Friday, June 28, 2013

நாற்றுகளுக்கு நர்சரி கிராமங்கள்

கல்லுக்குடி இருப்பு
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குட்டி கிராமமான இது, திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களின் சுற்றுப்பட்டில் உள்ள பெரும்பாலான விவசாயிகளுக்குப் பரிச்சயமான கிராமம். திரும்பிய பக்கமெல்லாம் தென்படும் நாற்றுப்பண்ணைகள்தான் இக்கிராமத்தை உலகுக்கு அடையாளப்படுத்துகின்றன.
இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை, இயற்கையால் வஞ்சிக்கப்பட்டு, வறுமை தாண்டவமாடிய கிராமம் இது. தண்ணீர் பற்றாக்குறையால், ஊர் முழுக்கவே காட்டுக்கருவை மரங்கள்தான் மண்டிக்கிடந்தன. இன்றோ… நாற்றுப் பண்ணைகளாக மலர்ந்திருக்கின்றன. தனிநபர்கள் மட்டுமல்லாது, சுயஉதவிக் குழுக்களும் இக்கிராமத்தில் நாற்று உற்பத்தியில் ஈடுபட்டிருக்கின்றன.
அரை ஏக்கர் பரப்பு முதல், ஒரு ஏக்கர் பரப்பு வரையிலான சிறியதும் பெரியதுமான நாற்றுப் பண்ணைகள்… சுமார் எழுபது வகையான மலர் நாற்றுகள்… 65 வகையான மரக்கன்றுகள்… என்று இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. தினந்தோறும் ஆயிரக்கணக்கான நாற்றுகள் விற்பனையாகின்றன.
அரை ஏக்கர் நிலத்தில் நாற்றுப் பண்ணை நடத்தி வரும் முத்து, ”கிணத்தை நம்பித்தான் விவசாயம் நடந்துகிட்டிருந்துச்சு. ஒரு கட்டத்துல தண்ணீர் மட்டம் குறைஞ்சுக்கிட்டே போயி, சுத்தமா வறண்டு போச்சு. அதனால, ஊரே விவசாயத்தை விட்டு ஒதுங்கிட்டோம். வனத்துறைக்காரங்க அப்பப்போ காடுகள்ல கூலி வேலைக்குக் கூப்பிடுவாங்க. அதை வெச்சுதான் பிழைப்பை ஓட்டிக்கிட்டுருந்தோம்.
”நானும் என்னோட வீட்டுக்காரரும் சேர்ந்து அரை ஏக்கர்ல நாத்துப் பண்ணை போட்டிருக்கோம். குரோட்டன்ஸ் செடிகளையும், பழமரக்கன்னுகளையும் உற்பத்தி செய்றோம். குடும்பமே சேர்ந்து கடுமையா உழைச்சா… அதுக்கான பலன் கண்டிப்பா கிடைக்கும்” என்று அனுபவ வார்த்தைகளில் சொன்னார் உடைச்சி.
அவரைத் தொடர்ந்து பேசிய கருப்பையா, ”தரமானக் கன்னுகளை உற்பத்தி பண்றதாலதான் ரொம்ப தூரத்துல இருந்துகூட தேடி வந்து வாங்கிட்டுப் போறாங்க. வெளி மாநிலங்கள்ல இருந்தெல்லாம்கூட வர்றாங்க. திறந்த வெளியில இயற்கைச் சூழல்லயே தொழுவுரத்தை மட்டும் பயன்படுத்தி கன்னுகளை உற்பத்தி பண்றதால, எந்த இடத்துல கொண்டு போய் நட்டு வெச்சாலும், தாக்குப் பிடிச்சு வளந்துடும். பசுமைக் குடிலுக்குள்ள ரசாயன உரம் பயன்படுத்தி உற்பத்தி பண்ற கன்னுகளுக்கு உத்தரவாதம் கொடுக்க முடியாது.
மூன்றரை இஞ்ச் அகலம், 5 இஞ்ச் உயரம் இருக்குற பாக்கெட்ல வளர்ந்திருக்கற மூணு மாச வயசு கன்றுகள, குறைஞ்ச விலைக்குக் கொடுக்குறோம். மத்த பண்ணைகள்ல பெரிய பை நிறைய மண் போட்டு அதிக விலைக்கு விப்பாங்க. அதனால எந்தப் பிரயோஜனமும் இல்ல. இந்த மாதிரி கண்துடைப்பு வேலையெல்லாம் நாங்க செய்யாததாலதான் குறைஞ்ச விலைக்கு விக்க முடியுது.
எங்க ஊர்ல அதிகபட்சம் 5 ரூபாய் வரைக்கும்தான் கன்னுகளோட விலை இருக்கும். பெரும்பாலும், விதை மூலமாதான் உற்பத்தி செய்றோம். இங்க உள்ள மரங்கள்ல இருந்தே விதை எடுத்துக்குவோம். தேவைப்பட்டா வெளியிலயும் வாங்கிக்குவோம். மேடான பகுதியில இருந்து மண்ணை வெட்டி, ஒரு டன் 500 ரூபாய்னு விக்கிறாங்க. அதைத்தான் நாத்து உற்பத்திக்குப் பயன்படுத்துறோம். ஊர்ல மாடுகள் இல்லாததால தொழுவுரத்தை வெளியில இருந்து வாங்குறோம். மண், பாக்கெட் செலவு, மண் நிரப்ப, நடவு செய்யனு எல்லா செலவும் சேர்த்து, ஒரு கன்னு உற்பத்தி செய்ய, 2 ரூபாய் செலவாகுது. விக்கும்போது கன்னுக்கு ஒரு ரூபாய்ல இருந்து மூணு ரூபாய் வரை லாபம் கிடைக்கும். ஆனா, அதிக எண்ணிக்கையில விற்பனையாகறதால போதுமான அளவுக்கு வருமானம் கிடைச்சுடுது” என்று சந்தோஷமாகச் சொன்னவர், நாற்று உற்பத்தி செய்யும் முறைகளைப் பற்றியும் தெளிவாக எடுத்துச் சொன்னார்.

கன்று உற்பத்தி இப்படித்தான்!

கன்று உற்பத்திக்கு செம்மண் சிறப்பானது. நான்கு சால் புழுதி உழவு ஓட்டி, 7 அடி நீளமும் இரண்டரை அடி அகலமும் கொண்ட பார் அமைக்க வேண்டும். இதில் பரவலாக தேவையான விதைகளைத் தெளித்து அவற்றை மூடுமாறு தொழுவுரத்தைத் தூவ வேண்டும். காய்ச்சலும் பாய்ச்சலுமாக தினமும் தண்ணீர் விட வேண்டும்.
செம்பருத்தி, அரளி, மல்லிகை, முல்லை போன்ற மலர்கள் மற்றும் அலங்காரச் செடிகளுக்கு (குரோட்டன்ஸ்) பதியன் முறையில் கன்றுகளை உற்பத்தி செய்ய வேண்டும். நிலத்தைத் தயார் செய்து பாத்திகளை அமைத்து 4 முதல் 5 அங்குல நீளமுள்ள சிறியக் கிளைகளை, ஓர் அங்குல இடைவெளியில் நடவு செய்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
விதை நடவு செய்தாலும், பதியன் முறை என்றாலும், 15-ம் நாள் முளைப்பு வரும். 25-ம் நாள் கன்றுகளை பாலிதீன் பாக்கெட்டுகளுக்கு மாற்ற வேண்டும். மூன்றரை அங்குல அகலம், 5 அங்குல உயரம் கொண்ட மெல்லிய பாலீதீன் பாக்கெட்டில் (நாற்று உற்பத்திக்காகவே பிரத்யேகமாக விற்கப்படுகிறது), முக்கால் பங்கு செம்மண்ணும், கால் பங்கு தொழுவுரமும் நிரப்பி, இதில் வேர் முழுமையாக மறையும் அளவுக்குக் கன்றை ஊன்றி விட வேண்டும். தினமும் காலை தண்ணீர் தெளித்து வர வேண்டும். மூன்று மாத வயதில் கன்றுகளை விற்பனை செய்யலாம்.

தொடர்புக்கு
கருப்பையா, செல்போன் : 91597-20827

காப்புரிமை – பசுமை விகடன்
PASUMAI VIKATAN

Sunday, June 23, 2013

மலைக்கவைக்கும் மலைவேம்பு

மலைவேம்பு வேப்பமரத்தையொத்த இலையுதிர்க்கும் ஆயில் குடும்ப மரவகையை சேர்ந்த மிக வேகமாக வளரும் விலை மதிப்பு மிக்க பன்முகப் பலன் தரும் அரியமரவகைகளில் ஒன்று இதன் வளர்ச்சி மூங்கில், தேக்கு போன்ற மரங்களை ஒப்பிடும்போது மிக வேகமாக இருக்கிறது.  ஒட்டு முறையில் உருவாக்கப்படும் இம்மரங்கள் ஆரம்ப கட்டங்களில் செடியை காப்பாற்றும் அளவுக்கு தண்ணீர் இருந்தால் போதுமானது. பின் அதிக நீர் இல்லாமல், வறட்சியை தாங்கும் தன்மை படைத்தவை. அதனால்தான் விவசாயிகளிடையே வேகமாக பரவியது என்று கூட சொல்லலாம்.

இம்மரங்கள் பிளைவுட், தீக்குச்சி, காகிதம், கனரக வாகனங்கள் கட்டமைக்கவும் இம்மரம் பயன்படுகிறது. இம்மரம் எடை குறைவாகவும், கடினம் அதிகமாகவும் இருக்கும். இதனால் பல இடங்களில் இம்மரத்திற்கு கடும் தேவை ஏற்பட்டுள்ளது. பிளைவுட்கம்பெனிகள் அறுவடைக்கு தயார் என்றால் அவர்களே வந்து மரங்களை வெட்டி எடுத்து செல்கிறார்கள். இம்மரங்களை கனரக வாகனங்களின் உபயோகிக்கும் பொழுது, வண்டியின் எடை வழக்கமானதை விட மிக குறைந்து காணப்படுகிறது. இதனால் நெடு தூரம் செல்லும் வாகனங்களில் ஆயிரக்கணக்கில் எரிபொருள் செலவு மிச்சப்படுத்தப்படுகிறது.

நடவு செய்யும் பொழுது ஒவ்வொரு செடிக்கும் 12 அடி இடைவெளி விட்டோம். அப்படி வைக்கும் பொழுது ஒரு ஏக்கருக்கு சராசரியாக 300 மரங்கள் தேவைப்படுகிறது. ஆரம்ப  கட்டங்களில் சொட்டு நீர் மூலமாகவோ, நீர் பாய்ச்சலின் மூலமாகவோ செடியை பராமரிப்பது நல்லது. நம் மக்களிடையே உள்ள கெட்ட பழக்கங்களில் ஒன்று, இது போன்ற மரங்கள் நடவு செய்தால், பராமரிப்பு தேவை இல்லை என்று எண்ணி கண்டுகொள்ளாமலே விட்டுவிடுவது. அதனால் மரங்கள் பராமரிப்பின்றி வளரும் நிலைக்கு தள்ளப்படுகிறது. பராமரிப்பு தேவை இல்லாமலும் இம்மரம் வளரும், சரிதான். ஆனால், சிறு பராமரிப்பு இருக்கும் பட்சத்தில் மரங்கள் நன்றாகவும், செழிப்பாகவும் வளரும். அது விரைவில் அறுவடை செய்யவும், நல்ல மகசூல் பார்க்கவும் உதவும். ஒரு விவசாயி மஞ்சள் சாகுபடிக்கும், நெல் சாகுபடிக்கும் செய்யும் பராமரிப்பை ஒப்பிடும்போது, இது ஒன்றுமே இல்லை எனலாம். ஆனால், எதுவுமே செய்ய தேவை இல்லை என்று அர்த்தம் இல்லை.

மரம் 100 சென்டிமீட்டர் சுற்றளவையும், கிளை இல்லாமல் குறைந்தது 5 மீட்டர் உயரத்தையும் நெருங்கினால் அறுவடை செய்யலாம். இன்றைய தினத்தில் இப்படி இருக்கும் ஒரு மரம் ரூ.7000 முதல் ரூ. 8000 வரை மதிப்பிடப்படுகிறது. இம்மரம் 7 அல்லது 8 வருடங்களில் இருந்தே அறுவடை செய்யலாம் என கூறப்படுகிறது. ஆனால் என் அனுபவத்தில் தொடர்ந்து நீர் பாய்ச்சல் இருந்தால் தான் இக்குறுகிய காலத்தில் அறுவடைக்கு தயார் ஆகிறது. இல்லையேல், 8 - 10 வருடங்கள் கூட காத்திருக்க நேரிடும். இன்றைய சந்தை நிலவரப்படி ஒரு ஏக்கருக்கு 300 மரங்களுக்கு, ரூ 22 லட்சம் மகசூல் பார்க்கலாம். ஒரு வேலை மரம் தேவையான அளவு வளரும் முன்பே விற்க வேண்டும் என்றால், மொத்த மரமும் விறகுக்கு டன் கணக்கில் தான் எடுத்துக் கொள்ளப்படுகிறது. அப்படி எடுக்கும் பட்சத்தில் ஏக்கருக்கு 1 - 2 லட்சம் கூட தேராது. அதனால் மரம் வளரும் காலம் வரை கண்டிப்பாக காத்திருக்கும் நிலைமை ஏற்படும்.

மருத்துவ  பயன்கள்
  • டெங்கு காய்சலை குணப்படுத்துகிறது.
  • பெண்களுக்கு கருப்பையில் நீர்க்கட்டிகள் உருவாகும் பிரச்சினைகளுக்கும், கருமுட்டை வளர்ச்சி குறைந்த பிரச்சினைகளுக்கும் மலைவேம்புச் சாறை மாதவிலக்கான முதல் மூன்று நாட்கள் வெறும் வயிற்றில் குடிக்க, நீர்க்கட்டி வளர்ச்சி குறையும். கருமுட்டை வளர்ச்சி அதிகரிக்கும். குழந்தை உருவாகாத சிக்கலுக்கும் இது பலனளிக்கும். சாறு அருந்தும் நாட்களில் எண்ணெய், புளி சேர்க்காமலிருக்கவும்.

Saturday, June 22, 2013

அதிகவரட்சியா, விவசாயம் செய்யமுடியவிள்லையா கவலைவேண்டாம் கைகொடுக்கும் முந்திரி சாகுபடி


நான் கல்லூரியில் படித்த நேரம் தினமும் காலை வேலையில் தோட்டத்திற்கு சென்றுவந்தபோளுது தரிசாக கிடந்தநிலத்தில்  விளையாடாக வைத்து பராமரித்த முந்திரிமரங்கள் இன்று பலன் தருகின்றன, முந்திரிசாகுபடிக்கு பெரிதாக பராமரிப்போ நீர்மேலன்மையோ தேவையில்லை வரட்சியைதான்கிவளரும், மரம் வைத்து 3 ஆண்டுகளில் வருமானம், கன்று விதைகள் மூலமாகவோ அல்லது ஓட்டுகன்றோ பயன்படுத்தலாம்...
 
அரசாங்கமும் முந்திரி சாகுபடிக்கு உதவுகிறது.... புதுக்கோட்டை வம்பன் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் முந்திரி சாகுபடி பயிற்சி மற்றும் ஜூஸ், சிரப் போன்ற மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் இலவச பயிற்சி ஆண்டு தோறும் வழங்கபடுகிறது. மேலும் விபரங்களுக்கு பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண்மை அறிவியல் நிலையம், வம்பன் 622 303 என்ற முகவரியிலோ, 0432 2290321 தொலைபேசி எண்ணிலோ, 9677485513 கைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.