Tuesday, February 20, 2018

கொசுவை ஒழிக்கும் நொச்சி மரம்

‘‘நொச்சிச் செடியின் அறிவியல் பெயர் ‘வைடக்ஸ் நிகுண்டோ’ (Vitex Negundo) . இது ‘வேர்பீனிஸியா’ குடும்பத்தைச் சேர்ந்த தாவரம். இந்தியில் ‘நிர்குண்டோ’ என்று அழைக்கப்படுகிறது. உலக அளவில் நொச்சிச் செடிக்கு 250 சிற்றினங்கள் உள்ளன. இந்தியாவில் மட்டும் 14 சிற்றினங்கள் உள்ளன.  இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் போன்ற வெப்ப மண்டல நாடுகளில் நன்றாக வளரக்கூடியது நொச்சி. வறட்சியைத் தாங்கி வளரக்கூடியது. 

ஊட்டச்சத்து குறைவாக உள்ள சாதாரண நிலத்திலும் வளரும். செடியாகவும் இல்லாமல், கொடியாகவும் இல்லாமல், சிறிய மரம் போல காணப்படும். நான்கு புறமும் தண்டு நீண்டு இருக்கும். தண்டின் மேல்பக்கம் பச்சையாகவும், கீழே வெண்மையாகவும் இருக்கும். பூக்கள் நீலமும் ஊதாவும் கலந்த நிறத்தில் இருக்கும். மேலைநாடுகளில் ‘வைடக்ஸ்’ என்று அழைக்கப்படுகிற நொச்சியை, வீடுகளில் அழகுக்காகவும் பூச்சிகள் வராமல் காக்கவும் வளர்க்கிறார்கள். தமிழ்நாட்டில் நீர் நொச்சி வகை அதிகமாகக் காணப்படுகிறது...’’ என நொச்சியின் தாவரவியல் பண்புகளை விளக்கும் பிரசன்னா, அதன் மருத்துவ பயன்களையும் பட்டியலிடுகிறார்.

‘‘இது மூட்டுவலியைக் குறைக்கும் வலி நிவாரணியாக பயன்படுகிறது. உடலில் ஏற்படும் வீக்கங்களைக் குறைக்க உதவுகிறது. குடலில் ஏற்படும் பூச்சிகளையும் புழுக்களையும் அழிக்கவல்லது. ஆயுர்வேதம் மற்றும் இயற்கை மருத்துவத்தில் அதிகம் பயன்படுகிறது. ‘வைடக்ஸ் ஆக்னஸ் கேஸ்டஸ்’ என்கிற நொச்சி வகை பெண் நலத்துக்கு அருமையான மருந்து. மாதவிடாய், கர்ப்பகாலப் பிரச்னைகள், ஹார்மோன் குறைபாடுகள், பிசிஓடி எனப்படும் சினைப்பை நீர்க்கட்டிகள் போன்றவற்றுக்கு உலகெங்கிலும் மாற்று மருத்துவர்கள் நொச்சியைப் பயன்படுத்துகிறார்கள். சருமப் பிரச்னைகளுக்கு கூட நொச்சி நிவாரணம் அளிக்கிறது.

நொச்சியின் இலைகளில் இருந்து ‘வாலடைல்’ எனப்படும் ஆயில் எடுக்கப்படுகிறது. இது எளிதில் ஆவியாகக் கூடியது. இந்த எண்ணெய்க்கு கொசு மற்றும் பூச்சிகளை விரட்டும் தன்மை உள்ளது. நொச்சி இலைகளை நெருப்புத் தணலில் போட்டு அதன் மூலம் வரும் புகையை வீடு முழுவதும் பரவவிட்டால் கொசுக்கள் இருக்கும் இடம் தெரியாமல் ஓடும். ‘ஏடிஸ்’ எனப்படும் வரிக்கொசுவை விரட்டிவிடும் நொச்சி இலைகளின் புகை. ‘ஏடிஸ்’ கொசு பெரும்பாலும் பகல் நேரத்தில்தான் மனிதர்களைத் தாக்கும். இந்த கொசுவை உற்றுநோக்கினால் வரி வரியாக கோடுகள் தெரியும். 

சிக்குன்குனியா மற்றும் டெங்கு போன்ற நோய்களை இந்த கொசுவே பரப்புகிறது. இந்த கொசுவுக்கு நொச்சி இலையின் வாசனையே ஆகாது. அதனால்தான் சென்னை மாநகராட்சியில் கூட நொச்சிச் செடியை வளர்க்கும் திட்டத்தை கொண்டு வந்துள்ளார்கள். வீட்டில் நொச்சிச் செடி வளர்ப்பதன் மூலம் நோய்களைப் பரப்பும் கொசுக்களையும் பூச்சிகளையும் எளிதாக தடுக்கலாம். நோய்கள் வராமல் தற்காக்கலாம். நொச்சிச் செடியை விதை போட்டும் வளர்க்கலாம். பதியம் வைத்தும் வளர்க்கலாம். நொச்சிச் செடிகளை வீட்டில் வளர்ப்பது மிக எளிதானது. நொச்சிச் செடி வீட்டில் இருப்பது விலையுயர்ந்த மருத்துவப் பொருட்கள் உங்களிடம் இருப்பதற்கு சமமானது!’’ என ஆர்வம் ஊட்டுகிறார் பிரசன்னா.

மேலும் படிக்க http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=3026

2 comments:

Unknown said...

All are very useful information... Thanks for your work.

Unknown said...

All are very useful information... Thanks for your work.