Wednesday, November 30, 2011

தரிசு நிலத்திலும் வருமானம் கொடுக்கும் வேம்பு...

தமிழ்நாட்டில் அனைத்துப் பகுதிகளிலும் வளரக்கூடிய மரம் வேம்பு. தெய்வமாக மதித்து மக்கள் வழிபடும் பெருமை வேம்புக்கு மட்டுமே உண்டு. காற்றிலுள்ள நச்சுகளை உறிஞ்சிக் கொள்வதோடு, மனிதர்கள், விலங்குகளுக்கு ஏற்படும் நோய்களையும் தீர்க்கும் வல்லமை படைத்தவை வேப்ப மரங்கள். வீடுகளுக்குத் தேவையான நிலை, கதவு, ஜன்னல் போன்றவற்றுக்கும் இம்மரம் பயன்படுவதால் இதை 'ஏழைகளின் தேக்கு’ என்றும் அழைக்கிறார்கள்.

தரிசு, மானாவாரிக்கு ஏற்றது!

வேம்பு வெறும் நிழலுக்காக, மருத்துவத்துக்காக மட்டுமே வளர்க்கப்படும் மரமல்ல.... வணிகரீதியாகவும் வளர்த்து லாபம் பார்க்கலாம். அனைத்து வகை மண்ணிலும் வளர்ந்தாலும், கரிசல் மண்ணில் நன்றாக வளரும். நீர் தேங்கும் இடங்களில் வளர்ச்சிக் குறைவாக இருக்கும். இறவை, மானாவாரி இரண்டு முறைகளிலும் இதைப் பயிர் செய்யலாம். இறவையில் ஆண்டு முழுவதும் நடவு செய்யலாம். தரிசு மற்றும் மானாவாரி நிலங்களில் மழைக் காலங்களில் நடவு செய்ய வேண்டும். செடிக்குச் செடி 15 அடி, வரிசைக்கு வரிசை 30 அடி இடைவெளியில் மூன்று கன அடி அளவில் குழியெடுக்க வேண்டும். ஏக்கருக்கு 96 குழிகள் வரை எடுக்கலாம். ஒவ்வொரு குழியிலும் 1 கிலோ மண்புழு உரம், 30 கிராம் வேர் வளர்ச்சி உட்பூசணம் (வேம்), 1 கிலோ தொழுவுரம், 15 கிராம் அசோஸ்பைரில்லம், 15 கிராம் பாஸ்போ-பாக்டீரியா ஆகியவற்றைக் கலந்து இட்டு, அதன்பிறகு கன்றுகளை நடவு செய்ய வேண்டும்.

தண்ணீர் வசதியுள்ள இடங்களில், நடவு செய்த முதல் ஆண்டு வரை 15 நாட்களுக்கு ஒரு முறை பாசனம் செய்தால் போதும். அதன்பிறகு அவ்வப்போது மரத்தைக் காய விடாமல் தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது. தரிசு மற்றும் மானாவாரி நிலங்களில் ஒவ்வொருக் கன்றைச் சுற்றியும் 10 அடி சுற்றளவுக்கு ஒரு அடி உயரத்தில் வட்ட வடிவில் கரை அமைக்க வேண்டும். இதன் மூலம் மழைநீரைச் சேமித்து வைத்துக் கொள்ள முடியும். நன்றாக நிழல் கட்டும் வரை ஊடுபயிராக கம்பு, சோளம், கடலை, தட்டை போன்ற பயிர்களை சாகுபடி செய்து கொள்ளலாம்.

மரம் 4 ஆயிரம்!

வேப்ப மரம் நடவு செய்த 5 அல்லது 6 ஆண்டுகளில் காய்க்க ஆரம்பிக்கும். ஏப்ரல், மே மாதங்களில் பூக்கும். ஜூன் முதல் ஆகஸ்ட் வரை பழங்கள் இருக்கும். நிலத்தின் தன்மைக்கேற்ப 8 வயதுள்ள மரத்தில் சுமார் 5 முதல் 10 கிலோ விதையும், 10 வயதுள்ள மரத்தில் சுமார் 10 முதல் 15 கிலோ விதையும் கிடைக்கும். பழங்கள் கீழே விழுந்த பிறகு சேகரிப்பதை விட, மரத்தில் பழமாக இருக்கும் போதே சேகரித்தால்... அதிக மகசூல் கிடைக்கும். ஒரு கிலோ விதை குறைந்தபட்சம் பத்து  ரூபாய்க்கு விற்பனையாகிறது. இந்தக் கணக்கின்படி ஒரு ஏக்கரிலுள்ள 96 மரங்கள் மூலமாக ஏக்கருக்கு சுமாராக 10 ஆயிரம் ரூபாய் வருமானமாகக் கிடைக்கும். 10 ஆண்டுகளில் முதிர்ச்சி அடையும் ஒரு வேப்ப மரம், 4 ஆயிரம் ரூபாய் வரை விலைபோக வாய்ப்பிருக்கிறது. ஒரு ஏக்கரிலுள்ள 96 மரங்கள் மூலமாக 3,84,000 ரூபாய் வருமானமாகக் கிடைக்கும். இது தற்போதைய விலைதான். பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இதன் மதிப்பு இன்னும் அதிகமாகும். அதேபோல் வீடு மற்றும் வரப்புகளில் வளர்க்கும் மரங்களை பல ஆண்டுகள் வளர்க்கும்போது அதற்கு நள்ளவிலை கிடைக்கின்றது.   

Tuesday, November 22, 2011

புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளுக்கு ஒரு நற்செய்தி !

புதுக்கோட்டை மாவட்டம் விவசாயிகளுக்கு ஒரு திட்டம் தொடங்கிருக்காங்க பதினஞ்சு நாளுக்கு ஒரு தடவை அதிகாரிக கிராமங்களுக்கே வந்து வேளாண் தொழில் நுட்பசெய்திகள், அரசோட திட்டங்கள் எல்லாத்தையும் விவசாயிகளுக்கு நேரடியா சொல்லிக் கொடுக்கப்போரங்கலாம். அந்த மாதிரி வர்ற வேளாண்மை அதிகாரிங்க கிட்டவே மானியத்துல இடுபொருள் வாங்குறதுக்கான பரிந்துரை சீட்டையும் வாங்கிக்கலாமாம். அந்தப் பகுதியில இருக்குற வேளாண்மை விரிவாக்க மையங்கள்ல அதிகாரிகளோட பயணத்திட்டம் பத்தி தெரிஞ்சுக்க முடியுமாம். அதைத் தெரின்சுகிட்டு விவசாயிக தயராகிக்கலாமாம்.

Sunday, November 20, 2011

வேங்கை தரும் வெகுமதி...!



இரா.ராஜசேகரன்
வனத்துறை உதவி வனப்பாதுகாவலர்

வறட்சியைத் தாங்கி வளரும். ஏக்கருக்கு 200 மரங்கள். ஒரு மரம் 50 ஆயிரம்.

வணிக ரீதியான மரங்களில், சிலவற்றுக்கு எப்பொழுதுமே கிராக்கி இருந்து கொண்டே இருக்கும். அந்த வரிசையில் வரும் தேக்கு, தோதகத்தி ஆகியவற்றுக்கு அடுத்து தரமான மரமாக கருதப்படுவது... வேங்கை!

இது மருத்துவகுணம் வாய்ந்த மரமும்கூட. இம்மரத்தில் செய்த குவளையில் நீர் அருந்தினால் நீரிழிவு நோய் குணமாகும், இம்மரத்தின் பிசின் வயிறு சம்பந்தப்பட்ட நோய்களுக்குச் சிறந்த மருந்து. இதை வெட்டும்போது, சிவப்பு நிறத்தில் ரத்தம் போல சாறு வடிந்துக் கொண்டே இருக்கும்.

இனி, வணிக ரீதியாக வேங்கையைப் பயிரிடும் முறை பற்றி பார்ப்போமா?

கடற்கரைப் பகுதிக்கு ஏற்றதல்ல!

பொதுவாக தாழ்ந்தக் குன்றுப் பகுதிகள், மலையை ஒட்டியச் சமவெளிப் பகுதிகளில் நன்றாக வளரும். குறிப்பாக, மேற்கு மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலையோரப் பகுதிகளுக்கு ஏற்ற மரம். சமவெளிப் பகுதிகளில் நல்ல வளமான, ஆழமான செம்மண் நிலங்களில் நன்றாக வளரும். கடற்கரை மணல் பகுதிக்கு இது ஏற்றதல்ல. ஏக்கருக்கு 250 கன்றுகளை நடவு செய்ய வேண்டும்.

10 லட்சம்!

12 அடிக்கு 12 அடி இடைவெளியில் குழியெடுத்து நடவேண்டும். ஒவ்வொரு குழியிலும் மண்புழு உரம்-ஒரு கிலோ, வேர்வளர்ச்சி உட்பூசணம்-30 கிராம் (வேம்), மட்கியத் தொழுவுரம்-ஒரு கிலோ, அசோஸ்பைரில்லம், பாஸ்போ- பாக்டீரியா- தலா 15 கிராம் ஆகியவற்றைக் கலந்து வைத்துவிட்டு, நடவு செய்ய வேண்டும். ஏக்கருக்கு 250 கன்றுகள் தேவைப்படும்.

வேங்கையைப் பொறுத்தவரை முதல் இரண்டு ஆண்டுகள் வளர்ச்சி சற்று மந்தமாகத்தான் இருக்கும். அதற்கு மேல் அபார வளர்ச்சி இருக்கும். வளர்ச்சி குறைந்த மரங்கள் மற்றும் குறைபாடுள்ள மரங்கள் ஆகியவற்றை 5 அல்லது 6-ம் ஆண்டுகளில் கண்டறிந்து, சுமார் 50 மரங்களை கழித்து விடவேண்டும். ஒரு வேளை, இந்த மரங்கள் நன்றாக இருந்தாலும், கழித்துவிட்டால்தான், மற்ற மரங்களின் வளர்ச்சி நன்றாக இருக்கும். கழிக்கப்பட்ட மரங்கள் சிறு மரச்சாமான்கள் செய்வதற்கு பயன்படும்.

இதன் பிறகு சுமார் 200 மரங்கள் தோட்டத்தில் இருக்கும். அவ்வப்போது நோய் மற்றும் இயற்கை இடர்பாடுகளால் சேதப்படும் கிளைகளை அகற்றி விடவேண்டும். இது வறட்சியை நன்றாகத் தாங்கி வளரும். கடுமையான வறட்சிக் காலங்களில் இதன் இலைகள் உதிர்ந்து, மரமே பட்டுப் போனது போல் தோன்றும். ஆனால், மழை பெய்ததும் துளிர்த்து வளர்ந்துவிடும். இது ஓங்கி உயர்ந்து வளரும்போது அதிக சூரிய ஓளித் தேவைப்படும். அதனால் பிற மரங்களின் நிழல் விழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

வேங்கையைப் பொறுத்தவரை 10 ஆண்டுகளில் அறுவடை செய்யலாம். ஒரு மரத்துக்குச் சுமார் 5,000 ரூபாய்க்குக் குறையாமல் விலை கிடைக்கும். இந்தக் கணக்குப்படி பத்து ஆண்டுகளில் ஒரு ஏக்கரில் உள்ள 200 மரங்களில் இருந்து 10 லட்ச ரூபாய் வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது.

வேங்கைக்கு ஊடுபயிர் சவுக்கு!

இரண்டு ஏக்கரில் வேங்கையை நடவு செய்திருக்கும் மதுரை மாவட்டம் பேரையூர் அருகேயுள்ள சாலிச்சந்தை கிராமத்தைச் சேர்ந்த தயாநிதி சொல்வதைக் கேளுங்கள்.

''எனக்கு 14 ஏக்கர் நிலமிருக்குது. இதுல 5 ஏக்கர்ல தென்னை, 5 ஏக்கர்ல தேக்கு, 2 ஏக்கர்ல சவுக்கு, 2 ஏக்கர்ல வேங்கை நடவு செஞ்சிருக்கேன். வேங்கையை நட்டு மூணு வருஷமாச்சு. 12 அடிக்கு 12 அடி இடைவெளியில ரெண்டு ஏக்கருக்கும் சேர்த்து 500 கன்னுகள நட்டுருக்கேன். வாய்க்கால் பாசனம் செய்றேன். ஆரம்பத்துல வாரம் ஒரு தண்ணி கொடுத்தேன், இப்ப மாசம் ரெண்டு தண்ணி கொடுக்குறேன். மத்தப்படி பராமரிப்புனு எதையும் செய்யல.

வேங்கைக்கு இடையே ஆரம்பத்துல பாசிப்பயறு, உளுந்து மாதிரியான பயிர்களை ஊடுபயிரா சாகுபடி செஞ்சேன். ஒரு வருஷத்துக்கு முன்ன, வேங்கைக்கு இடையில 6 அடி இடைவெளியில, ஏக்கருக்கு 1,000 சவுக்கு மரத்தை நட்டு விட்டுட்டேன். இப்ப அதுவும் நல்லா வளர்ந்திருக்கு. வேங்கையில வருமானம் எடுக்க 10 வருஷம் காத்திருக்கணும். அதனால, சவுக்கை ஊடுபயிரா நட்டுட்டா... நாலு வருஷத்துக்கொரு தடவை ஏக்கருக்கு

50 ஆயிரம் ரூபாய் எடுத்துடலாம். 10-ம் வருஷம் வேங்கை மூலமாக ஏக்கருக்கு குறைஞ்சது 10 லட்சம் வருமானம் பாத்துடலாம்''

தயாநிதி, இன்னும் வேங்கையில் வருமானம் எடுக்கவில்லை. இவர் சொல்லும் கணக்கும் இன்றையச் சந்தை நிலவரத்தின் அடிப்படையிலான உத்தேச கணக்குதான். நிச்சயம் இந்த விலை கிடைக்குமா என்ற சந்தேகம் உள்ளவர்கள்... புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகேயுள்ள நகரம் என்ற ஊரைச் சேர்ந்த சிங்காரவேல் சொல்வதையும் கேட்டுவிடுங்களேன்.

''இப்ப எனக்கு வயசு 91. என்னோட 31-ம் வயசுல ஒருத்தர் கொடுத்த கன்னுகளை விளையாட்டா நட்டு வெச்சேன். அப்பப்ப தண்ணி ஊத்துனதை தவிர பெருசா எந்த பராமரிப்பும் செய்யலை. மொத்தம்

34 மரம் இருக்கு. அறுபது வயசான அந்த மரம் ஒவ்வொண்ணும் பிரமாண்டமா நிக்குது. பல வியாபாரிக வந்து 20 லட்சம் தர்றேன், 25 லட்சம் தர்றேன்னு கேக்குறாங்க. ஒரு மரத்துக்கே 60 ஆயிரம் ரூபாய்ககு மேல வருது அவங்க சொல்ற கணக்கு. ஆனா, இதுவரைக்கும் யாருக்கும் கொடுக்கல. ஒரு காலத்துல விளையாட்டா வெச்ச மரம்... இன்னிக்கு என் குடும்பத்துக்கு பெரும் சொத்தா இருக்குறதை நினைச்சா பெருமையா இருக்கு.''

'தாவரங்கள், தலைமுறைகளை வாழ வைக்கும் வரங்கள்' என்ற கூற்று எத்தனை உண்மை!

Sunday, November 13, 2011

மாசில்லாத காற்றை சுவாசிக்க செண்பக மரங்கள்!

சுற்றுப்புறத்துக்கு சுகம் தரும் செண்பக மரங்களை நட்டு வளர்க்க வனத்துறை யோசனை தெரிவித்துள்ளது; அழியும் நிலையில் உள்ள காட்டு செண்பக மரங்களை இனப்பெருக்கம் செய்யும் முயற்சி முடுக்கி விடப்பட்டுள்ளது.

மக்கள் தொகை, வீடு, வாகனங்களின் எண்ணிக்கையால், சுற்றுப்புறச் சூழல் வெகுவாக பாதிக்கப்படுகிறது. சுத்தமான காற்றை சுவாசிக்க உதவும் மரங்கள் நிறைந்த மலை மாவட்டமான நீலகிரியில் கூட, சமீபகாலமாக வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்க துவங்கியுள்ளது. சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்க பொதுநல அமைப்புகள் குரல் கொடுத்து வரும் நிலையில், வனத்துறையும் தனது பங்களிப்பாக, செண்பக மரங்களை நட்டு வளர்க்க யோசனை தெரிவித்துள்ளது.

"மக்னோலயேசி' என்ற தாவர இயல் குடும்பத்தில் "மைக்கேலியா சம்பகா' என்ற அறிவியல் பெயரைக் கொண்ட சண்பகமரம், செண்பக மரம் என அழைக்கப்படுகிறது. இதன் சிறப்புகளை தென்னிந்திய தாவரவியல் வல்லுனர்கள் மேத்யூ, ஜான் பிரிட்டோ விரிவாக விளக்கியுள்ளனர்.
செண்பக மரத்தின் இலைகள் நீண்டு வளர்ந்து, மேற்புறம் பசுமையாகவும், பின்புறம் உரோமங்கள் மண்டிக் கிடப்பதாலும், காற்றில் உள்ள தூசுகளை அகற்றும் தன்மையை கொண்டுள்ளது. மஞ்சள் நிறமாக உள்ள மலர்களின் வாசனை காற்றோடு கலந்து, சுற்றுப்புறத்தை மிக ரம்மியமாக வைத்திருக்க உதவுகிறது.

பூக்களில் இருந்து கிடைக்கும் கெட்டியான பசை, வேதியியல் பொருட்களால் கரைத்து எடுக்கப்பட்டு, பலவித வாசனை திரவியங்கள் தயாரிக்க பயன்படுத்தப்படுகின்றன. விதை, வேர், பட்டையில் பல வேதியியல் எண்ணெய், அல்கலாய்டுகள், ஒலியிக் சினாயிக் மற்றும் பால்மிடிக் உட்பட பொருட்கள் உள்ளன. மரங்கள் மிளிரும் தன்மையை கொண்டுள்ளன.
மரங்கள் எடை குறைவாகவும், உறுதித் தன்மை அதிகமாகவும் உள்ளதால், கடந்த காலங்களில் விமானக் கட்டுமானப் பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது; வீட்டு உபயோகப் பொருட்கள் செய்யவும் பயன்படுகிறது. கட்டைகளைக் காய்ச்சி வடிப்பதன் மூலமாக ஒரு வகையான கற்பூரமும் தயாரிக்கப்படுகிறது. மேலும் இது கைவினைப்பொருட்கள் தயாரிப்பிலும் முக்கியப் பங்காற்றுகிறது. கடல் மட்டத்துக்கு மேல் 1,000 அடி வரையுள்ள சோலைக் காடுகளில் இயற்கையாகவே இம்மரங்கள் வளரும்; எளிதாக இனப்பெருக்கம் செய்யவும் முடியும்.

சாலையின் இருபுறம், வீட்டு முகப்பு, கோவில், குளக்கரை மற்றும் பொது இடங்களில் மரங்கள் வளர்க்கப்படுகின்றன; மலை மாவட்டமான நீலகிரியில், கூடுதலாக நடவு செய்தால், சுற்றுப்புறச் சூழல் ரம்மியமாக இருக்கும்.
இதன் மற்றொரு வகையான "மைக்கோலியா நீலகிரிக்கா' என்ற பெயரைக் கொண்ட வெள்ளை வண்ண மலர்களை கொண்ட காட்டு  செண்பகம் மரங்கள், அழிவின் விளிம்பில் உள்ளதால் நடவு செய்ய வேண்டும்.

Thursday, November 10, 2011

மறைக்கப்படும் மானியத் திட்டங்கள்!


தோட்டக்கலைத்துறை மூலம் வழங்கப்படும் மானியத் திட்டங்கள் குறித்த விவரங்கள், பயன்கள், குறு மற்றும் சிறு விவசாயிகளுக்கு தெரியாமல் மறைக்கப்படுகிறது.
வேளாண்மை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் தனித்துறையாக தோட்டக்கலைத்துறை செயல்பட்டு வருகிறது. விவசாயத்தில் பணப்பயிர் சாகுபடியை ஊக்குவிப்பதற்காக வேளாண்மைத் துறையில் இருந்து பிரித்து தோட்டக்கலைத்துறை ஏற்படுத்தப்பட்டது.
மா, பலா, கொய்யா, சப்போட்டா உள்ளிட்ட பழ சாகுபடி, ரோஜா, மல்லிகை, சம்பங்கி உள்ளிட்ட மலர் சாகுபடி, முருங்கை, தக்காளி, புளி உள்ளிட்ட காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் தோட்டக்கலைத்துறை மூலம் அதிகபட்சமாக 50 சதம் வரை மானியம் வழங்கப்படுகிறது.
பழ வகை மரங்கள் சாகுபடியில் பெரு விவசாயிகள் மட்டுமே ஈடுபடுகின்றனர்.
இதனால் தோட்டக்கலைத் துறையின் மூலம் உள்ள மானியத் திட்டங்கள் குறித்து நன்கு அறிந்துகொண்டுள்ளனர். குறு மற்றும் சிறு விவசாயிகளில் பலர் மல்லிகை, சம்பங்கி உள்ளிட்ட மலர் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் இவ் விவசாயிகளுக்கு இந்த மானியத் திட்டங்கள் குறித்த விவரங்கள் தெரிவதில்லை.
இதனால் ஒவ்வொரு ஆண்டும் தோட்டக்கலைத்துறைக்கு ஒதுக்கப்படும் நிதியில் 80 சத தொகை பெரு விவசாயிகளையே சென்றடைகிறது.
அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மருத்துவர்கள், தொழிலதிபர்கள் ஆகியோரின் பண்ணை வீட்டுத் தோட்டங்களில் ஒவ்வொரு ஆண்டும் பழ மர சாகுபடி நிலப்பரப்பை அதிகரித்துக்கொள்ளவே இத் திட்டம் உதவுகிறது.
மாவட்டத்தில் எப்போதாவது ஒரு முறை, எங்காவது சில ஒரு இடங்களில் மட்டுமே நடைபெறும் சிறப்பு மனுநீதி நாள் முகாம்களில் 4 மணி நேரம் அரங்கு அமைத்து திட்டங்கள் குறித்து அங்குவரும் சில விவசாயிகளிடம் மட்டும் தெரிவிப்பதனால் மானியத் திட்டங்கள் குறித்த விவரங்களை அனைத்து விவசாயிகளும் அறிந்துகொள்ள முடியாது.
மல்லிகை, சம்பங்கி போன்ற மலர் சாகுபடியில் குறு மற்றும் சிறு விவசாயிகள் பெருமளவில் ஈடுபட்டுள்ளனர். பொருளாதார நெருக்கடியில் சிக்கிப் பரிதவித்துவரும் சிறு, குறு விவசாயிகள் உணவுக்கு ரேசன் அரிசி வாங்கிகொண்டு, தங்களது நிலங்களில் பணப் பயிர்களை சாகுபடி செய்துவருகின்றனர்.
இப்பயிர் சாகுபடிக்கு அரசு மானியம் வழங்குகிறது என்ற விவரம் பெரும்பாலான விவசாயிகளுக்குத் தெரிவதில்லை.
அரசின் மானியத் திட்டங்கள் சென்றடைவதன் மூலம் இவ்விவசாயிகளின் பொருளாதார நிலை சிறிதளவேனும் மேம்படும்.
இதற்கு வேளாண் விரிவாக்க மையங்கள் போன்று ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் தோட்டக்கலைத் துறைக்கும் தனி அலுவலகத்தை ஏற்படுத்த வேண்டும்.
இது இப்போதைக்கு சாத்தியமில்லை எனில் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் தோட்டக்கலைத் துறையின் சேவை மையங்களை ஏற்படுத்த வேண்டும்.
தமிழக அரசு பொறுப்பேற்றவுடன் அறிவித்த விவசாய கடன் தள்ளுபடி திட்டத்தால் குறு மற்றும் சிறு விவசாயிகளுக்கு பயனில்லை என்ற விவாதம் கடந்த 4 ஆண்டுகளாக தொடர்ந்துகொண்டிருக்கிறது.
இதேபோல் பெருமளவில் மானியத் திட்டங்களை கொண்டுள்ள தோட்டக்கலைத் துறையின் திட்டங்களும் குறு மற்றும் சிறு விவசாயிகளுக்கு எந்த பயனையும் அளிக்கவில்லை என்ற விவாதமும் விவசாயிகளால் முன்வைக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.
                                                                                                                            தினமணி தகவல்