Monday, September 26, 2011

கை கொடுக்கும் காடுகள்!


காடுகள் மனிதகுலத்துக்குப் பெரும் நன்மை பயக்கின்றன. அவை நமக்கு மரம், பிசின்கள் போன்ற பல பொருட் களைத் தருகின்றன. காட்டு மரங்களில் இருந்தே நாம் காகிதங் களையும், செயற்கைப் பட்டுகளையும் உருவாக்குகிறோம்.
ஒரு காலகட்டத்தில் மனிதன் காடுகளை பெருமளவில் நாசப்படுத்தியதோடு, அழித்தும் வந்தான். காடுகள் அவ்வாறு அழிக்கப்பட்டதால் மரங்களும், பிற பயனுக்குரிய பொருட்களும் கிடைக்காமல் போயின. அதுமட்டுமல்ல, தட்பவெப்பநிலை மாறியதோடு, காடுகள் மறைந்த இடங்களில் எல்லாம் பாலைவனங்கள் தோன்றலாயின. அதன் பின்பே காடுகளைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு பரவலாயிற்று.
காடுகள், நீர் வளத்தைப் பாதுகாக்கின்றன. மலைகளில் உள்ள அடர்ந்த காடுகளில் மழை பெய்யும்போது, மரங்களின் இலை களால் அதன் வேகம் மட்டுப்படுத்தப்பட்டு நீர் விழுகிறது. எனவே அங்குள்ள வளமான மண் கரைந்து போவதில்லை. அப்படியும் அரித்துச் செல்லும் மண்ணை மலைச் சரிவில் உள்ள மர வேர்கள் தடுத்து விடுகின்றன.
மலைகளில் மரங்களே இல்லாதிருந்தால் மழை வேகமாகப் பெய்து, அங்குள்ள வளமான மண்ணை அடித்துக்கொண்டு போய்விடுகிறது. குளிர்காலங்களில் மலையில் பெய்து உறையும் பனி, வெறுந்தரையில் விரைவில் உருகிவிடும். ஆனால் காடுகளில் பெய்யும் பனி மெதுவாகவே உருகும். மேலும் அந்த நீர், நிலங்களுக்கும், பண்ணைகளுக்கும், ஊற்றுகளுக்கும், பூமியின் அடியில் உள்ள ஓடைகளுக்கும் மெதுவாகச் சென்று பரவுகிறது.
வேகமான வெள்ளப் பெருக்கு, மரங்களை வீழ்த்தி விடுகிறது. வெற்றிடத்தில் விழும் மழை நீரும், உருகும் பனி நீரும் மெதுவாகச் செல்வதற்குப் பதிலாக துரித கதியில் ஓடி மறைந்து விடுகிறது.
வண்டல் மண்ணை வாய்க்கால், ஆறுகள், கடல் ஆகியவற்றுக்கு மழை நீர் இழுத்துச் செல்வதை காடுகள் தடுக்கின்றன. மரங்களின் வேர்களும், கிளைகளும், வண்டல் மண் அரித்துச் செல்லப்படாமல் தடுத்து விடுகின்றன.
காடுகள் அழிக்கப்பட்டு மொட்டையாகும் மலைகளில் இருந்து அடித்துச் செல்லப்படும் வண்டல், துறைமுகங்கள், நதிக் கால்வாய்கள் ஆகியவற்றில் படிகிறது. அந்த வண்டல் மண்ணை அகற்றி, ஆழப்படுத்த உலகெங்கும் பல்லாயிரம் கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. அதே நேரம் வண்டல் அரிக்கப்படும் நிலம் தனது வளத்தை இழப்பதால், விவசாயம் கேள்விக்குறியாகிறது.
மனிதன் தனது சுயநலத்தால் எப்படித் தனக்குத் தானே தீங்கு செய்துகொள்கிறான் என்பது இதிலிருந்து புரியும்.

No comments: