Thursday, December 15, 2011

வாகை மரம் வளர்ப்பீர்

வாகை மரம்… மன்னர்கள் காலத்தில், வெற்றியின் அடையாளமாக இம்மரத்தின் மலர்களைத்தான் சூடுவார்கள். அதனால்தான் ‘வெற்றி வாகை’ என்ற சொல்லே உருவானது. வெற்றியின் அடையாளமான இம்மரம், விவசாயிகளையும் வருமானத்தில் வெற்றிபெற வைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

ஆடு, மாடுகளுக்குத் தீவனம், நிலத்துக்குத் தழையுரம், வீட்டுக்குத் தேவையான கதவு, ஜன்னல் போன்ற பலன்களோடு… மண்ணரிப்பைத் தடுக்கவும் பயன்படுகிறது இந்த வாகை. தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வளரும் தன்மையுடைய இந்த மரம், நமது தோட்டத்தில் இருந்தால்… அது, வங்கியில் போட்டு வைத்த வைப்புநிதிக்கு ஒப்பானது.

முருங்கை இலையைப் போன்ற இலைகளுடன், சீகைக்காயைப் போன்ற காய்களைக் கொண்டிருக்கும் இந்த மரம், மருத்துவத்திலும் முக்கியப் பங்காற்றுகிறது. வாகை மரத்தின் பட்டையை நிழலில் உலர்த்தி பொடித்து, பாலில் கலந்து குடித்து வந்தால்… பசி எடுக்காத பிரச்னை தீரும், வாய்ப்புண் குணமாகும். இதன் பூக்களை நீர் விட்டு பாதியாகச் சுண்டும் அளவுக்குக் காய்ச்சிக் குடித்தால், வாதநோய் குணமாகும். விஷத்தையும் முறிக்கும்.

மானாவாரிக்கு ஏற்றது !

வாகை மரங்கள் வணிகரீதியாகவும் அதிகப் பலன் தருபவை. மானாவாரி நிலங்களில் வளர்க்க மிகவும் ஏற்றவை. தனிப்பயிராக வளர்க்காவிட்டாலும், வேலியோரங்கள், காட்டோடைகள், காலியாக உள்ள இடங்களில் ஒன்றிரண்டு மரங்களை நட்டு வைத்தாலே… 10 ஆண்டுகளில் நல்ல வருவாய் கிடைக்கும். அத்துடன் ஒரு மரம், ஓர் எருமையின் வருடாந்திரத் தீவனத் தேவையில் 20% அளவையும், ஒரு பசுவின் தீவனத் தேவையில் 30% அளவையும் தீர்க்கவல்லது. இதன் இலையில் உள்ள புரதம், கால்சியம், பாஸ்பரஸ் ஆகிய சத்துக்கள் கால்நடைகளின் வளர்ச்சிக்கு உதவுகின்றன. உலர்ந்த வாகை இலையில் 2.8% நைட்ரஜன் உள்ளதால், இதைச் சிறந்த தழையுரமாகவும் பயன்படுத்தலாம்.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த வாகையை வளர்க்கும் முறைகளைப் பற்றி பார்ப்போமா..?

அனைத்து மண்ணிலும் வளரும் !

வாகை அனைத்து மண்ணிலும் சிறப்பாக வளரும். மண்கண்டம் குறைவாக உள்ள நிலங்கள், உவர், அழல் நிலங்கள், உப்புக்காற்று உள்ள கடற்கரை ஓரங்கள், சுண்ணாம்புச் சத்து நிறைந்த நிலம்… என அனைத்து வகை நிலங்களிலும் வளரும். தவிர, 0.11% உப்பும், கார, அமில நிலை 8.7 உள்ள நிலங்களிலும்கூட இது வளரும். நிலங்களில் இந்த அளவுக்கு மேல் களர் தன்மை இருந்தாலும், நடவு செய்யும் முன் குழியில் ஒரு கிலோ ஜிப்சம், ஒரு கிலோ தொழுவுரத்தை இட்டு, நடவு செய்தால் போதும்.
ஒன்பது அடி இடைவெளி !

நடவு செய்யும் நிலத்தை நன்றாக உழவு செய்து ஒரு கன அடி குழியெடுத்து, ஒவ்வொரு குழியிலும் மண்புழு உரம்-1 கிலோ, வேர் வளர்ச்சி உட்பூசணம் (வேம்)-30 கிராம், தொழுவுரம்-1 கிலோ, அசோஸ்பைரில்லம், பாஸ்போ-பாக்டீரியா தலா-15 கிராம் ஆகியவற்றை போட்டு, 9 அடிக்கு 9 அடி இடைவெளியில் கன்றுகளை நடவு செய்ய வேண்டும். இப்படி நடவு செய்யும்போது ஏக்கருக்கு 540 கன்றுகள் தேவைப்படும்.

நடவு செய்த 6-ம் மாதம் கன்றைச் சுற்றிக் கொத்தி விட்டு, தொழுவுரம், ஆட்டு எரு இரண்டையும் தூள் செய்து 1 கிலோ அளவுக்கு குழியைச் சுற்றி தூவி விட்டால்… விரைவாக வளரும். ஆடு, மாடுகளுக்கு எட்டாத உயரத்துக்கு மரம் வளரும் வரை கவனமாகப் பாதுகாக்க வேண்டும்.
ஒரு வரிசையைக் கழிக்க வேண்டும் !

சாதாரண நிலங்களில் ஆரம்ப காலங்களில் ஆண்டுக்கு ஒரு மீட்டர் உயரம் வரை வளரும். நல்ல வளமான நிலங்களில் ஒன்றரை மீட்டர் உயரம் வரை வளரும். நடவு செய்த ஐந்து ஆண்டுகள் வரை வாகையில் கிடைக்கும் தழைகளைக் கால்நடைகளுக்கும், உரத்துக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம், என்பதால்தான் 9 அடி இடைவெளியில் நடவு செய்கிறோம். 5 ஆண்டு வயதுக்கு மேல் வணிகரீதியாகப் பலன் பெற, மரத்தைப் பருக்க வைக்க வேண்டும்.
இதற்காக ஒரு வரிசை விட்டு ஒரு வரிசையில் உள்ள மரங்களை வெட்டி விட வேண்டும். வெட்டிய மரங்களை விறகுக்கு விற்பதன் மூலம் குறிப்பிட்ட அளவு தொகை வருவாயாகக் கிடைக்கும். மரங்களைக் கழித்த பிறகு, ஒரு ஏக்கரில் 270 மரங்கள் இருக்கும்.

நடவு செய்த 10-ம் வருடத்தில் மரங்களை அறுவடை செய்யலாம். நன்கு வளர்ச்சியடைந்த ஒரு மரம் 80 சென்டி மீட்டர் பருமனும் 18 மீட்டர் உயரமும் கொண்டிருக்கும். ’10 ஆண்டுகள் வளர்ந்த மரம் தற்போது சராசரியாக 10 ஆயிரம் ரூபாய்க்கு விலை போகிறது’ என வியாபாரிகள் சொல்கிறார்கள். சராசரியாக ஒரு மரம் 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானாலும்… ஒரு ஏக்கரில் இருக்கும் 270 மரங்கள் மூலமாக 27 லட்ச ரூபாய் வருமானமாகக் கிடைக்க வாய்ப்புள்ளது.

வேம்பை விட வேகமா வளருது !

வாகையை தனிப்பயிராக சாகுபடி செய்திருக்கிறார் மதுரை மாவட்டம், டி. குன்னத்தூர் சுபாஷ். அவருடைய அனுபவம்… உங்களுக்கு உதவியாக இருக்கும். அவருக்குக் கொஞ்சம் காதுகொடுங்களேன்… ”மூணு ஏக்கர்ல வாகையை சாகுபடி செஞ்சுருக்கேன். 20 அடிக்கு 20 அடி இடைவெளியில நடவு செஞ்சு, நாலரை வருஷமாச்சு. ஏக்கருக்கு 110 மரம் இருக்கு. நடவு செஞ்ச ஆறு மாசம் வரைக்கும்தான் தண்ணி கொடுத்தோம். அதுக்குப் பிறகு பாசனம் செய்யல. மானாவாரியாகவே வளர்ந்துடுச்சு.

வாகை நடவு செஞ்சப்பவே… பக்கத்துல இருக்குற இடத்துல வேம்பு, புளி ரெண்டையும் நடவு செஞ்சேன். என்னோட அனுபவத்துல வேம்பை விட ரெண்டு மடங்கு வேகமா வளருது வாகை. 10 வருஷத்துல இதை வெட்டலாம்னு சொல்றாங்க. இன்னிக்கு நிலவரத்துக்கு பத்து வருஷ மரம் 10 ஆயிரம் ரூபாய்ல இருந்து 15 ஆயிரம் ரூபாய் வரைக்கும் விலை போகுது. குறைஞ்ச பட்சம் 10 ஆயிரம்னு வெச்சுக்கிட்டாலும் ஏக்கருக்கு 11 லட்ச ரூபா கிடைக்கும்னு எதிர்பார்க்கிறேன்.”

இனி உங்கள் வசதி வாய்ப்பை யோசித்து, வாகையை நடவு செய்யுங்கள்… வாகை சூடுங்கள்!
                                     தொடர்புக்கு சுபாஷ்,
                                     செல்போன்: 98427-52825.

வாகையில் இரண்டு வகை !

அல்பிஸியா லெபெக் (Albizia lebbeck) என்கிற தாவரவியல் பெயரில் அழைக்கப்படும் வாகையின் தாயகம்… தெற்காசியா. வாகை, தூங்குமூஞ்சி வாகை என இரண்டு வகைகள் உண்டு. இதில் தூங்குமூஞ்சி வாகை, அவ்வளவாக வணிகப் பயன்பாட்டுக்கு உதவாது. நிழலுக்கு மட்டும்தான் பயன்படும். எனவே, வணிகரீதியாகப் பயன்பெற வாகையையும்… சாலையோரங்கள், அலுவலகங்கள் மற்றும் பள்ளி வளாகங்களில் நிழல் கொடுக்க, தூங்குமூஞ்சி வாகையையும் நடவு செய்யலாம்.

பிரசுரம் காப்புரிமை
இரா.ராஜசேகரன் வனத்துறை உதவி வனப்பாதுகாவலர்.

Tuesday, December 13, 2011

வருங்கால வளர்ப்பு நிதி ...வாரிக் கொடுக்கும் தேக்கு...!


தேக்கு மரம் எல்லா பூமியிலும் வளரும். வறட்சியைத் தாங்கி வளரக்கூடியது. அதே சமயம் தண்ணீர் அதிகம் பாய்ச்சினால் மிக நன்றாக வளரும். ஆனால் தணீர் தேங்கி நிற்கும் இடத்தில் வளராது.தேக்கு மரம் பலமுள்ள பலகையை மட்டுமல்ல, பலமான வருமானத்தையும் கொடுக்கும் மரமாகும்.

பராமரிப்புக்காக அதிகம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. ஆடு, மாடு சாப்பிடாது... பூச்சி, நோய் தாக்குதலால் பாதிப்பு இருக்காது... முறையாக பாசனம் மட்டும் கொடுத்தால் போதும்! 6 அடி உயரத்துக்கு மேல் வளர்ந்துவிட்டால், தேக்கு மரம் தன்னைத் தானே பராமரித்துக் கொள்ளும்.

கப்பல், படகு, மரச் சாமான்கள், கதவு, ஜன்னல் மற்றும் அலங்காரப் பொருட்கள் தயாரிப்பில் பயன்படுவதால், சர்வதேச அளவில் பெரும் தேவை இருக்கிறது. தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இது நன்றாக வளரும்.

ஆடி மாதத்திலிருந்து கார்த்திகை மாதம் வரை நடுவது சிறந்த காலமாகும். மழைக்காலமாக இருப்பதால் நன்கு வளரும். பின்பு வெய்யில் காலத்தில் 10-15 நாட்களுக்கு ஒரு தண்ணீர் பாய்ச்சினால்கூடப் போதுமானது.

தேக்குச் சாகுபடியில் தேக்கு விதையை மேட்டுப் பாத்தி அமைத்து அதில் விதையைத் தெளித்து தினமும் 2 முறை தண்ணீர் தெளித்து வளர்க்க வேண்டும். 8 மாதம் வளர்ந்த பின்புதான் அதை வேருடன் பிடுங்கி மேல் வெட்டிவிட்டு அடிப்பகுதியை (வேர்ப்பகுதி) தேக்கு மரம் பயிர் செய்யும் பூமியில் நடவேண்டும். இதைத்தான் தேக்கு பதியங்கள் என்று சொல்லுகிறோம்.இந்தத் தேக்கு நாற்றுப் பதியங்களை நேரடியாக பூமியில் நடலாம். அல்லது அதையே பாலிதீன் பையில் போட்டு வளர்த்த பின்பும் நடலாம்.

தேக்கு, நல்லவடிகால் வசதியுள்ள ஆற்று வண்டல் மண் மற்றும் மணற்பாங்கான செம்மண் நிலங்களில் நன்றாக வளரும். நிலத்தை நன்றாக உழவு செய்து கொள்ள வேண்டும். மழைக் காலத்துக்கு முன்பாக 15 அடிக்கு 15 அடி இடைவெளியில் இரண்டு அடி நீள, அகல, ஆழத்தில் குழியெடுத்து, நடவு செய்ய வேண்டும். ஒவ்வொரு குழியிலும் முக்கால் பாகத்துக்கு மட்கிய தொழுவுரத்துடன் வண்டல் மண்ணைக் கலந்து இட்டு, மீதமுள்ள குழியை மேல் மண்ணைக் கொண்டு நிரப்ப வேண்டும்.மூன்று மாதம் வரை, வாரம் ஒரு முறையும், அதன் பிறகு பதினைந்து நாட்களுக்கு ஒரு முறையும் நீர்ப்பாய்ச்சுவது நல்லது. சொட்டுநீர்ப் பாசனம் அமைத்தால், நல்ல மகசூல் கிடைக்கும்.

தேக்கு மரங்கள் தரமானதாகவும், பக்கக் கிளைகள் இல்லாததாகவும் வளர்ந்தால்தான் அதிக வருமானம் கிடைக்கும்.குறைபாடு இல்லாத, வளைவுகள் இல்லாத ஒரே நேர்க்கோட்டுல வளர்ந்திருக்கற மரங்களுக்குத்தான் மவுசு அதிகம். அப்படி வளர்க்கறதுக்கு அடிப் படையான சில விஷயங்களைத் தெரிஞ்சு வெச்சிக் கணும். தென்னந்தோப்புல தேக்கு போட்டா தென்னைக்கும் தேக்குக்கும் நடுவுல 10 அடி இடைவெளி இருக்கணும். ரெண்டு தேக்குக்கு நடுவுல 15 அடி இடைவெளி அவசியம். பக்கக்கிளைகளை தரைமட்டத்திலிருந்து மரத்தின் உயரத்தில் மூன்றில் இரு பங்கு உயரத்தில் மட்டுமே கழிக்க வேண்டும்.தேக்கு மரம் 100 - 120 ஆண்டுகள் உயிர்வாளும்.

ஒரு ஏக்கரில் 250 தேக்கு மரங்களை வளர்த்தெடுத்தால், 20 அல்லது 25 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு மரம் 30,000ல் லிருந்து 40,000 ரூபாய் விற்கும், இது தற்போதைய விலைதான் 20 ஆண்டுக்குப்பின் அதிகமாக இருக்கும். இது செம்மண் பூமிக்குத்தான் மற்ற இடங்களில் குறைவாகத்தான் கிடைக்கும்.

குறிப்பு : தேக்குமரம் ஒரு வரிசையாகவும் வேறுவகை மரம் ஒரு வரிசையாகவும் (செஞ்சந்தனம், மகோகனி, வேங்கை, கயா,சிசு, மாஞ்சியம்) அமைத்தால் இரண்டும் நன்றகவளரும்.    

Wednesday, December 7, 2011

கவலையைப் போக்கும் கடம்பு!



இந்தியாவில் உள்ள தொன்மையான மரங்களில் முக்கியமானது... கடம்பு. இந்தியாவின் ஒற்றுமைக்கே இது ஓர் உதாரணமாகத் திகழ்கிறது என்றுகூட சொல்லலாம். ஆம்... தமிழ், இந்தி, சமஸ்கிருதம் என இந்தியாவில் பேசப்படும் பல்வேறு மொழிகளிலும் 'கடம்பு’ என்றே இது அழைக்கப்படுகிறது.

1977-ம் ஆண்டு இந்திய அரசால், அஞ்சல் தலையில் பொறிக்கப்பட்ட பெருமையுடையது இம்மரம். இதன் பலகையைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட கட்டிலில் படுத்தால்... அலுப்பு நீங்கி, சுகமான தூக்கம் வரும். அதனால்தான் நம் முன்னோர்கள், 'உடம்பை முறித்து கடம்பில் போடு’ என்று ஒரு சொலவடையைச் சொல்லி வைத்திருக்கிறார்கள்.

பறவைகளுக்கு பழங்களுக்காகவும், மனிதர்களுக்கு மருந்துக்காகவும் பயன்படுவதோடு, காகிதம், பென்சில், தீப்பெட்டி, தீக்குச்சி எனப் பல வகையான பொருட்களுக்கு மூலப்பொருளாகவும் பயன்படுகிறது, கடம்பு. பெரும்பாலும், ஆற்றோரங்களில் இந்த மரங்களை அதிகளவில் நட்டு வைத்தனர் நம் முன்னோர்கள்.

இந்தியாவில் இயற்கையாக வளரும் இந்த மரம், கோஸ்டாரிகா, தென்னாப்பிரிக்கா, சுரினாம், தைவான், வெனிசுலா ஆகிய நாடுகளில் தோட்டப் பயிராகவும் வளர்க்கப்படுகிறது.

இனி, கடம்ப மரத்தை வளர்க்கும் முறைகளைப் பற்றி பார்ப்போமா..?

நீர்நிலைகளை ஒட்டி வளர்க்கலாம்!

கடல் மட்டத்தில் இருந்து 300 முதல் 800 மீட்டர் உயரத்தில் 1,600 மில்லி மீட்டர் மழையளவு உள்ள பகுதிகளில் இம்மரம் நன்றாக வளரும். நல்ல வடிகால் வசதியுள்ள வண்டல் மண் நிலங்களிலும் வளரும். மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரங்களில் உள்ள நிலங்கள், கடற்கரைப் பகுதிகள் கடம்ப மரம் வளர்க்க ஏற்ற பகுதிகள். கிராமங்களில், ஏரிகளின் கரையை ஒட்டிய நிலங்களிலும், ஆற்றோரங்களிலும் இதை வளர்க்கலாம். ஆனால், வளமில்லாத, மண்ணில் காற்றோட்டம் இல்லாத நிலங்களில் இது வளராது.

ஏக்கருக்கு 400 கன்றுகள்!

கடம்ப மரக் கன்றுகளை 15 அடிக்கு 15 அடி இடைவெளியில் குழியெடுத்து நடவு செய்ய வேண்டும். ஏக்கருக்கு 200 செடிகள் வரை தேவைப்படும். பென்சில் தயாரிப்புக்காக நடுவதாக இருந்தால்... 10 அடி இடைவெளியே போதுமானது. இப்படி நடவு செய்யும் போது, ஏக்கருக்கு 445 கன்றுகள் வரை தேவைப்படும். முதல் ஆண்டில் வளர்ச்சி மெதுவாகத்தான் இருக்கும். இரண்டாம் ஆண்டில் இருந்து வளர்ச்சி துரிதமாகும். 8-ம் ஆண்டுக்கு மேல் வளர்ச்சி வேகம் மட்டுப்படும்.

எட்டு முதல் பதினைந்து ஆண்டுகளில் தேவைக்கேற்ற வளர்ச்சி பெற்று விடும். அதன் பிறகு மரங்களை வெட்டலாம். வெட்டிய பிறகு வேகமாக துளிர்க்கும் என்பதால், தோட்டப் பகுதியில் சீரற்ற வளர்ச்சி கொண்ட மரங்களை தரையை ஒட்டி ஒரே வீச்சில் வெட்டுவதன் மூலம் சீரான, நேரான துரித வளர்ச்சி கொண்ட மறு துளிர்ப்பை உருவாக்கலாம். கடம்பின் இந்த குணத்தால், தொடர்ந்து மறுதாம்பு மூலம் மகசூல் எடுக்கலாம்.

10 ஆண்டு வயதுள்ள மரத்தில் இருந்து, குறைந்தபட்சம் 10 கன அடி மரம் கிடைக்க வாய்ப்புள்ளது. பென்சில் தொழிற்சாலைக்கு விற்பனை செய்யும் போது, கன அடிக்கு

250 ரூபாய் என வைத்துக் கொண்டால்கூட ஒரு மரத்துக்கு சுமார் 2,500 ரூபாய் விலை கிடைக்கும். இதன்படி ஒரு ஏக்கரில் உள்ள 400 மரங்கள் மூலமாக 10 லட்ச ரூபாய் வரை வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது.

கடம்ப மரத்தில் வைரப் பகுதியெல்லாம் கிடையாது. மொத்த மரமும் மஞ்சள் சாயல் கொண்ட, வெண்மை நிறத்தில் இருக்கும். இதில் அறுவை வேலைகள் செய்வது எளிதாக இருக்கும். அறுக்கப்பட்ட மரங்கள் சீரான மேற்பரப்பைக் கொண்டதாகவும், துளையிட எளிதாகவும் உள்ளதால், பென்சில் தயாரிப்புக்கு ஏற்ற மரமாக உள்ளது.

இதன் காரணமாகவே... நடராஜ் பென்சில் நிறுவனத்தினர் கோயம்புத்தூர் அருகே 200 ஏக்கரில் கடம்ப மரத்தை சாகுபடி செய்கிறார்கள். அங்கு விளையும் மரங்களைக் கொண்டு பல்லடத்தில் உள்ள அவர்களது தொழிற்சாலையில் பென்சில் தயாரிக்கிறார்கள்.

தேவை அதிகமாக இருப்பதால், கடம்ப மரத்துக்கான மவுசு கூடிக் கொண்டேதான் இருக்கிறது. இதை வைத்து, லாபத்தை அறுவடை செய்வது உங்கள் கைகளில் இருக்கிறது!

நோய்க்கு மருந்தாகும் கடம்பு!

கடம்பின் இலைகள், கால்நடைகளுக்குத் தீவனமாக பயன்படுகின்றன. இதன் இலை மற்றும் பட்டைகளில் இருந்து காடமைன், ஐசோகாடமைன், கடம்பைன் போன்ற அல்கலாய்டுகள் தயாரிக்கப்படுகின்றன. இவை மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கான மருந்து மற்றும் விஷ முறிவு மருந்துகளில் பயன்படுத்தப்படுகின்றன. இலைகளில் இருந்து தயாரிக்கப்படும் குளோரோஜெனிக் அமிலத்தில் ஈரல் பாதுகாப்புக்கான மருந்து இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இதன் இலை... வாய் மற்றும் தொண்டைப் புண்ணுக்கு மருந்தாகவும்; பழங்கள்... வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள் மற்றும் காய்ச்சலுக்கு மருந்தாகவும்; விதைகள்... விஷக்கடி, நீர்க்கட்டு போன்றவற்றுக்கு மருந்தாகவும்; பட்டை... உடல் பலவீனம், சூடு நோய், தசைப் பிடிப்பு, கண் சம்பந்தப்பட்ட நோய்கள் போன்றவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுகின்றன.

வேர், பட்டையில் இருந்து இயற்கைச் சாயம்; பூக்களைக் காய்ச்சி எடுக்கும் தைலத்தில் இருந்து வாசனைத் திரவியம் என பல பயன்பாடுகள் உள்ளன. இம்மரத்தின் பூக்கள் ஆரஞ்சு வண்ணத்தில் பூத்து அதிக நறுமணம் வீசுவதால்... தேனீக்களால் அதிகளவில் கவரப்படுகின்றன. அதனால், தேனி வளர்ப்புக்கு உதவுவதோடு மற்றப் பயிர்களின் மகசூலும் கூடுகிறது. இம்மரம் அதிக அளவில் இலைகளை மண்ணில் கொட்டுவதால், அங்கக கரிம வளத்தைக் கூட்ட உதவுகிறது.

பிரசுரம் காப்புரிமை
இரா.ராஜசேகரன் வனத்துறை உதவி வனப்பாதுகாவலர்.



Sunday, December 4, 2011

செழிப்பான வருமானம் தரும் செஞ்சந்தனம் ! (செம்மரம் )

சுனாமி போன்ற கடல்சீற்றங்களைத் தடுக்கும் அலையாத்தி மரங்களைப் போல, அணுக்கதிர் வீச்சைத் தடுக்கும் தன்மை கொண்ட மரம் செஞ்சந்தன மரம். இந்த அணுயுகத்துக்கு ஏற்ற மரம் என்றுகூட செஞ்சந்தன மரத்தைச் சொல்லலாம். பல அணு உலைக்கூடங்களில் அணுக்கதிர்களைத் தடுக்கும் அரணாக இதைத்தான் பயன்படுத்துகிறார்கள்.

ஜப்பான் நாட்டில் எக்ஸ்ரே, லேசர்... போன்ற வீரிய கதிர்வீச்சு சிகிச்சைகளைச் செய்யும் மருத்துவர்கள், சிகிச்சையின்போது கதிர்வீச்சைத் தடுப்பதற்காக, சிறிதாக வெட்டப்பட்ட செஞ்சந்தன மரத்துண்டை தங்கள் சட்டைப் பையில் வைத்துக் கொள்கிறார்களாம். ஒலி அலைகளைத் தடுக்கும் திறன் கொண்ட இம்மரங்கள், வெப்பத்தையும் அதிக அளவில் கடத்தாது. இவ்வளவு சிறப்புகள் இம்மரங்களுக்கு இருப்பதால், இவற்றின் சந்தை வாய்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

இந்த மரத்தை வணிகரீதியாக வளர்ப்பதைப் பற்றி பார்ப்போமா...

சரளை மற்றும் செம்மண் கலந்த மண் வகைகளில் இம்மரம் சிறப்பாக வளரும். படுகை நிலத்தில்கூட நன்றாக வளரும். ஆனால், நல்ல வடிகால் வசதி இருக்க வேண்டியது அவசியம். ஆழமான மண்கண்டம் உள்ள மானாவாரி செம்மண் நிலங்களிலும் வளர்க்கலாம்.

கட்டாயம் செய்யணும் கவாத்து!

12 அடி இடைவெளியில் குழி எடுத்து, வழக்கமாக மரக்கன்றுகளை நடவு செய்வதுப் போல இயற்கை உயிர் உரங்களைப் போட்டு நடவு செய்ய வேண்டும். மெதுவாகத்தான் இந்த செடிகள் வளரும். நன்கு வளர்ந்து வராத செடிகளை சில நாட்களிலேயே கண்டறிந்து அகற்றிவிட வேண்டும். மானாவாரி, இறவை என இரண்டு முறைகளிலும் இதைப் பயிரிடலாம். இறவையில் தண்ணீர் இருப்பதைப் பொறுத்து பாசனம் செய்து கொள்ளலாம். அவ்வப்போது செடிகளுக்கு சூரியஒளி நன்கு கிடைக்குமாறு கவாத்து செய்து வர வேண்டும். மழைக்காலத்துக்கு முன்பாக செடிகளைச் சுற்றிலும் மண்ணைக் கொத்திவிட வேண்டும். இம்மரங்களை பழத்தோட்டங்களில் காற்றுத் தடுப்புக்காகவும் நடவு செய்யலாம். பல இடங்களில் எலுமிச்சைத் தோட்டங்களில் செஞ்சந்தன மரங்களை காற்றுத் தடுப்பு அரணாகப் பயன்படுத்துகிறார்கள்.

ஒரு மரம் ஒரு லட்ச ரூபாய்!

இந்த மரத்தின் வைரம் பாய்ந்த பகுதி கருஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். 20 ஆண்டுகள் ஆன ஒரு மரம், வளர்ச்சியை மற்றும் அதன் தரத்தைப் பொறுத்து அதிகபட்சம் 10 லட்சம் ரூபாய் வரை விலை போகும். ஒரு ஏக்கரில் 400 மரங்கள் நடவு செய்து... அதில் 100 மரங்கள் மட்டுமே நன்றாக விளைகின்றன என வைத்துக் கொள்வோம். ஒரு மரம் குறைந்தபட்சம் 1 லட்ச ரூபாய்க்கு விற்றாலே... ஒரு கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும். கடந்த 2010-ம் வருடம் நவம்பர் 25-ம் தேதி திருப்பத்தூர் அரசு சந்தனக்கிடங்கில் நடந்த ஏலத்தில் ஒரு டன் 'சி’ கிரேடு செஞ்சந்தன மரம், 6 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கு விலை போயிருக்கிறது.

அனுமதி தேவையில்லை!

சந்தன மரத்தைப் போல இம்மரங்களை வெட்டுவதற்கு தனி அனுமதி எல்லாம் வாங்கத் தேவையில்லை. மற்ற மரங்களைப் போலவே வெட்டி விற்று விடலாம். இந்தியாவில் ஆந்திரா மற்றும் தமிழகத்தில்தான் இந்த மரம் அதிகமாக வளர்க்கப்படுகிறது. ஜப்பான், தைவான், சீனா... போன்ற நாடுகளில் இதன் தேவை அதிகம் உள்ளதால், சந்தை எப்போதும் சரியாது என்பதை கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். சந்தனத்துக்கு இணையான மதிப்புள்ளதால், இந்த மரங்களும் அதிக அளவில் வெட்டிக் கடத்தப்படுகின்றன என்பதும் கவனத்தில் இருக்கட்டும்.

டன் ஐந்து லட்சம்!

அறுவடைக்குத் தயாரான செஞ்சந்தன மரங்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 'மரம்' தங்கசாமி அவர்களின்  தோட்டத்தில் இருக்கின்றன. அதைப் பற்றி தங்கசாமியின் மகன் கண்ணன் சொல்வதையும் கேட்போமா..! ''எங்க அப்பா 20 வருஷத்துக்கு முன்ன வீட்டைச் சுத்தி இருந்த இடத்துல எல்லாம் சந்தனம், செஞ்சந்தனம், தேக்குனு பல வகையான மரங்களைக் கலந்து நடவு செஞ்சாரு. அதுல 100 செஞ்சந்தன மரங்க இருக்கு. மரங்க நல்லா வளந்து இருக்கு.

டன் அஞ்சு லட்சம், ஆறு லட்சம்னு கேட்டுக்கிட்டு இருக்காங்க. ஆனா, நாங்க இன்னும் விக்காம வெச்சிருக்கோம். அன்னிக்கு எங்க அப்பா விளையாட்டா வெச்ச மரம் இன்னிக்கு கோடிக்கணக்கான மதிப்புள்ள மரங்களா மாறியிருக்கு!''

என்ன... செஞ்சந்தனத்தை நடவு செய்யக் கிளம்பிவிட்டீர்களா?

                                                    தொடர்புக்கு
                                 கண்ணன், அலைபேசி: 98419-79451

Thursday, December 1, 2011

ஈஷா சா‌ர்‌பி‌ல் பசுமைப் பள்ளி இயக்கம்


கோவை மாவட்ட பள்ளிக் 5கல்வித்துறை ஈஷா அறக்கட்டளையின் பசுமைக்கரங்கள் திட்டத்துடன் இணைந்து பசுமைப்பள்ளி இயக்கம் என்ற பசுமை இயக்கத்தை துவக்கி உ‌ள்ளது. இ‌ந்த இய‌க்கத்தின் துவக்க விழா கட‌ந்த 26ஆ‌ம் தே‌தி வடவள்ளியில் அமைந்துள்ள மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

விழாவில் ஈஷா யோகா மையத்தைச் சார்ந்த அருணகிரி வரவேற்க ஈஷா அறக்கட்டளையின் பசுமைக்கரங்கள் திட்டத்தைச் சேர்ந்த செல்வராஜ் பசுமைப்பள்ளி இயக்கத்தின் திட்ட விளக்கவுரை வழங்கினார். தமிழக வேளாண்துறை அமைச்சர் செ.தாமோதரன் கோவை மாவட்ட பசுமைப் பள்ளி இயக்கத்தை துவக்கி வைத்தார்.

விழாவில் கோவை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் நா.ஆனந்தி, வி.ஷிநீ., ஙி.ணிபீ., கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் தா.மலரவன், மாநகராட்சி 16வது வார்டு கவுன்சிலர் குமுதம் குப்புசாமி, மேற்கு மண்டல தலைவர் சாவித்திரி பார்த்திபன், பெருமால்சாமி தெற்கு மண்டல தலைவர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கின‌ர். ஈஷா யோகா மையம் சார்பில் வள்ளுவன் நன்றியுரை வழங்கினார்.

இந்தத் திட்டத்தின்கீழ் கோவை கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த 300 பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவற்றில் ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்களின் ஈடுபாட்டுடன் பள்ளி வளாகத்திலேயே நாற்றுப்பண்ணை உருவாக்குவது. பின்பு மாணவர்கள் தங்களால் உருவாக்கப்பட்ட மரக்கன்றுகளை தாங்களே பள்ளியிலும் சுற்றுப்புறங்களிலும் நட்டு பராமரித்து வருவது என்று திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் ஈஷா பசுமைக்கரங்கள் திட்டத்தின் சார்பில் இந்தத் திட்டத்திற்கு தேவையான விதைகள், பைகள் தொழில்நுட்ப ஆலோசனைகள், பயிற்சிகள், சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வுகளை மாணவர்களுக்கு தொடர்ந்து வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளியிலும் தேசிய பசுமைப்படை அங்கத்தினர்களாக உள்ள மாணவர்கள் இத்திட்டத்தை முன்னின்று நடத்த உள்ளார்கள். பள்ளி குழந்தைகள் நாற்றுப்பண்ணைகளுக்கான பைகளில் மண் நிரப்புதல், விதையிடுதல், நீர் பாய்ச்சுதல், பாதுகாத்தல் மற்றும் வளர்ந்த மரக்கன்றுகளை இடம் பெயர்த்து நட்டு பராமரித்தல் ஆகிய செயல்களில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

வடவள்ளியில் அமைந்துள்ள மருதமலை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 40 பள்ளிகளை சேர்ந்த 40 பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர்கள், 80 மாணவர்களைக் கொண்ட பசுமைப்பள்ளி இயக்கத்திணருக்கு செயல் விளக்கப் பயிற்சி ம‌ற்று‌ம் பசுமை விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.

மேலும் கோவை மாவட்டத்தின் 300 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் 11 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு தொடர் பயிற்சி வகுப்புகள் நாற்றுப்பண்ணை நிறுவத் தேவையான செயல்முறை வகுப்புகள் மற்றும் காட்சி விளக்கங்கள் அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு பள்ளிக்கும் 2000 விதைகள் மற்றும் பைகளை 'ஈஷா பசுமைக்கரங்கள் திட்டம்' வழங்க உள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் கோவை மாவட்டத்தில், 6 லட்சத்திற்கும் மேலான மரங்கள் நட்டு வளர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விழாவில் பங்கேற்கும் அனைவருக்கும் ஈஷாக் கிரியா எனும் எளிய சக்திமிக்க யோகப்பயிற்சி கற்றுத்தரப்பட உள்ளது.

முன்னதாக கோபிச்செட்டிப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பரீட்சார்த்த முறையில் நாற்றுப்பண்ணை உருவாக்கப்பட்டு மாணவர்கள் ஆசிரியர் மற்றும் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து தமிழக அரசின் ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குமார் முயற்சியின் காரணமாக கடந்த 27.8.2011 முதன்முதலாக ஈரோட்டில் பசுமைப்பள்ளி இயக்கம் உருவாக்கப்பட்டு ஈரோடு மாவட்டத்திலுள்ள 300 பள்ளிகளில் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் உருவாக்கப்பட்டு நட தயாராக உள்ளது.

உலக வெப்பமயமாதலை தவிர்க்கும் பொருட்டு பசுமைப்பரப்பின் அளவை அதிகரிக்கும் விதத்தில் ஈஷா அறக்கட்டளையின் 'பசுமைக்கரங்கள் திட்டம்' பல செயல்களில் ஈடுபட்டுவருகிறது. குறிப்பாக பள்ளிக் கல்லூரி மாணவர்களிடையே சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல செயல்களில் ஈடுபட்டு வருகிறது.

மேலும் விபரங்களுக்கு லட்சுமி நாராயணனை அனுகவு‌ம். செ‌ல் ந‌ம்ப‌ர் - 94433 62863