Wednesday, February 21, 2018

முருங்கை மரம்

"முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்'! என்பது
 பழமொழி. ஒருவர் முருங்கை மரத்தை வீட்டில் வளர்த்தால் அவருக்கு பூ, காய், இலை, பிசின் என்று அனைத்தும் பயன் தரக்கூடியவை. முருங்கை இலை உடலை இளமையோடும் ஆரோக்கியத்தோடும் வைத்துக்கொள்ள கூடிய மூலிகை. இவற்றை தினமும் யார் உணவில் பயன்படுத்துகிறாரோ அவர் வயதானாலும் குச்சி ஊன்றாமல் வெறுங்கையோடு  நடந்து செல்வார். இதைத்தான் நம் முன்னோர்கள் "முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்" என்று சொல்லி வைத்தார்கள். ஆகவே நாமும் முருங்கையை நட்டு வெறுங்கையோடு நடப்போமா..?

ஒருமுறை நடவு செய்துவிட்டால் வருடக் கணக்காக அறுவடை செய்ய, விவசாயிகளுக்கு வாய்த்திருக்கும் அட்சய பாத்திரம்தான் முருங்கை.


முருங்கை – மருத்துவ பயன்கள்


முருங்கை முழுத் தாவரமும், கைப்பு, துவர்ப்பு, மற்றும் இனிப்பு சுவைகள் கொண்டது. குளிர்ச்சித் தன்மையானது. வெப்பம் உண்டாக்கும்: கோழையகற்றும்: சிறுநீரைப் பெருக்கும்; இசிவை அகற்றும்.
முருங்கை இலை வாந்தி உண்டாக்கும்; மலமிளக்கும்; தலைநோய் ஆகியவற்றைக் குணமாக்கும்; முருங்கை ஈர்க்கு, சிறுநீர் பெருக்கும். முருங்கை பூ, காமம் பெருக்கும்; கண் குளர்ச்சி உண்டாக்கும். நாக்குச் சுவையின்மையை குணமாக்கும்.
முருங்கை பிஞ்சு, உடல் தாதுக்களின் எரிச்சலைப் போக்கும்; காமம் பெருக்கும்; நாக்குச் சுவையின்மையைக் குணமாக்கும்.
முருங்கை காய் கோழை அகற்றும். முருங்கை பிசின் விந்துவைக் கட்டும். ஆண்மையைப் பெருக்கும்; தும்மல் உண்டாக்கும். முருங்கை பட்டை, கோழை, காய்ச்சல், நஞ்சு ஆகியவற்றைப் போக்கும்; வியர்வையை பெருக்கும். குடல் வாயுவை அகற்றும்.
மிகவும் மென்மையான இறக்கை போன்ற அமைப்பில் உள்ள கூட்டிலைகளையும், வெள்ளை நிறக் கொத்தான மலர்களையும் பச்சைப் பாம்பு போன்ற நீண்ட பச்சையான தக்கையான காய்களையும் கொண்டு முருங்கையை அனைவரும் எளிதில் இனம் காண முடியும்.
முருங்கை மர வகையைச் சார்ந்தது. மரக்கட்டை வலுவற்றது. மரப்பட்டை வெள்ளை நிறமானது. பிசின் வெளிர்ந்த நிறத்தில் சுரந்து பின்னர் சிவப்பு நிறமாகும். முருங்கை பூ, இலை, காய் ஆகியவை அன்றாக சமையலில் பயன்படுவதால் அனைத்து வீடுகளிலும் இந்த மரம் வளர்க்கப்படுகின்றது.
சிக்குரு, சோபாஞ்சனம் போன்ற முக்கியமான மாற்றுப் பெயர்களும் முருங்கை மரத்திற்கு உண்டு. முருங்கை இலை, இலைக் காம்பு, பூ, காய், பிசின், மரப்பட்டை போன்ற தாவரத்தின் அனைத்து பாகங்களுமே மருத்துவத்தில் பயன்படுபவை.
முருங்கை ஈர்க்கு, கருவேப்பிலை ஈர்க்கு இவை இரண்டும் சம அளவாக சேர்த்து 10 கிராம் ½ லிட்டர் நீரில் போட்டு ¼ லிட்டராகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி இரவில் குடிக்க வயிற்றுப் புழுக்கள் வெளியேறும்.
முருங்கை கீரையை கடைந்தோ, துவட்டியோ, சாம்பார் செய்தோ உணவாகக் கொள்ள வேண்டும். அல்லது முருங்கை இலையை நெய்யில் வறுத்து உணவுக்கு முன்னர் சாப்பிட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்ய கண் பார்வை தெளிவடையும்.
முருங்கை இலையும், மிளகையும் சம எடையாக சேர்த்து நசுக்கி சாறு எடுத்து வலியுள்ள இடத்தில் பற்றாகப் போட தலை வலி குணமாகும்.
முருங்கை பிசினைக் காய வைத்து தூள் செய்து ½ தேக்கரண்டி அளவு காலை மாலை வேளைகளில் காய்ச்சிய பசும் பாலுடன் கலந்து குடித்து வர உடல் நலம் பெறும்.
மாலைக் கண் தீர, இரத்தம் விருத்தியாக முருங்கை கீரையை துவட்டியோ, கூட்டு கீரையாக கடைந்தோ சாப்பிட்டு வந்தால் கண் நோய்கள் முக்கியமாக மாலைக் கண் நோய் வராமல் தடுக்கலாம். இரும்புச் சத்து மிகுதியாக உள்ளதாலும் வைட்டமின் -“ஏ” சத்து உள்ளதாலும் இவ்வாறு பயன்படுகின்றது.
அன்றாட வாழ்வில் முருங்கை: கீரை வகைகளில் மிக முக்கிய இடம் வகிப்பது முருங்கை கீரை ஆகும். கிராமங்களில் மட்டுமின்றி நகரங்களிலும் முருங்கை மரம் பெரும்பாலானோர் வீடுகளில் வளர்க்கப்படுகின்றது.
முருங்கை மரத்தின் எல்லாப் பகுதிகளையும் நம் முன்னோர்கள் மருத்துவத்தில் பயன்படுத்தி வந்துள்ளனர். இருப்பினும் மருத்துவத்திற்கு அப்பாற்பட்டு உணவிலும் முருங்கை சிறப்பான இடம் வகிக்கின்றது.
முருங்கை கீரையில் கால்சியம், இரும்புச் சத்து, வைட்டமின் பி, பி2, வைட்டமின் சி சத்துகள் மிகுதியாக உள்ளன. முருங்கை பூவைப் பருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிட உடல் பலம் பெறும். முருங்கை காயை எந்த வகையிலாவது சமைத்து தொடர்ந்து சாப்பிட சளி குறையும்.
மருந்து எடுத்துக் கொள்ளும்போது கடைப் பிடிக்கப்படும் பத்தியத்தின் போது கூட முருங்கைப் பிஞ்சினை இளங்காரமாக சமைத்து சாப்பிடலாம். முருங்கை பிசினைக் காய வைத்து தூள் செய்து சாப்பிட்டு வர உடல் பலமும் ஆண்மைத் தன்மையும் அதிகரிக்கும்.

Tuesday, February 20, 2018

கொசுவை ஒழிக்கும் நொச்சி மரம்

‘‘நொச்சிச் செடியின் அறிவியல் பெயர் ‘வைடக்ஸ் நிகுண்டோ’ (Vitex Negundo) . இது ‘வேர்பீனிஸியா’ குடும்பத்தைச் சேர்ந்த தாவரம். இந்தியில் ‘நிர்குண்டோ’ என்று அழைக்கப்படுகிறது. உலக அளவில் நொச்சிச் செடிக்கு 250 சிற்றினங்கள் உள்ளன. இந்தியாவில் மட்டும் 14 சிற்றினங்கள் உள்ளன.  இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் போன்ற வெப்ப மண்டல நாடுகளில் நன்றாக வளரக்கூடியது நொச்சி. வறட்சியைத் தாங்கி வளரக்கூடியது. 

ஊட்டச்சத்து குறைவாக உள்ள சாதாரண நிலத்திலும் வளரும். செடியாகவும் இல்லாமல், கொடியாகவும் இல்லாமல், சிறிய மரம் போல காணப்படும். நான்கு புறமும் தண்டு நீண்டு இருக்கும். தண்டின் மேல்பக்கம் பச்சையாகவும், கீழே வெண்மையாகவும் இருக்கும். பூக்கள் நீலமும் ஊதாவும் கலந்த நிறத்தில் இருக்கும். மேலைநாடுகளில் ‘வைடக்ஸ்’ என்று அழைக்கப்படுகிற நொச்சியை, வீடுகளில் அழகுக்காகவும் பூச்சிகள் வராமல் காக்கவும் வளர்க்கிறார்கள். தமிழ்நாட்டில் நீர் நொச்சி வகை அதிகமாகக் காணப்படுகிறது...’’ என நொச்சியின் தாவரவியல் பண்புகளை விளக்கும் பிரசன்னா, அதன் மருத்துவ பயன்களையும் பட்டியலிடுகிறார்.

‘‘இது மூட்டுவலியைக் குறைக்கும் வலி நிவாரணியாக பயன்படுகிறது. உடலில் ஏற்படும் வீக்கங்களைக் குறைக்க உதவுகிறது. குடலில் ஏற்படும் பூச்சிகளையும் புழுக்களையும் அழிக்கவல்லது. ஆயுர்வேதம் மற்றும் இயற்கை மருத்துவத்தில் அதிகம் பயன்படுகிறது. ‘வைடக்ஸ் ஆக்னஸ் கேஸ்டஸ்’ என்கிற நொச்சி வகை பெண் நலத்துக்கு அருமையான மருந்து. மாதவிடாய், கர்ப்பகாலப் பிரச்னைகள், ஹார்மோன் குறைபாடுகள், பிசிஓடி எனப்படும் சினைப்பை நீர்க்கட்டிகள் போன்றவற்றுக்கு உலகெங்கிலும் மாற்று மருத்துவர்கள் நொச்சியைப் பயன்படுத்துகிறார்கள். சருமப் பிரச்னைகளுக்கு கூட நொச்சி நிவாரணம் அளிக்கிறது.

நொச்சியின் இலைகளில் இருந்து ‘வாலடைல்’ எனப்படும் ஆயில் எடுக்கப்படுகிறது. இது எளிதில் ஆவியாகக் கூடியது. இந்த எண்ணெய்க்கு கொசு மற்றும் பூச்சிகளை விரட்டும் தன்மை உள்ளது. நொச்சி இலைகளை நெருப்புத் தணலில் போட்டு அதன் மூலம் வரும் புகையை வீடு முழுவதும் பரவவிட்டால் கொசுக்கள் இருக்கும் இடம் தெரியாமல் ஓடும். ‘ஏடிஸ்’ எனப்படும் வரிக்கொசுவை விரட்டிவிடும் நொச்சி இலைகளின் புகை. ‘ஏடிஸ்’ கொசு பெரும்பாலும் பகல் நேரத்தில்தான் மனிதர்களைத் தாக்கும். இந்த கொசுவை உற்றுநோக்கினால் வரி வரியாக கோடுகள் தெரியும். 

சிக்குன்குனியா மற்றும் டெங்கு போன்ற நோய்களை இந்த கொசுவே பரப்புகிறது. இந்த கொசுவுக்கு நொச்சி இலையின் வாசனையே ஆகாது. அதனால்தான் சென்னை மாநகராட்சியில் கூட நொச்சிச் செடியை வளர்க்கும் திட்டத்தை கொண்டு வந்துள்ளார்கள். வீட்டில் நொச்சிச் செடி வளர்ப்பதன் மூலம் நோய்களைப் பரப்பும் கொசுக்களையும் பூச்சிகளையும் எளிதாக தடுக்கலாம். நோய்கள் வராமல் தற்காக்கலாம். நொச்சிச் செடியை விதை போட்டும் வளர்க்கலாம். பதியம் வைத்தும் வளர்க்கலாம். நொச்சிச் செடிகளை வீட்டில் வளர்ப்பது மிக எளிதானது. நொச்சிச் செடி வீட்டில் இருப்பது விலையுயர்ந்த மருத்துவப் பொருட்கள் உங்களிடம் இருப்பதற்கு சமமானது!’’ என ஆர்வம் ஊட்டுகிறார் பிரசன்னா.

மேலும் படிக்க http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=3026