Thursday, November 10, 2011

மறைக்கப்படும் மானியத் திட்டங்கள்!


தோட்டக்கலைத்துறை மூலம் வழங்கப்படும் மானியத் திட்டங்கள் குறித்த விவரங்கள், பயன்கள், குறு மற்றும் சிறு விவசாயிகளுக்கு தெரியாமல் மறைக்கப்படுகிறது.
வேளாண்மை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் தனித்துறையாக தோட்டக்கலைத்துறை செயல்பட்டு வருகிறது. விவசாயத்தில் பணப்பயிர் சாகுபடியை ஊக்குவிப்பதற்காக வேளாண்மைத் துறையில் இருந்து பிரித்து தோட்டக்கலைத்துறை ஏற்படுத்தப்பட்டது.
மா, பலா, கொய்யா, சப்போட்டா உள்ளிட்ட பழ சாகுபடி, ரோஜா, மல்லிகை, சம்பங்கி உள்ளிட்ட மலர் சாகுபடி, முருங்கை, தக்காளி, புளி உள்ளிட்ட காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் தோட்டக்கலைத்துறை மூலம் அதிகபட்சமாக 50 சதம் வரை மானியம் வழங்கப்படுகிறது.
பழ வகை மரங்கள் சாகுபடியில் பெரு விவசாயிகள் மட்டுமே ஈடுபடுகின்றனர்.
இதனால் தோட்டக்கலைத் துறையின் மூலம் உள்ள மானியத் திட்டங்கள் குறித்து நன்கு அறிந்துகொண்டுள்ளனர். குறு மற்றும் சிறு விவசாயிகளில் பலர் மல்லிகை, சம்பங்கி உள்ளிட்ட மலர் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் இவ் விவசாயிகளுக்கு இந்த மானியத் திட்டங்கள் குறித்த விவரங்கள் தெரிவதில்லை.
இதனால் ஒவ்வொரு ஆண்டும் தோட்டக்கலைத்துறைக்கு ஒதுக்கப்படும் நிதியில் 80 சத தொகை பெரு விவசாயிகளையே சென்றடைகிறது.
அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மருத்துவர்கள், தொழிலதிபர்கள் ஆகியோரின் பண்ணை வீட்டுத் தோட்டங்களில் ஒவ்வொரு ஆண்டும் பழ மர சாகுபடி நிலப்பரப்பை அதிகரித்துக்கொள்ளவே இத் திட்டம் உதவுகிறது.
மாவட்டத்தில் எப்போதாவது ஒரு முறை, எங்காவது சில ஒரு இடங்களில் மட்டுமே நடைபெறும் சிறப்பு மனுநீதி நாள் முகாம்களில் 4 மணி நேரம் அரங்கு அமைத்து திட்டங்கள் குறித்து அங்குவரும் சில விவசாயிகளிடம் மட்டும் தெரிவிப்பதனால் மானியத் திட்டங்கள் குறித்த விவரங்களை அனைத்து விவசாயிகளும் அறிந்துகொள்ள முடியாது.
மல்லிகை, சம்பங்கி போன்ற மலர் சாகுபடியில் குறு மற்றும் சிறு விவசாயிகள் பெருமளவில் ஈடுபட்டுள்ளனர். பொருளாதார நெருக்கடியில் சிக்கிப் பரிதவித்துவரும் சிறு, குறு விவசாயிகள் உணவுக்கு ரேசன் அரிசி வாங்கிகொண்டு, தங்களது நிலங்களில் பணப் பயிர்களை சாகுபடி செய்துவருகின்றனர்.
இப்பயிர் சாகுபடிக்கு அரசு மானியம் வழங்குகிறது என்ற விவரம் பெரும்பாலான விவசாயிகளுக்குத் தெரிவதில்லை.
அரசின் மானியத் திட்டங்கள் சென்றடைவதன் மூலம் இவ்விவசாயிகளின் பொருளாதார நிலை சிறிதளவேனும் மேம்படும்.
இதற்கு வேளாண் விரிவாக்க மையங்கள் போன்று ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் தோட்டக்கலைத் துறைக்கும் தனி அலுவலகத்தை ஏற்படுத்த வேண்டும்.
இது இப்போதைக்கு சாத்தியமில்லை எனில் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் தோட்டக்கலைத் துறையின் சேவை மையங்களை ஏற்படுத்த வேண்டும்.
தமிழக அரசு பொறுப்பேற்றவுடன் அறிவித்த விவசாய கடன் தள்ளுபடி திட்டத்தால் குறு மற்றும் சிறு விவசாயிகளுக்கு பயனில்லை என்ற விவாதம் கடந்த 4 ஆண்டுகளாக தொடர்ந்துகொண்டிருக்கிறது.
இதேபோல் பெருமளவில் மானியத் திட்டங்களை கொண்டுள்ள தோட்டக்கலைத் துறையின் திட்டங்களும் குறு மற்றும் சிறு விவசாயிகளுக்கு எந்த பயனையும் அளிக்கவில்லை என்ற விவாதமும் விவசாயிகளால் முன்வைக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.
                                                                                                                            தினமணி தகவல்

No comments: