஸ்ஸாம் மாநிலத்தின் அடையாளங்களாக இருந்த பல பாரம்பர்ய மரங்கள் அழிவை நோக்கி சென்றுவிட்டன. இப்போது மரம் வெட்டுதல் தடை செய்யப்பட்டாலும், அந்த காலத்து மரங்களை மீட்க முடியவில்லை. அப்போது தான் தமிழ்நாட்டில் முயன்ற ஜீன் புல் புராஜெக்ட் பற்றி நினைவுக்கு வந்தது. அதைப் பற்றி என் உயர் அதிகாரிகளிடம் பேசினேன். அவர்கள் சம்மதம் தெரிவித்தார்கள். ஆக்கிரமிப்பில் இருந்த வனத்துறைக்குச் சொந்தமான நிலத்தை மீட்டு இந்த திட்டத்திற்காக நிலம் ஒதுக்கினோம். அடுத்ததாக என்னென்ன மரங்களை நடலாம் என்று ஓர் அட்டவணை உருவாக்கினோம். மொத்தமாக 166 வகை மரங்களை அடையாளம் கண்டு அதனை மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கினோம்.
அஸ்ஸாமில்
எங்களுக்கே அதிர்ச்சி தரும் விதமாக அஸ்ஸாமிற்குச் சொந்தமான பாரம்பர்ய மரங்கள் பல காணாமல் போயிருந்தன. பல அழிவின் விழிம்பில் இருந்தன. நான் வனக்கல்லூரியில் படிக்கும் காலத்தில் இருந்து விதைகள் மீதான ஆர்வம் அதிகம். கூடுதல் சப்ஜெக்ட்டாக ‘விதைத் தொழில்நுட்பம்’ தான் படித்தேன். செல்லும் இடங்களில் எல்லாம் விதைகளை சேகரிப்பேன்.  அதனால் என்னிடம் சில விதைகள் இருந்தன. இந்தியா முழுவதும் வனத்துறையில் வேலை பார்க்கும் என் நண்பர்கள் சிலர் விதைகளை கொடுத்து உதவினார்கள். மொத்தமாக 166 மரக்கன்றுகளை உருவாக்கி உலக சுற்றுச்சூழல் தினமான ஜூன் 5 2010ல் நடவு செய்தோம். ஒவ்வொரு வகை மரத்திற்கும் 256 கன்றுகள் வீதம் சுமார் 50 ஹெக்டேர் பரப்பளவில் பிரமாண்டமாக நடவு செய்தோம். முறையான பராமரிப்பு, பாதுகாப்பு என 7 வருடங்கள் ஓடிவிட்டன. இன்று முழுமையாக எல்லா மரங்களையும் மீட்டிருக்கிறேன். இனி அஸ்ஸாமின் பாரம்பர்ய மரங்களை அஸ்ஸாம் முழுவதும் நடவு செய்ய திட்டமிட்டிருக்கிறோம். இதன் மூலம் உள்ளூர் பொருளாதாரம் உயர்வது மட்டுமல்லாமல், பல்லுயிர் பெருக்கமும் அதிகரிக்கும்” என்றவரிடம், என்னென்ன வகையான மரங்களை மீட்டிருக்கிறீர்கள் என்று கேட்டோம்.
அஸ்ஸாமில்
"குறிப்பிட்டு சில மரங்களை சொல்லலாம். ஒரு காலத்தில் அஸ்ஸாம் மாநிலத்தில் ’அகர் வுட்’ என்ற மரம் தான் அதிகமாக இருக்கும். நம்ம ஊர் சந்தமரத்தை விட அதற்கு விலை அதிகம். ஆனால் இன்று அஸ்ஸாமில் எங்குத் தேடினாலும் அகர் வுட்டை கண்டுபிடிக்க முடியாது. அவற்றை மீட்டிருக்கிறோம். அதே போல், ‘போன்சம்’ என்ற ஒரு பாரம்பர்ய மரத்தை மீட்டிருக்கிறோம். இந்த மரத்தை பற்றி சொல்லவேண்டுமென்றால் அஸ்ஸாமின் 7 மாவட்டத்தில் மொத்தம் 13 மரங்கள் மட்டும் தான் இருந்தன. அதுவும் வன அலுவகங்கள் அருகில் இருந்ததால் தப்பித்தன. அடுத்ததாக ’போலா’ என்றொரு வகை மரம். தேக்கை விட உறுதியாகவும், தங்க நிறத்தில் பளபளப்பைக் கொடுக்கக்கூடிய மரம். அஸ்ஸாமில் மொத்தமாக 500 மரங்கள் கூட இருக்காது. இப்படி அழிவின் விளிம்பில் இருந்த பல மரங்களை மீட்டு அவற்றை பெருக்கிக்கொண்டிருக்கிறோம். சுயநலத்திற்கான அழிப்பட்ட மரங்கள் அஸ்ஸாம் மண்ணில் மரங்கள். அவர்களின் கலாசாரத்தோடு தொடர்புடைய மரங்கள். மருத்துவத்திற்கு பயன்பட்ட மரங்கள். விலை அதிகமாக கிடைக்கும் என்பதற்காக அழிக்கப்பட்ட மரங்களால் பல உயிரினங்கள் தங்கள் வாழ்விடங்களை தொலைத்திருக்கின்றன. இன்று அவற்றை மீட்டெடுக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. வரும்  தலைமுறைக்கு காட்டுவதற்கு இன்று மரங்கள் தயாராக இருக்கிறது. அடுத்த கட்டமாக அவற்றை அஸ்ஸாம் முழுவதும் நடவு செய்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த இருக்கிறோம்." என்றார் நிறைவாக.
அஸ்ஸாமில்

Monday, May 21, 2018

மரங்களின் வில்லன் "லொரந்தேசியே"



மரங்களின் வில்லன் லொரந்தேசியே ஒட்டுண்ணிச்செடி, இவை மரக்கிளைகளில் ஒட்டிக்கொண்டு மரத்தின் சாரைஉறின்சி  வாழும் ஒட்டுனிசெட்டியாகும், இது பெரும்பாலும் வேப்பமரங்களை தாக்கும், தற்போழுது குமிழ்,  மாஞ்சியம் போன்ற மரங்களையும் பெரிதும் தாக்குகின்றன, லொரந்தேசியே ஒருமரத்தில் வளர ஆரம்பித்துவிட்டாள் கிளைகளில் முடிச்சுகள் ஏற்படுத்தி ஒவ்வொரு கிளையாக பரவி சிலவருடங்களில் அந்தமரத்தையே படச்செய்துவிடும், இவை வளர ஆரம்பித்துவிட்டாள் அந்தமரம் அதன்பின் பெருக்காது ஒவ்வொரு கிளையாக படஆரம்பிக்கும் கடைசியில் அந்த மரமே பட்டுவிடும்.

பரவாமல் தடுக்க என்னசெய்வது!

லொரந்தேசியே பரவிய கிளையை வெட்டுவதுதான் பரவாமல் தடுக்கும் ஒரேவழி ஆரம்பநிலையிலேயே கிளைகளை வேண்டுவதன் மூலம் மற்றகிளைகளுக்கு பரவாமல் தடுக்கலாம், ஒருவகை வண்ணத்துப்பூச்சிகள் லொரந்தேசியே இலைகளை மட்டுமே உணவாக உண்ணும் அந்த வண்ணத்துப்பூச்சிகள் கொண்டுவந்து விடுவதன் மூலமும் லொரந்தேசியே ஒட்டுண்ணியை கட்டுப்படுத்தலாம், அந்த வண்ணத்துப்பூச்சிகள் குன்னக்குடி வேளாண்அறிவியல் மையத்தில் கிடைக்கும் ஆனால் நமது சீதோசனநிலையில் அவைகளால் இனப்பெருக்கம் செய்யஇயலாது எனவே அந்த வண்ணத்துப்பூச்சிகள் இறந்துவிடும் பல்கிப்பெருக்காது ஆகையால் வண்ணத்துப்பூசிகளைக்கொண்டு  லொரந்தேசியேயை கட்டுப்படுத்த முடியாது.                            

Wednesday, May 9, 2018

மகிழ்விக்கும் மகிழம் மரம்


மகிழம், ஆன்மிக முக்கியத்துவம் கொண்ட ஒரு மரம். இந்து, புத்த, சமண மத மக்களுக்கு இது புனித மரம். இந்து மத வழக்கத்தின்படி சிவபெருமானுக்கு உரிய மரம். எனவே, சிவத்தலங்களில் இது பரவலாக வளர்க்கப்படுகிறது (பெரும்பாலும் தலமரமாக); அதன் காரணமாக இதன் பூ `சிவமல்லி’ என்றும் அழைக்கப்படுகிறது. `வகுளா’, `பகுளா’ என்பவை சிவபெருமானின் வேறு பெயர்கள். மகிழ மரம் முருகன், திருமாலுடனும் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது.
ஆன்மிக முக்கியத்துவம்
திருப்புனவாசல், திருஇராமனதீச்சரம், திருவண்ணாமலை, திருக்கண்ணன்குடி, திருக்கண்ணமங்கை, திருநீடூர், திருநறையூர், திருவொற்றியூர், திருவெஃகா ஆகிய கோயில்களில் மகிழ மரம் தல மரமாகக் காணப்படுகிறது. திருக்கண்ணன்குடியில் காலை, மாலை பூஜைகளிலும், திருக்கண்ணமங்கையில் மார்கழி மாத உற்சவத்துக்குப் பின்பு பத்து நாட்களுக்கு மாலை பூஜைகளிலும் மகிழம் பூ முக்கியத்துவம் பெறுகிறது. கேரளத்தின் சில சிவன் கோயில்களில் (வடக்கும்நாத க்ஷேத்திரத்தில்) பூரம் திருவிழா இந்த மரத்தின் அடியில் நடைபெறுகிறது. சந்திரமுகன் என்ற யக்ஷன் இந்த மரத்தில் உறைந்து காணப்படுவதாகக் கருதப்படுகிறது. மகிழம் பூ நம்மாழ்வாருக்கு உரிய சிறிய பூ என்பதை அவரே “… வன்குரு கூரான் நாட்கமழ் மகிழ் மாலை மார்பினன் மாறன் சடகோபன்” (திருவாய்: 4: 10, 11) என்று பாடியுள்ளார்.
புத்தரோடு தொடர்புடைய ஏழு புனித மரங்களில் மகிழமும் ஒன்று. சாஞ்சி, அமராவதித் தூண்களில் பூக்களுடன் கூடிய மகிழ மரங்கள் காட்டப்பட்டுள்ளன என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது. சமணர்களுக்கும் மகிழம் ஒரு புனித மரமே. சமணத் தீர்த்தங்கரர்களில் ஒருவரான நேமிநாதரின் முத்திரையாக மகிழம் திகழ்கிறது. அவர் இந்த மரத்தடியில்தான் ஞானம் பெற்றதாகக் கருதப்படுகிறது.
மகிழ மரத்தின் பயன்கள்
மகிழம் மிகவும் பயன் தரும் ஒரு மரம். மகிழ மரத்தின் வெவ்வேறு உறுப்புகள் பயன் நல்குகின்றன. மகிழம் பூவின் போதையூட்டும் மணம் (பல உயர்ரகச் சாராய வகைகளைப் போன்று) ஆண், பெண் இருவரிடமும் வயாக்ரா போலக் காம உணர்வைத் தூண்டுவது எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. மதுர ரசத்தில் கோரைக்கிழங்கு, முள்முருக்கு பூக்கள், நந்தியாவட்டை பூக்கள் அல்லது இலை சாற்றைக் கலந்து, அதில் மகிழ மரப் பூக்களை இட்டுப் பின்பு கொழுப்பு, பால், கோஷ்டம் ஆகியவற்றைக் கலந்தால் மகிழம்பூவின் இயல்பு மணம் மேலும் பெருகும் என்று விருக்ஷாயுர்வேதம் நூலில் சுரபாலர் குறிப்பிட்டுள்ளார்.

ஆக்சிஜன் அமுதசுரபி

 பூவின் எண்ணெயைத் தனியாகவோ, சந்தன எண்ணெயுடன் சேர்த்தோ ஊதுபத்தி, முகப்பூச்சு, கிரீம்கள், வாசனைத் திரவியங்கள் போன்றவற்றில் நறுமணமூட்டியாக மகிழம் செயல்படுகிறது. பூச்சாறு பசியைத் தூண்டும், வீக்கத்தைக் குறைக்கும். மரத்தின் பட்டைத்தூளும் வயாகரா போன்று செயல்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் பட்டையையோ, பட்டை கொண்ட குச்சியையோ கொண்டு பல் துலக்கினால் ஆடும் பற்கள் நிலைத்து நிற்கும், ஈறு நோய்கள் குணமாகும், பல் சுத்தமாகும், பயோரியா நோய் குணமாகும், வாய்ப்புண்கள் மறையும். பல் பாதுகாப்புக்கான தலைசிறந்த தாவரங்களில் இது ஒரு முக்கியமான தாவரம்.
சிறுநீரகத்திலும், சிறுநீர்க்குழாய்களில் அதிக அளவு சளி போன்ற பொருட்கள் சுரப்பதைப் பட்டைத்தூள் உட்கொள்வது தடுக்கிறது. மேலும் வயிற்றுப்போக்கு, காய்ச்சல், தோல் வியாதிகள், கருப்பைக் கோளாறுகள் மற்றும் பலமின்மை, ரத்தச் சோகை, புண்கள் போன்றவற்றை மகிழம்பட்டை குணப்படுத்துகிறது.
பழங்குடிப் பயன்கள்
மகிழம் பழம் உண்ணத் தகுந்தது. விதை எண்ணெய், கண் சொட்டு மருந்தாகச் செயல்படுகிறது; உணவுக்குழாய் கோளாறுகளையும், மூட்டு வீக்கங்களையும் நீக்குகிறது. விதையின் பொடி கபம், பித்தத்தைப் போக்குகிறது; விஷ முறிவுக்கும் பயன்படுகிறது. சமீபத்திய ஆய்வுகளின்படி மகிழ மரத்தின் பூக்கள், இலைகள், பட்டை மற்றும் விதைகள் நுண்ணுயிர்க் கொல்லிகளாகவும், குடல் புழு நீக்கிகளாகவும், ஹெச்.ஐ.வி. நோய்த் தடுப்புப் பொருட்களாகவும், கல்லீரல் பாதுகாவலர்களாகவும், அறியும்திறன் மேம்படுத்திகளாகவும் செயல்படுகின்றன. பட்டை நார்கள் துணி நெய்வதற்கும், பட்டையிலிருந்து கிடைக்கும் சாயம் துணிகளுக்கு நிறமேற்றவும் பழங்குடி மக்களால் பயன்படுத்தப் படுகின்றன.
நிழல் தரும் அற்புதங்கள்
பிரகத்சம்ஹிதை என்ற வடமொழி நூல் குறிப்பிடுவது போன்று ஆன்மிகக் காரணங்களுக்காக மட்டுமின்றி, இதர பயன்களுக்காகவும் மகிழ மரம் போற்றிப் பாதுகாக்கப்படவேண்டும். கோயில் தவிர்த்து வீடுகள், பொது இடங்களில் இந்த மரம் வளர்க்கப்பட வேண்டும். இந்த மரத்தின் கார்பன் டை ஆக்ஸைடை நிலைப்படுத்தும் (Carbon dioxide sequestration) திறனும், ஒளிச்சேர்க்கைத் திறனும் மிகவும் சிறப்பானதாக இருப்பதால் பகலில் இதன் நிழல் அதிக ஆரோக்கியமான சூழலை (அதிக அளவு ஆக்ஸிஜனை) பெறலாம். கார்பன் மாசுபாட்டைக் குறைக்கும் முக்கியமான மரங்களில் இதுவும் ஒன்று. இதன் காரணமாகவே தோன்றிய ஒரு நாட்டுப்புறக் கதையின்படி, அருணாசலேஸ்வரரை வேண்டிக்கொண்ட பின்பு, இந்த மரத்தின் நிழலில் உட்காரும் ஒருவருக்கு நோய்களும் கோளாறுகளும் நீங்கும்.
ஏறத்தாழ 300 வயதுக்கும் மேற்பட்ட மகிழ மரம் ஒன்று புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியிலிருந்து வடகாடு செல்லும் வழியிலுள்ள வேலாத்தூர் நாடியம்மன் கோயிலில் காணப்படுகிறது. இதன் நிழலில் சிறிது நேரம் தங்கிப் போகாதவர்களே இல்லை. நாமும் இந்த மரத்தை வளர்ப்பதன் மூலம், பேணி பாதுகாப்போம்.
நன்றி கட்டுரையாளர், ஓய்வு பெற்ற தாவரவியல் பேராசிரியர் 
தொடர்புக்கு: kvkbdu@yahoo.co.in

Saturday, April 7, 2018

"தேற்றான் மரம்" நாம் மறந்துவிட்ட மரம்


தேற்றான் மரம் 'நம் மனம் மறந்துவிட்ட மரம்'  என் பள்ளி பருவத்தில் என்வீட்டின் அருகிலும் பள்ளி அருகிலும் இம் மரம் இருந்தது பள்ளி தோழர்களோடு சேர்ந்து இதன் காய்களை பறித்து விதை எடுத்து சாப்பிடுவோம், எங்கள் பள்ளி அருகில் இன்றும் இம் மரம் உயிர்ப்புடன் இருக்கிறது தலவிருட்சம் என்பதால் (மரத்தடியில் சில சிலைகளை வைத்து வழிபடுகின்றனர்) சரி இதன் சிறப்புகளை பார்ப்போம்.......                
தேற்றான்கொட்டை... இது தேற்றா அல்லது தேத்தா என்ற மரத்தின் விதையாகும். `Strychnos Potatorum’ என்ற தாவரவியல் பெயரைக்கொண்ட இந்த மரம், நம் முன்னோர்களால் போற்றி வளர்க்கப்பட்டது. தற்போது இதன் முக்கியத்துவத்தை இழந்து அதன் பயன்களை நம் வருங்கால சந்ததியினர் அறிய முடியாத நிலைக்கு ஆளாகியுள்ளனர்.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக தேற்றாமர வனம் (கதகாரண்யம்), தென்கயிலை, திருக்கோளிலி, புஷ்பவனம் என்றெல்லாம் அறியப்பட்ட திருக்குவளை கோயிலின் ஸ்தல விருட்சமான தேற்றான் கொட்டை மரம் மிகவும் அரிதான மரங்களில் ஒன்று. தேற்றா மரத்துக்குப் பல பெயர்கள் உள்ளன. அவற்றில் `இல்லம்’, `சில்லம்’, `கதலிகம்’ என்பது போன்ற பல பெயர்களோடு `பிங்கலம்’ என்றும் தொல்காப்பியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. `தேறு’, `தேத்தாங்கொட்டை’ என்ற பெயர்களும் உள்ளன.
தேற்றான் மரம் பளபளப்பாகவும், கரும்பச்சை நிற இலைகளையும், உருண்டையான விதைகளையும் கொண்ட குறு மரம். தமிழகத்தின் மலைக்காடுகளிலும் சமவெளிகளிலும் பரவலாகக் காணப்படுகிறது. தேற்றான் மரத்தின் பழம், விதைக்கு மருத்துவக் குணங்கள் உள்ளன. 
பொதுவாக, முற்காலங்களில் நம் முன்னோர் தேற்றாங்கொட்டையை சேறும் சகதியுமாக கலங்கிக் காணப்படும் நீரைத் தெளியவைக்கப் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். குளம், ஊருணி போன்றவற்றில் இருந்தே குடிநீர் உள்ளிட்ட மற்ற தேவைகளுக்கும் நீர் பெறப்பட்டது. அத்தகையச் சூழலில் கலங்கலாக இருக்கும் நீரை அப்படியே குடிக்க முடியாது என்பதால், தேற்றான்கொட்டையால் நீரைத் தெளியவைத்து பயன்படுத்தினர், எனவே தேற்றாங்கொட்டையை நீர் சுத்திகரிப்பான் என்றும் அழைக்கலாம்.  
இது மட்டுமல்ல ஏரி, குளம், குட்டைகளில் மீன்களைப் பிடிக்கவும் தேற்றான்கொட்டை மரத்தின் சக்கையை நம் முன்னோர் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். அதாவது, அந்த மரத்தின் காய்களை இடித்து, கொட்டையை எடுத்த பிறகு கிடைக்கும் சக்கையை அந்த நீர்நிலைகளில் போடுவார்களாம். அப்போது இந்தச் சக்கை, நீரோடு கலக்கும்போது மீன்களுக்கு ஒருவித மயக்கத்தை ஏற்படுத்துவதால், மீன்கள் கரை ஒதுங்கிவிடுமாம். அதன் பிறகு மிக எளிதாக அந்த மீன்களை எடுத்து வந்துவிடுவார்களாம்.
தேற்றான்மரத்தின் பழங்கள் நாவல் பழம் போன்று காணப்படும். பெரும்பாலும், இதன் விதைகளே மருத்துவத்துக்கு பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாக இது வெட்டை, உட்சூடு, வயிற்றுக்கடுப்பு, மூத்திர எரிச்சல், மூத்திரக்கடுப்பு, ரணம் போன்ற கோளாறுகளைச் சரி செய்யக்கூடியது. மந்தத்தை உண்டாக்கும் இது கண்ணுக்கு சிறந்த மருந்து. இவை எல்லாவற்றுக்குமேலாக தேறாதவனையும் தேற்றும் மகிமை கொண்டது தேற்றான்மரம்.
தேற்றான்கொட்டைத் தூள், திரிகடுகுத் தூள், திரிபலாத் தூள், சீரகத் தூள், சித்தரத்தைத் தூள் ஆகியவற்றுடன் பால் சேர்த்து பசைபோல் தயாரித்துக்கொள்ளவும். அதன் பிறகு இதனோடு நான்கு பங்கு வெல்லம், ஒரு பங்கு நீர்விட்டு பாகு தயாரித்து அதனுடன் ஏற்கெனவே பசைபோலத் தயாரித்து வைத்திருக்கும் மருந்துக் கலவையைச் சேர்த்துக் கிளற வேண்டும். இது அல்வா பதத்துக்கு வந்ததும், நெய்விட்டுக் கிளறி இறக்க வேண்டும். நெய் தனியாகப் பிரிந்து வரும்போது அடுப்பிலிருந்து இறக்கி, தேன் சேர்த்துக் கலக்க வேண்டும். இந்த லேகியத்தை காலை, மாலை வேளைகளில் நெல்லிக்காய் அளவு சாப்பிட்டு வந்தால் மெலிந்த தேகம் தேறி வரும்.
இப்படி நாம் மறந்துவிட்ட மருத்துவகுணம் உள்ள மரங்கள் ஏராளம் நம்மை பொறுத்தவரை விலை விற்றால்தான் அது நல்லமரம் பாதுகாக்க வேண்டியமரம், எங்கள் ஊரில் ஒருவர் என்னிடம் வாசு இது என்ன மரம் என்றார், நான் 'இது புண்ணை மரம் என்றேன்'  அவர் இது எதற்கு பயன்படும் விலை விற்குமா என்றார் 'நான் இது விறகு விலைக்குத்தான் போகும் இதன் காய்களை எண்ணெய் எடுத்து பயோ-டீசலாக பயன்படுத்தலாம் என்றேன்' மற்றொருநாள் இது என்ன மரம் என்றார் 'இது அத்தி மரம்' என்றேன் மரம் விலை போகுமா என்றார் 'மரம் அதிக விலைபோகாது ஆனால் இதன் பழங்கள் சத்து நிறைத்தது நல்ல விலை போகும் என்றேன்' சில மாதம் சென்றபின் அத்த வழியாக சென்றபொழுது அந்த மரங்களை பார்த்தேன் காணவில்லை வெட்டப்பட்டிருந்தது இப்படியே பல மருத்துவகுணம் உள்ள மரங்களை இழந்துவிட்டோம் பணம் காய்க்கும் மரங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன.........              


Monday, March 19, 2018

மரங்களின் பெயர்களை தெரிந்து கொள்வோமா!!!

இப்புவில் பலவிதமான தாவரங்கள் இருந்தாலும் நாம் அறிந்த தாவரங்கள் சிலவே! பலர் பலவிதமான மரங்களை வளர்க்க நினைத்தாலும் பலவிதமான மரங்களின் பெயர்கள் அவர்களுக்கு தெரிவதில்லை அவர்களுக்கு உதவும் பொருட்டு எனக்கு தெரிந்த மரங்களின் பெயர்கள் சிலவற்றை குறிப்பிடுகிறேன்: 

மா, பலா, கிளா, ஆழ், அரசு, அத்தி, இத்தி, அகத்தி,  இலுப்பை, பூவரசு, தடசு, உசில், புங்கன், வாகை, சிலைவாகை, நொச்சி, நுணா, புன்னை, மஞ்சநத்தி, கருங்காலி,  வாதநாராயணன், பனை,  கூந்தல்பனை, கமுகு , தென்னை, மூங்கில்,  அலின்ஸில், கொன்றை, சரக்கொன்றை, புளியமரம், புளிச்சகாய், கொடம்புளி, வேம்பு, தான்றி, காட்டத்தி, சந்தனம்,  செஞ்சந்தனம், ஆச்சா,  ஆவி,  தேக்கு, வெண்தேக்கு, பர்மாதேக்கு, குமிழ், மாஞ்சியம், மகோகனி, சிசு, மலைவேம்பு, நீர்வேம்பு, வேங்கை, உதிரவேங்கை, சந்தனவேங்கை, மருது, நீர்மருது, வெண்மருது, கருமருது, புல்லமருது,  கடம்பு,  மஞ்சக்கடம்பு, செண்பகம், பெருமரம்(பீநாறி), ஒதியமரம்,  முருங்கை,  சவுக்கு,  மகிழம், வன்னி,  ரோஸுட் (தோதகத்தி, ஈட்டி),  பென்சில், யானைகுன்றிமணி,  நாவல்,  வெண்நாவல், மலைநாவல்,  இலந்தை, நெல்லி,  விளாமரம், கொய்யா, சப்போட்டா,  மாதுளை,  சாத்துக்குடி, நாரத்தை,  பப்ளிமாஸ், அரைநெல்லி, எலுமிசை, கொடுக்காப்புளி, ஆப்பிள்,  பேரி,  மங்குஸ்தான்,  சொர்க்கம், புரசு, பாலை, வெப்பாலை,  குடசப்பாலை,  ஏழிலைப்பாலை,  குருந்தை, நற்குருந்தம்,  குங்குலியம், மந்தாரை,  இருவாட்சி(திருவாச்சி), காயா, பாதாம்,  நாய்கடுகு, முந்திரி, சீத்தா,  ராம்சீத்தா,  முள்சீத்தா,  துரியன், இலவு(இலவம்பஞ்சு),  ஈரப்பலா, எட்டி(காஞ்சிதை), வில்வம், மகாவில்வம்,  இராசவில்வம், பரசு வில்வம், உந்து  வில்வம் ,  நாகலிங்கம்,  கருவேலமரம்,  குடைவேல், வெள்வேல்,  கல்லத்தி,  கிளுவை,  தகரமரம்,  தில்லை,  தேற்றா(தேற்றான்கொட்டை), நெட்டுலிங்கம், அசோகமரம்,  சர்வ சுகந்தி, நாறுவல்லி, விடதாரி,   குசுக்கட்டை மரம்,  மனோரஞ்சிதம்,  லவங்கம், திவி, பதிமுகம், தங்க அரளி.

      எனக்கு தெரிந்த மரங்கள் சிலவற்றின் பெயர்களை பட்டியலிட்டுளேன் படிப்பவர்கள் அவற்றில் சில மரங்களையாவது வளர்த்து பயன்பெறுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்          


Saturday, March 3, 2018

எனதுவனம்



8 ஆண்டுகளுக்குமுன் புதராக கிடந்த நிலத்தை தனி ஒருவனாக திருத்தி பலவிதமான மரக்கன்றுகளையும் நட்டு பராமரித்தேன் இன்று அது ஒரு சிறுவனமாக காட்சியளிக்கின்றதை பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது,   இந்தக்காட்டில் உள்ள மரங்களாவன தேக்கு, மகோகனி, முந்திரி, சந்தனம், செஞ்சந்தனம்,  வேங்கை, உதிரவேங்கை, குமிழ், சிலைவாகை, சிசு, யானைக்குண்டுமணி, வேப்பமரம்,  மஞ்சகடம்பு, சரக்கொன்றை, நீர்மருது, பூவரசு, பென்சில்மரம் போன்ற மரங்கள் உள்ளன.

இந்த மரங்களை குடும்பசகிதமாக சென்று பார்க்கும்போது மிகுந்த மகிழ்ச்சி உண்டாகிறது,   வொவ்வொரு மரமாக அண்ணார்ந்து பார்க்கும் பொது கிடைக்கும் மகிழ்ச்சி கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காது,  ஆனால் பலவித தொந்தரவுகளை தாண்டித்தான் இந்த மரங்களை வளர்க்க முடித்தது.

தற்பொழுதும் 2 ஆண்டுகளாக  நான் வளர்த்துக்கொண்டிருக்கும் மரங்கள் மூலிகை செடிகளுக்கு பலவிதமனா தொந்தரவுகள் இருக்கத்தான் செய்கிறது,  அவற்றுள் சிலவற்றை சொல்கிறேன் 'ஆட்டைகொண்டுவந்து மேயவிட்டு பார்த்து கொண்டிருப்பது, அங்கு முளைத்திருக்கும் நாட்டு மரக்கன்றுகளை வேருடன் பிடிங்கிசெல்வது எல்லாவற்றிக்கும் மேலாக  குறிப்பிட்ட ஒரு செடியில் தினமும் சிறுநீர் கழிப்பது அல்லது சுடுதண்ணீர் ஊற்றுவது அதுவும் உதிரவேங்கை மரத்தில்' இதுபோன்ற இழிசெயல்களை என்னவென்று சொல்வது  'உதிரவேங்கை பட்டையின் தேவை நாளை உங்களளுக்கு ஏற்படும் என்று சபிப்பதைத்தவிர" மரங்களுக்கும் உணர்வு உண்டு என்பது இந்த 'மா'க்களுக்கு  தெறித்திருக்க வாய்ப்பில்லைதான்.                        

Wednesday, February 21, 2018

முருங்கை மரம்

"முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்'! என்பது
 பழமொழி. ஒருவர் முருங்கை மரத்தை வீட்டில் வளர்த்தால் அவருக்கு பூ, காய், இலை, பிசின் என்று அனைத்தும் பயன் தரக்கூடியவை. முருங்கை இலை உடலை இளமையோடும் ஆரோக்கியத்தோடும் வைத்துக்கொள்ள கூடிய மூலிகை. இவற்றை தினமும் யார் உணவில் பயன்படுத்துகிறாரோ அவர் வயதானாலும் குச்சி ஊன்றாமல் வெறுங்கையோடு  நடந்து செல்வார். இதைத்தான் நம் முன்னோர்கள் "முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்" என்று சொல்லி வைத்தார்கள். ஆகவே நாமும் முருங்கையை நட்டு வெறுங்கையோடு நடப்போமா..?

ஒருமுறை நடவு செய்துவிட்டால் வருடக் கணக்காக அறுவடை செய்ய, விவசாயிகளுக்கு வாய்த்திருக்கும் அட்சய பாத்திரம்தான் முருங்கை.


முருங்கை – மருத்துவ பயன்கள்


முருங்கை முழுத் தாவரமும், கைப்பு, துவர்ப்பு, மற்றும் இனிப்பு சுவைகள் கொண்டது. குளிர்ச்சித் தன்மையானது. வெப்பம் உண்டாக்கும்: கோழையகற்றும்: சிறுநீரைப் பெருக்கும்; இசிவை அகற்றும்.
முருங்கை இலை வாந்தி உண்டாக்கும்; மலமிளக்கும்; தலைநோய் ஆகியவற்றைக் குணமாக்கும்; முருங்கை ஈர்க்கு, சிறுநீர் பெருக்கும். முருங்கை பூ, காமம் பெருக்கும்; கண் குளர்ச்சி உண்டாக்கும். நாக்குச் சுவையின்மையை குணமாக்கும்.
முருங்கை பிஞ்சு, உடல் தாதுக்களின் எரிச்சலைப் போக்கும்; காமம் பெருக்கும்; நாக்குச் சுவையின்மையைக் குணமாக்கும்.
முருங்கை காய் கோழை அகற்றும். முருங்கை பிசின் விந்துவைக் கட்டும். ஆண்மையைப் பெருக்கும்; தும்மல் உண்டாக்கும். முருங்கை பட்டை, கோழை, காய்ச்சல், நஞ்சு ஆகியவற்றைப் போக்கும்; வியர்வையை பெருக்கும். குடல் வாயுவை அகற்றும்.
மிகவும் மென்மையான இறக்கை போன்ற அமைப்பில் உள்ள கூட்டிலைகளையும், வெள்ளை நிறக் கொத்தான மலர்களையும் பச்சைப் பாம்பு போன்ற நீண்ட பச்சையான தக்கையான காய்களையும் கொண்டு முருங்கையை அனைவரும் எளிதில் இனம் காண முடியும்.
முருங்கை மர வகையைச் சார்ந்தது. மரக்கட்டை வலுவற்றது. மரப்பட்டை வெள்ளை நிறமானது. பிசின் வெளிர்ந்த நிறத்தில் சுரந்து பின்னர் சிவப்பு நிறமாகும். முருங்கை பூ, இலை, காய் ஆகியவை அன்றாக சமையலில் பயன்படுவதால் அனைத்து வீடுகளிலும் இந்த மரம் வளர்க்கப்படுகின்றது.
சிக்குரு, சோபாஞ்சனம் போன்ற முக்கியமான மாற்றுப் பெயர்களும் முருங்கை மரத்திற்கு உண்டு. முருங்கை இலை, இலைக் காம்பு, பூ, காய், பிசின், மரப்பட்டை போன்ற தாவரத்தின் அனைத்து பாகங்களுமே மருத்துவத்தில் பயன்படுபவை.
முருங்கை ஈர்க்கு, கருவேப்பிலை ஈர்க்கு இவை இரண்டும் சம அளவாக சேர்த்து 10 கிராம் ½ லிட்டர் நீரில் போட்டு ¼ லிட்டராகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி இரவில் குடிக்க வயிற்றுப் புழுக்கள் வெளியேறும்.
முருங்கை கீரையை கடைந்தோ, துவட்டியோ, சாம்பார் செய்தோ உணவாகக் கொள்ள வேண்டும். அல்லது முருங்கை இலையை நெய்யில் வறுத்து உணவுக்கு முன்னர் சாப்பிட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்ய கண் பார்வை தெளிவடையும்.
முருங்கை இலையும், மிளகையும் சம எடையாக சேர்த்து நசுக்கி சாறு எடுத்து வலியுள்ள இடத்தில் பற்றாகப் போட தலை வலி குணமாகும்.
முருங்கை பிசினைக் காய வைத்து தூள் செய்து ½ தேக்கரண்டி அளவு காலை மாலை வேளைகளில் காய்ச்சிய பசும் பாலுடன் கலந்து குடித்து வர உடல் நலம் பெறும்.
மாலைக் கண் தீர, இரத்தம் விருத்தியாக முருங்கை கீரையை துவட்டியோ, கூட்டு கீரையாக கடைந்தோ சாப்பிட்டு வந்தால் கண் நோய்கள் முக்கியமாக மாலைக் கண் நோய் வராமல் தடுக்கலாம். இரும்புச் சத்து மிகுதியாக உள்ளதாலும் வைட்டமின் -“ஏ” சத்து உள்ளதாலும் இவ்வாறு பயன்படுகின்றது.
அன்றாட வாழ்வில் முருங்கை: கீரை வகைகளில் மிக முக்கிய இடம் வகிப்பது முருங்கை கீரை ஆகும். கிராமங்களில் மட்டுமின்றி நகரங்களிலும் முருங்கை மரம் பெரும்பாலானோர் வீடுகளில் வளர்க்கப்படுகின்றது.
முருங்கை மரத்தின் எல்லாப் பகுதிகளையும் நம் முன்னோர்கள் மருத்துவத்தில் பயன்படுத்தி வந்துள்ளனர். இருப்பினும் மருத்துவத்திற்கு அப்பாற்பட்டு உணவிலும் முருங்கை சிறப்பான இடம் வகிக்கின்றது.
முருங்கை கீரையில் கால்சியம், இரும்புச் சத்து, வைட்டமின் பி, பி2, வைட்டமின் சி சத்துகள் மிகுதியாக உள்ளன. முருங்கை பூவைப் பருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிட உடல் பலம் பெறும். முருங்கை காயை எந்த வகையிலாவது சமைத்து தொடர்ந்து சாப்பிட சளி குறையும்.
மருந்து எடுத்துக் கொள்ளும்போது கடைப் பிடிக்கப்படும் பத்தியத்தின் போது கூட முருங்கைப் பிஞ்சினை இளங்காரமாக சமைத்து சாப்பிடலாம். முருங்கை பிசினைக் காய வைத்து தூள் செய்து சாப்பிட்டு வர உடல் பலமும் ஆண்மைத் தன்மையும் அதிகரிக்கும்.

Tuesday, February 20, 2018

கொசுவை ஒழிக்கும் நொச்சி மரம்

‘‘நொச்சிச் செடியின் அறிவியல் பெயர் ‘வைடக்ஸ் நிகுண்டோ’ (Vitex Negundo) . இது ‘வேர்பீனிஸியா’ குடும்பத்தைச் சேர்ந்த தாவரம். இந்தியில் ‘நிர்குண்டோ’ என்று அழைக்கப்படுகிறது. உலக அளவில் நொச்சிச் செடிக்கு 250 சிற்றினங்கள் உள்ளன. இந்தியாவில் மட்டும் 14 சிற்றினங்கள் உள்ளன.  இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் போன்ற வெப்ப மண்டல நாடுகளில் நன்றாக வளரக்கூடியது நொச்சி. வறட்சியைத் தாங்கி வளரக்கூடியது. 

ஊட்டச்சத்து குறைவாக உள்ள சாதாரண நிலத்திலும் வளரும். செடியாகவும் இல்லாமல், கொடியாகவும் இல்லாமல், சிறிய மரம் போல காணப்படும். நான்கு புறமும் தண்டு நீண்டு இருக்கும். தண்டின் மேல்பக்கம் பச்சையாகவும், கீழே வெண்மையாகவும் இருக்கும். பூக்கள் நீலமும் ஊதாவும் கலந்த நிறத்தில் இருக்கும். மேலைநாடுகளில் ‘வைடக்ஸ்’ என்று அழைக்கப்படுகிற நொச்சியை, வீடுகளில் அழகுக்காகவும் பூச்சிகள் வராமல் காக்கவும் வளர்க்கிறார்கள். தமிழ்நாட்டில் நீர் நொச்சி வகை அதிகமாகக் காணப்படுகிறது...’’ என நொச்சியின் தாவரவியல் பண்புகளை விளக்கும் பிரசன்னா, அதன் மருத்துவ பயன்களையும் பட்டியலிடுகிறார்.

‘‘இது மூட்டுவலியைக் குறைக்கும் வலி நிவாரணியாக பயன்படுகிறது. உடலில் ஏற்படும் வீக்கங்களைக் குறைக்க உதவுகிறது. குடலில் ஏற்படும் பூச்சிகளையும் புழுக்களையும் அழிக்கவல்லது. ஆயுர்வேதம் மற்றும் இயற்கை மருத்துவத்தில் அதிகம் பயன்படுகிறது. ‘வைடக்ஸ் ஆக்னஸ் கேஸ்டஸ்’ என்கிற நொச்சி வகை பெண் நலத்துக்கு அருமையான மருந்து. மாதவிடாய், கர்ப்பகாலப் பிரச்னைகள், ஹார்மோன் குறைபாடுகள், பிசிஓடி எனப்படும் சினைப்பை நீர்க்கட்டிகள் போன்றவற்றுக்கு உலகெங்கிலும் மாற்று மருத்துவர்கள் நொச்சியைப் பயன்படுத்துகிறார்கள். சருமப் பிரச்னைகளுக்கு கூட நொச்சி நிவாரணம் அளிக்கிறது.

நொச்சியின் இலைகளில் இருந்து ‘வாலடைல்’ எனப்படும் ஆயில் எடுக்கப்படுகிறது. இது எளிதில் ஆவியாகக் கூடியது. இந்த எண்ணெய்க்கு கொசு மற்றும் பூச்சிகளை விரட்டும் தன்மை உள்ளது. நொச்சி இலைகளை நெருப்புத் தணலில் போட்டு அதன் மூலம் வரும் புகையை வீடு முழுவதும் பரவவிட்டால் கொசுக்கள் இருக்கும் இடம் தெரியாமல் ஓடும். ‘ஏடிஸ்’ எனப்படும் வரிக்கொசுவை விரட்டிவிடும் நொச்சி இலைகளின் புகை. ‘ஏடிஸ்’ கொசு பெரும்பாலும் பகல் நேரத்தில்தான் மனிதர்களைத் தாக்கும். இந்த கொசுவை உற்றுநோக்கினால் வரி வரியாக கோடுகள் தெரியும். 

சிக்குன்குனியா மற்றும் டெங்கு போன்ற நோய்களை இந்த கொசுவே பரப்புகிறது. இந்த கொசுவுக்கு நொச்சி இலையின் வாசனையே ஆகாது. அதனால்தான் சென்னை மாநகராட்சியில் கூட நொச்சிச் செடியை வளர்க்கும் திட்டத்தை கொண்டு வந்துள்ளார்கள். வீட்டில் நொச்சிச் செடி வளர்ப்பதன் மூலம் நோய்களைப் பரப்பும் கொசுக்களையும் பூச்சிகளையும் எளிதாக தடுக்கலாம். நோய்கள் வராமல் தற்காக்கலாம். நொச்சிச் செடியை விதை போட்டும் வளர்க்கலாம். பதியம் வைத்தும் வளர்க்கலாம். நொச்சிச் செடிகளை வீட்டில் வளர்ப்பது மிக எளிதானது. நொச்சிச் செடி வீட்டில் இருப்பது விலையுயர்ந்த மருத்துவப் பொருட்கள் உங்களிடம் இருப்பதற்கு சமமானது!’’ என ஆர்வம் ஊட்டுகிறார் பிரசன்னா.

மேலும் படிக்க http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=3026