Friday, September 14, 2012

காடு மாதிரி வளர்த்தால்.. காசு பார்க்க முடியும்!

எனக்க 22 ஏக்கர் நிலம் இருக்கு. 5 ஏக்கரில் சவுக்கும், 5 ஏக்கரில் தைல மரமும் இருக்கு. மீதி 12 ஏக்கரில் நெல் சாகுபடி பண்ணிட்டிருக்கிறேன். ஆனால், எங்க பகுதியில்  வெலையாட்கள் கிடைப்பது குதிரைக் கொம்புதான். அதே போல், உழைப்பிற்கு ஏற்ற லாபமும் இல்லாததால், நெல் சாகுபடியை முழுயைாக கைவிட்டுட்டு, மொத்தத்திற்கும் மரங்களை வைக்கலாம் என்று நினைக்கிறேன். அதற்கான ஆலோசனை கிடைக்குமா என்று பசுமை விகடனின் நேரடி குரல் பதிவு சேவை மூலமாக ஆதங்கக் குரலைப் பதிவு செய்திருந்தார், புதுக்கோட்டை மாவட்டம், கீழ்ச்சேரி கிராமத்தைச் சேர்ந்த பாலசுப்ரமணியன். இவருக்கு ஆலோசனை சொல்ல புதுக்கோட்டை மாவட்டம், சேந்தன்குடி கிராமத்தைச் சேர்ந்த மரம் தங்கசாமி.

பாலசுப்ரமணியத்திடம் பேசி, பிரச்சனையை முழுமையாக உள்வாங்கிக் கொண்ட தங்கசாமி.. இதற்காக ஒட்டு மொத்தமாக நெல் உற்பத்தியையே கைவிடறேன் என்று சொல்வது நமக்கும் நல்லதல்ல நாட்டிற்கம் நல்லதல்ல. அதற்காக தொடர்ந்து அவஸ்தைப்பட்டுக் கொண்டே இருக்கணும் என்ற அவசியமும் இல்லை. அதிகமான பரப்பில் நெல்லு பயிரிட்டால்தானே எல்லா பிரச்சனையும். இரண்டு ஏக்கரில் ம்டும் நெல் பயிர் செய்து பாருங்க. பிரச்சனைகள் மிகவும் குறைந்துவிடும். வசதிபட்டால், அதையே தொடர்ந்து செய்ய ஆரம்பிச்சுடுங்க. மீதி நிலத்தில் மரங்களை வைத்து சமாளித்துவிடலாம் என்றபடியே நிலத்திற்குள் நடக்கத் தொடங்கினார்.

சரிங்கய்யா, நீங்க சொல்வது போலவே நெல்லுக்கு இரண்டு ஏக்கர் ஒதுக்கிடறேன். மீதியு்ள்ள பத்து ஏக்கரில் குமிழ், தென்னை என்ற வைத்து விடட்டுமா எனக் கேட்டார் பாலசுப்ரமணியன். உடனே குனிந்து, ஒரு குச்சியால் மண்ணை நன்கு கிளறி கையில் அள்ளிப் பார்த்த தங்கசாமி, இது ஈழக்களி.. லேசா மழை பெய்தாலே, சொதசொத என்று ஈரம்  கோத்துக் கொள்ளும்.அதனால், குமிழ் சரியாக வராது. நாட்டுத் தேக்கும் கூட சரியாக வளராது. தென்னை நல்லாவே வளரும். என்று சொன்னார். உடனே ஆர்வமான, பாலசுப்ரமணியன், அப்படினால் பத்து ஏக்கரிலுமே தென்னை வைத்துவிட வேண்டியதுதான் என்றார்.

தொடர் வருமானம் தரும் மூங்கில்
தென்னைக்கு தண்ணீர் செழிம்பாக இருக்கணும். உங்கப் பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். அதனால், எதிர்காலத்திலும் மனசை வைத்துதான் எந்த ஒரு முடிவையும் எடுக்கணும். முதலில் இரண்டு ஏக்கரில் மட்டும் 25 அடி இடைவெளயீல் தென்னை நடவு செய்ங்க. ஏக்கருக்கு 75 தென்னை வரும். இரண்டு தென்னைக்கு நடுவில்  நாட்டு ரக எலுமிச்சைக் கன்றை நடுங்க. அடுத்ததாக.. இரண்டு ஏக்கர் ஒதுக்கி, 15 அடி இடைவெளியில் முள்ளில்லாத மூங்கில் வைங்க. இந்த மண்ணில் அது நன்றாக வளரும். அந்த மூங்கிலே ஏராளமான தழைகளை உதிர்க்கறதால், மண்ணும் வளமாகும். அடுத்த ஐந்தாவது வருடத்தில் இருந்து தொடர் வருமானமும் கிடைக்கும். என்று சொல்லிக் கொண்டே வந்தவர்.. ஒரு குறிப்பிட்ட பகுதியில் நின்று கொஞ்சம் ஆழமாக யோச்சித்தார்.. பிறகு, இந்த இடத்தில் நீர்ப் பிடிப்பு அதிகமாக இருக்குமே எனக் கேட்டார்! ஆமாங்க, மழைக்காலங்களில் இந்த இடத்தில் மட்டும் அளவிற்கு அதிகமாகவே ஈரம் கோத்துக் கொள்ளும் என்றார் பால சுப்ரமணியன்.

தண்ணீர் தேங்கினால் சவுக்கு!
கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து நடந்த தங்கசாமி, அப்போ இந்தப் பகுதியில் இரண்டு ஏக்கரில் சவுக்கு நடவு பண்ணுங்க. நான்கடி இடைவெளி விட்டாலே போதுமானது. ஆக, ஆறு ஏக்கருக்கு முடிவாயிடுச்சு. மீதி இருக்கும் 4 ஏக்கரில் சப்போட்டா, மாதுளை, கொய்யா, மா, நெல்லி, நாவல், இலந்தை, முந்திரி, விளா, கிளாக்காய், சீதா, பூவரசு, புளி, வேங்கை, வேம்பு, ரோஸ்வுட், மகோகனி எல்லாத்தையும் கலந்து நடவு செய்யுங்க. ஒவ்வொரு கன்றிற்கும் 15 அடி இடைவெளி விடணும். ஒரே வகையான மரம் அடுத்தடுத்து வரக்கூடாது. ஒரு பழ மரம் வைத்தால்.. பக்கத்தில் மரவேலைப்பாடுகளுக்கு உதவக்கூடிய மரத்தை வைக்கணும். இப்படி மாற்றி மாற்றி வைத்து, காடு மாதிரி வளர்த்தால்.. நல்ல காசு பார்க்கலாம். வேலையாட்களுக்காகவும் கஷ்டப்பட தேவையிருக்காது. இப்ப நான் சொல்லி இருக்கும் மரங்கள் எல்லாமே.. இந்த மண்ணில் நன்றாக வளரக்கூடிய மரங்கள்தான்.

வேம்பு இருந்தால், சந்தனமும் வளரும்!
அப்போ பால மரத்தை இங்க வைக்கக் கூடாதா? என்று ஏமாற்றத்துடன் கேட்டார் பாலசுப்ரமணியன். இந்த மண்கண்டத்திற்கு அது சரியாக வராது. ஆசைப்பட்டால் ஒன்று, இரண்டு வைச்சு பாருங்க என்றார் தங்கசாமி. இங்க வேம்பு நல்லா விளைவதால் கண்டிப்பாக சந்தன மரமும் நல்லா வளரும். நான் சொன்ன பட்டியலில் சந்தன மரத்தையும் சேர்த்துக்கோங்க. ஓய்வெடுக்கும் கொட்டகையைச் சுற்றி, 15 அடி இடைவெளியில் பிலானிச், மந்தாரை, அசோகா, கொன்றை, புங்கம், சில்வர் ஓக், வேம்பு மரங்களை வளருங்கள். நாம ஓய்வெடுக்கும் இடத்தில் நிழல் முக்கியம். பிலானிச் மரத்தில் அழகான பூக்கள் பூக்கும். அது மனதிற்கு ரம்மியமாக இருக்கும் என்றார். வேலி ஓரத்தில் ... பூவரசு, வேம்பு, புளி, பனை, புங்கன், சவண்டல், கிளுவை மாதிரியான மரங்களை 10 அடி இடைவெளியில் வைங்க. இது முதல் அடுக்கு காற்றுத் தடுப்பு வேலியாக பயன்படும். அதிலிருந்து 6 அடி உள்ளார தள்ளி, பூவரசு, வேம்பு, புங்கம், புளி, பனை, சவண்டல் மரங்களை 10 அடி இடைவெளியில் நட்டு, இரண்டாமடுக்கு தடுப்பு வேலியை உருவாக்கணும். முதல் அடுக்கில் உள்ள மரங்களும், இரண்டாம் அடுக்கில் உள்ள மரங்களும் முக்கோண நடவு மாதிரி இருக்கணும்.

ஊடுபயிரிலும் வருமானம்!
மரக்கன்றுகளை நடுவதற்கு முன், முக்கியமான ஒரு வேலையைச் செய்தாகணும். முதலில் மூன்று சால் உழவு ஓட்டி, ஏக்கருக்கு நான்கு டன் அளவிற்கு தொழுவுரம் போட்டு, திரும்பவும் ஒரு சால் உழவு ஓட்டணும். ஏக்கருக்கு 20 கிலோ அளவிற்கு நவதானிய விதைகளை தெளித்துவிட்டு, 45 – ம் நாள் பூ பூக்கும் தருணத்தில் மடக்கி உழுதுவிடணும். அதற்கு அப்புறம் தனர் மர கன்றுகளை நடணும். நாம நடப்போற கன்றுகளோட வயது, உயரத்திற்கு  ஏற்ற மாதிரி குழி எடுக்கணும். அதில் தொழுவுரம், வேப்பம்பிண்ணாக்கு, மணல், மேல் மண் போட்டு நடவு செய்யணும். காய்ச்சலும் பாய்ச்சலுமாக தண்ணீர் விட்டாப் போதும்.

மரங்களுக்கு இடையில் ஐந்து வருடம் வரைக்கும் எள், தட்டைப்பயறு, பச்சைப்பயறு, கொள்ளு.. மாதிரியான பயிர்களை ஊடுப் பயிராக சாகுபடி செய்து ஒரு வருமானம் பார்த்துவிடலாம். முள்ளில்லா மூங்கில் மட்டும்  மூன்று வருடம் வரைக்கும் தான் ஊடுபயிராக சாகுபடி பண்ணனும் என்று பக்குவமாக சொன்ன தங்கசாமி, இதற்கெல்லாம் பெரிதாக பராமரிப்பு பார்க்க வேண்டியதில்லை. வேலையாட்களும் அதிகமாக தேவைப்படாது. தென்னை, பழ மரங்களில் ஐந்தாவது வருடத்திலிருந்தே வருமானம் பார்க்க ஆரம்பித்துவிடலாம்.  வேலைப்பாடுகளுக்கான மரங்களில் வருமானம் பார்க்க 20 வருடம் காத்திருக்கணும் என்று முடித்தார்.

தொடர்புக்கு
மரம் தங்கசாமி, செல்போன் : 97866  04177.
பாலசுப்ரமணியன், செல்போன் : 99420 77004.

No comments: