Sunday, June 23, 2013

மலைக்கவைக்கும் மலைவேம்பு

மலைவேம்பு வேப்பமரத்தையொத்த இலையுதிர்க்கும் ஆயில் குடும்ப மரவகையை சேர்ந்த மிக வேகமாக வளரும் விலை மதிப்பு மிக்க பன்முகப் பலன் தரும் அரியமரவகைகளில் ஒன்று இதன் வளர்ச்சி மூங்கில், தேக்கு போன்ற மரங்களை ஒப்பிடும்போது மிக வேகமாக இருக்கிறது.  ஒட்டு முறையில் உருவாக்கப்படும் இம்மரங்கள் ஆரம்ப கட்டங்களில் செடியை காப்பாற்றும் அளவுக்கு தண்ணீர் இருந்தால் போதுமானது. பின் அதிக நீர் இல்லாமல், வறட்சியை தாங்கும் தன்மை படைத்தவை. அதனால்தான் விவசாயிகளிடையே வேகமாக பரவியது என்று கூட சொல்லலாம்.

இம்மரங்கள் பிளைவுட், தீக்குச்சி, காகிதம், கனரக வாகனங்கள் கட்டமைக்கவும் இம்மரம் பயன்படுகிறது. இம்மரம் எடை குறைவாகவும், கடினம் அதிகமாகவும் இருக்கும். இதனால் பல இடங்களில் இம்மரத்திற்கு கடும் தேவை ஏற்பட்டுள்ளது. பிளைவுட்கம்பெனிகள் அறுவடைக்கு தயார் என்றால் அவர்களே வந்து மரங்களை வெட்டி எடுத்து செல்கிறார்கள். இம்மரங்களை கனரக வாகனங்களின் உபயோகிக்கும் பொழுது, வண்டியின் எடை வழக்கமானதை விட மிக குறைந்து காணப்படுகிறது. இதனால் நெடு தூரம் செல்லும் வாகனங்களில் ஆயிரக்கணக்கில் எரிபொருள் செலவு மிச்சப்படுத்தப்படுகிறது.

நடவு செய்யும் பொழுது ஒவ்வொரு செடிக்கும் 12 அடி இடைவெளி விட்டோம். அப்படி வைக்கும் பொழுது ஒரு ஏக்கருக்கு சராசரியாக 300 மரங்கள் தேவைப்படுகிறது. ஆரம்ப  கட்டங்களில் சொட்டு நீர் மூலமாகவோ, நீர் பாய்ச்சலின் மூலமாகவோ செடியை பராமரிப்பது நல்லது. நம் மக்களிடையே உள்ள கெட்ட பழக்கங்களில் ஒன்று, இது போன்ற மரங்கள் நடவு செய்தால், பராமரிப்பு தேவை இல்லை என்று எண்ணி கண்டுகொள்ளாமலே விட்டுவிடுவது. அதனால் மரங்கள் பராமரிப்பின்றி வளரும் நிலைக்கு தள்ளப்படுகிறது. பராமரிப்பு தேவை இல்லாமலும் இம்மரம் வளரும், சரிதான். ஆனால், சிறு பராமரிப்பு இருக்கும் பட்சத்தில் மரங்கள் நன்றாகவும், செழிப்பாகவும் வளரும். அது விரைவில் அறுவடை செய்யவும், நல்ல மகசூல் பார்க்கவும் உதவும். ஒரு விவசாயி மஞ்சள் சாகுபடிக்கும், நெல் சாகுபடிக்கும் செய்யும் பராமரிப்பை ஒப்பிடும்போது, இது ஒன்றுமே இல்லை எனலாம். ஆனால், எதுவுமே செய்ய தேவை இல்லை என்று அர்த்தம் இல்லை.

மரம் 100 சென்டிமீட்டர் சுற்றளவையும், கிளை இல்லாமல் குறைந்தது 5 மீட்டர் உயரத்தையும் நெருங்கினால் அறுவடை செய்யலாம். இன்றைய தினத்தில் இப்படி இருக்கும் ஒரு மரம் ரூ.7000 முதல் ரூ. 8000 வரை மதிப்பிடப்படுகிறது. இம்மரம் 7 அல்லது 8 வருடங்களில் இருந்தே அறுவடை செய்யலாம் என கூறப்படுகிறது. ஆனால் என் அனுபவத்தில் தொடர்ந்து நீர் பாய்ச்சல் இருந்தால் தான் இக்குறுகிய காலத்தில் அறுவடைக்கு தயார் ஆகிறது. இல்லையேல், 8 - 10 வருடங்கள் கூட காத்திருக்க நேரிடும். இன்றைய சந்தை நிலவரப்படி ஒரு ஏக்கருக்கு 300 மரங்களுக்கு, ரூ 22 லட்சம் மகசூல் பார்க்கலாம். ஒரு வேலை மரம் தேவையான அளவு வளரும் முன்பே விற்க வேண்டும் என்றால், மொத்த மரமும் விறகுக்கு டன் கணக்கில் தான் எடுத்துக் கொள்ளப்படுகிறது. அப்படி எடுக்கும் பட்சத்தில் ஏக்கருக்கு 1 - 2 லட்சம் கூட தேராது. அதனால் மரம் வளரும் காலம் வரை கண்டிப்பாக காத்திருக்கும் நிலைமை ஏற்படும்.

மருத்துவ  பயன்கள்
  • டெங்கு காய்சலை குணப்படுத்துகிறது.
  • பெண்களுக்கு கருப்பையில் நீர்க்கட்டிகள் உருவாகும் பிரச்சினைகளுக்கும், கருமுட்டை வளர்ச்சி குறைந்த பிரச்சினைகளுக்கும் மலைவேம்புச் சாறை மாதவிலக்கான முதல் மூன்று நாட்கள் வெறும் வயிற்றில் குடிக்க, நீர்க்கட்டி வளர்ச்சி குறையும். கருமுட்டை வளர்ச்சி அதிகரிக்கும். குழந்தை உருவாகாத சிக்கலுக்கும் இது பலனளிக்கும். சாறு அருந்தும் நாட்களில் எண்ணெய், புளி சேர்க்காமலிருக்கவும்.

No comments: