Monday, September 26, 2011

இலவச மரக்கன்று வழங்கும் வனவியல் மையம்

சொந்த நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு இலவசமாக மரக்கன்றுகள், அதை வைத்து பராமரிக்க முறையான பயிற்சி மற்றும் கன்றுக்கு ஊக்கத்தொகை என பல வகைகளில் விவசாயிகளின் வாழ்க்கையை வனவியல் விரிவாக்க மையம் வளமாக்கி வருகிறது.
  • தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அரசு சார்பில் வனவியல் விரிவாக்க மையம் இயங்கி வருகிறது. திருவள்ளூர்- ஊத்துக்கோட்டை சாலையில் பூண்டியில் திருவள்ளூர் மாவட்ட வனவியல் விரிவாக்க மையம் 3.10 ஹெக்டேர் பரப்பளவில் இயங்கி வருகிறது. இங்கு தேக்கு, சவுக்கு, குமிழ், மகானி, வேங்கை, செம்மரம், மூங்கில், சவுக்கு உள்ளிட்ட மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு விவசாயிகளுக்கு இலவசமாக வழங்குகிறது.
  • குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் நிலம் சொந்தமாக வைத்துள்ள விவசாயிகள் நிலத்துக்கு உரிய ஆவணங்களும், ரேஷன்கார்டு ஆகியவற்றுடன் வனவிரிவாக்க மையத்தை அணுகினால் வனவிரிவாக்க மைய அலுவலர்கள் விவசாயிகளின் இடத்துக்கே நேரில் சென்று ஆய்வு செய்து அந்த மண்ணின் வளத்துக்கேற்றவாறு மரக்கன்றுகளை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்குவர். ஒரு ஏக்கருக்கு 2000 கன்றுகள் வரை வழங்கி அதை முறையாக பராமரிக்கும் பயிற்சி, மண் புழு உரம் மற்றும் தேவையான வழிமுறைகளையும் விவசாயிகளுக்கு எடுத்து கூறி வளம் பெறச் செய்கின்றனர்.
ஊக்கத்தொகை:

தங்களது வயலில் பயிரிட்டிருந்தாலும் அதன் வரப்பு ஓரங்களில் மரக்கன்றுகளை வரிசையாக நட்டு அதன் மூலம் விவசாயிகள் கூடுதல் வளம் பெற வழிகாட்டுகின்றனர். நாளடைவில் வனவியல் விரிவாக்க மைய அலுவலர்களின் வழிகாட்டுதலை முறையாக பின்பற்றி மரக்கன்றுகளை முறையாக பராமரிக்கும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையாக ஒரு கன்றுக்கு ரூ.5 வழங்குகின்றனர்.
தேக்கு 20 ஆண்டுகள், மகானி 20 ஆண்டுகள், வேங்கை 20 ஆண்டுகள், குமிழ் 7 ஆண்டுகள், மூங்கில் 3 ஆண்டுகள், சவுக்கு 4 ஆண்டுகள் என பருவத்துக்கு ஏற்றவாறு மரங்கள் விவசாயிகளுக்கு பெருத்த லாபத்தை ஏற்படுத்தி தருகின்றன.


மரக்கன்று விநியோகம்:

இது குறித்து பூண்டியில் உள்ள வனவியல் விரிவாக்க மைய அலுவலர் சிவலிங்கம் கூறும்போது, “3.10 ஏக்கரில் இங்கு தேக்கு, வேங்கை, குமிழ், மகானி உள்ளிட்ட பல்வேறு மரக்கன்றுகளை வளர்த்து அதை உரிய பருவத்தில், நாடி வரும் விவசாயிகளுக்கு வழங்கி வருகிறோம். கடந்த 2009-ம் ஆண்டு இம்மாவட்டத்தில் 60 ஆயிரம் மரக்கன்றுகளை விவசாயிகளுக்கு வழங்கியுள்ளோம்.

வனவியல் விரிவாக்க மையம் குறித்த விழிப்புணர்வு விவசாயிகளுக்கு முழு அளவில் ஏற்படாததால் தற்போது கிராமப்புறங்களில் சென்று பயிற்சி கூட்டங்கள் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். 2011-ம் ஆண்டில் 2 லட்சம் மரக்கன்றுகளை இம்மாவட்ட விவசாயிகளுக்கு வழங்க இலக்கு நிர்ணயித்து அதற்காக முயற்சி மேற்கொண்டு வருகிறோம்’ என்றார். விவசாயிகள் மேலும் விவரங்களுக்கு 9994347739 என்ற எண்ணில் வன விரிவாக்க மைய அலுவலர் சிவலிங்கத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

                                                                                     தினமணி தகவல்

No comments: